தலித்துகள் தொழில் தொடங்க "தலித் வர்த்தக உதவி நிதி டில்லியில் துவக்கம்| Dalits have started in business, "Dalit Business Assistance Fund beginning in Delhi | Dinamalar

பொது செய்தி

இந்தியா

தலித்துகள் தொழில் தொடங்க "தலித் வர்த்தக உதவி நிதி' டில்லியில் துவக்கம்

Added : ஏப் 14, 2012
Share
தலித்துகள் புதிதாகத் தொழில் தொடங்கவும், ஏற்கனவே செய்யும் தொழிலை மேம்படுத்தவும் இதுவரை அரசையே நம்பி இருந்தனர். இதனால், அவர்கள் தொழில் தொடங்குவதில் பெரும் சிக்கல்கள் இருந்தன. தற்போது தலித்துகள் தொழில் தொடங்குவதற்கு பண உதவி செய்வதற்கென்றே, அரசு ஆதரவுடன் தலித் தொழில் மற்றும் வர்த்தக கூட்டமைப்பானது, புதிதாக "தலித் வர்த்தக உதவி நிதி'யை
தலித்துகள் தொழில் தொடங்க "தலித் வர்த்தக உதவி நிதி' டில்லியில் துவக்கம்

தலித்துகள் புதிதாகத் தொழில் தொடங்கவும், ஏற்கனவே செய்யும் தொழிலை மேம்படுத்தவும் இதுவரை அரசையே நம்பி இருந்தனர். இதனால், அவர்கள் தொழில் தொடங்குவதில் பெரும் சிக்கல்கள் இருந்தன. தற்போது தலித்துகள் தொழில் தொடங்குவதற்கு பண உதவி செய்வதற்கென்றே, அரசு ஆதரவுடன் தலித் தொழில் மற்றும் வர்த்தக கூட்டமைப்பானது, புதிதாக "தலித் வர்த்தக உதவி நிதி'யை உருவாக்கியுள்ளது.


தலித்துகளுக்கு தொழில் ரீதியாக உதவி செய்ய புதிய திட்டம் துவங்குவது தொடர்பாக, 2011ம் ஆண்டு ஜனவரியில் திட்டக் குழு துணைத் தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியாவை, தலித்துகளின் தொழில் மற்றும் வர்த்தக கூட்டமைப்பின் தலைவர் மிலிந்காம்ளியின் தலைமையில் 35 தலித் தொழில் அதிபர்கள், சந்தித்துப் பேசினர்.


அப்போது அலுவாலியா அவர்களிடம் கூறியதாவது:தொழில் துவங்க நிதி:தலித் இளைஞர்கள் புதிதாகத் தொழில் தொடங்கவும், ஏற்கனவே செய்கிற தொழிலை மேம்படுத்தவும், புதிதாக தலித் வர்த்தக உதவி நிதி தொடங்க வேண்டும். இந்த நிதி திட்டத்திற்கு தலித் வர்த்தக கூட்டமைப்பு ஒரு ரூபாய் வழங்கினால், அரசாங்கம் சார்பில் மூன்று ரூபாய் வழங்கப்படும். இந்த நிதியை வைத்து புதிதாகத் தொழில் தொடங்குபவர்களுக்கு கடன் வழங்கலாம்.


ஏற்கனவே, தொழில் செய்வோரின் நிறுவனங்களில் உள்ள பங்குகளில், அரசாங்கம் சார்பில் வழங்கப்படும் நிதியை முதலீடு செய்யலாம். தற்போது தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்காக அரசாங்கம் பல்வேறு திட்டங்களை செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. இந்த புதிய திட்டம் மூலம் தலித்துகள் தொழில் தொடங்க புதிய சூழ்நிலை ஏற்படும்.இவ்வாறு அலுவாலியா கூறினார்.


ரூ.100 கோடி திரட்ட முடிவு:அதன்படி, இந்த நிதி திட்டத்திற்கு முன்னோடியாக 5 கோடி ரூபாயை தலித் தொழில் மற்றும் வர்த்தக கூட்டமைப்பு ஒதுக்கியுள்ளது. இதனையடுத்து, 100 கோடி ரூபாயை பல்வேறு தரப்பிலிருந்து திரட்டவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் 100 கோடி ரூபாய் ஒதுக்கினால் அரசாங்கம் சார்பில், இந்த திட்டத்திற்கு 300 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்.


இந்நிலையில், தலித்துகள் தொழில் தொடங்க உதவி செய்யும் வகையில், "தலித் வர்த்தக உதவி நிதி' தொடங்குவதற்கான அறிவிப்பை, டில்லியில் பார்லிமென்ட் சாலையில், நேற்று நடந்த விழாவில் தலித்துகளின் தொழில் மற்றும் வர்த்தக கூட்டமைப்பு வெளியிட்டது. டில்லி பார்லிமென்ட் சாலையில், நேற்று அம்பேத்கரின் 121வது பிறந்த நாளை முன்னிட்டு, 121 கிலோ கேக் வெட்டப்பட்டது.


மக்கள் பெருமளவில் கலந்து கொண்ட அந்த நிகழ்ச்சி, திருவிழாக் கோலமாக இருந்தது. திட்டத்திற்கு அரசின் ஆதரவை தெரிவிப்பதற்காக, மத்திய சமூக நீதித்துறை அமைச்சர் முகுல் வாஸ்னிக் பங்கேற்றார். விழாவில் கலந்து கொண்ட அவர் கூறுகையில், ""தலித்துகள் புதிய தொழில் தொடங்குவதற்கு உதவி செய்வதற்காக இந்த வர்த்தக உதவித் திட்டம் தொடங்கியுள்ளனர். திட்டம் தொடர்பாக இவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசாங்கம் செய்யும்,'' என்றார். நமது டில்லி நிருபர் -


Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X