பொது செய்தி

தமிழ்நாடு

இந்திய பைசாவிற்கு குறியீடு: உதயகுமாரின் அடுத்த தயாரிப்பு

Updated : ஜூலை 25, 2010 | Added : ஜூலை 23, 2010 | கருத்துகள் (112)
Share
Advertisement
""கடும் உழைப்பு மட்டுமே வெற்றிக்கு வழி என்பதை பலமுறை நான் அனுபவ பூர்வமாக உணர்ந்திருக்கிறேன்,'' என இந்திய ரூபாய்க்கு சர்வதேச குறியீடு உருவாக்கியுள்ள கவுஹாத்தி ஐ.ஐ.டி., உதவி பேராசிரியர் உதயகுமார் கூறினார். இது குறித்து உதயகுமார் அளித்த சிறப்பு பேட்டி: நான் பிளஸ் 2 வரை சென்னை ஆழ்வார் திருநகரில் உள்ள தனியார் உறைவிட பள்ளியில் படித்தேன். அதன்பிறகு கடந்த 1996ம் ஆண்டு முதல்
இந்திய பைசா,குறியீடு,உதயகுமார்,தயாரிப்பு, Symbol,paisa,goal Udhayakumar

""கடும் உழைப்பு மட்டுமே வெற்றிக்கு வழி என்பதை பலமுறை நான் அனுபவ பூர்வமாக உணர்ந்திருக்கிறேன்,'' என இந்திய ரூபாய்க்கு சர்வதேச குறியீடு உருவாக்கியுள்ள கவுஹாத்தி ஐ.ஐ.டி., உதவி பேராசிரியர் உதயகுமார் கூறினார்.


இது குறித்து உதயகுமார் அளித்த சிறப்பு பேட்டி: நான் பிளஸ் 2 வரை சென்னை ஆழ்வார் திருநகரில் உள்ள தனியார் உறைவிட பள்ளியில் படித்தேன். அதன்பிறகு கடந்த 1996ம் ஆண்டு முதல் 2001ம் ஆண்டு வரை சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் பி.ஆர்க்., படிப்பை முடித்தேன். மும்பை ஐ.ஐ.டி.,யில் உள்ள இன்டஸ்டிரியல் டிசைன் சென்டரில் கடந்த 2001 முதல் 2003ம் ஆண்டுவரை மாஸ்டர்ஸ் இன் டிசைன் (எம்.டெஸ்.,) மேல்படிப்பை முடித்தேன். தொடர்ந்து அங்கேயே பிஎச்.டி., ஆராய்ச்சி படிப்பை முடித்தேன். கடந்த 20ம்தேதி முதல் கவுஹாத்தி ஐ.ஐ.டி.,யில் உதவி பேராசிரியராக பணிபுரிந்து வருகிறேன். இந்திய மொழிகளின் எழுத்து வடிவம் குறித்தும், குறிப்பாக பழம் பெரும் மொழியான தமிழ்மொழியின் எழுத்து வடிவம் குறித்தும் ஆராய்ச்சி செய்து வருகிறேன்.


தமிழ் "டைபோகிராபி' என்பதற்கு தமிழ் அச்செழுத்தியல் என நானே பெயர் சூட்டி ஆராய்ச்சியை தொடர்ந்து வருகிறேன். கடந்த 2009ம் ஆண்டு மார்ச் மாதத்தில் இந்திய ரூபாய்க்கு குறியீடு உருவாக்குவதற்கான அறிவிப்பை மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டது. மும்பை ஐ.ஐ.டி., பேராசிரியர்கள் மற்றும் நண்பர்கள் மூலம் இந்த விவரத்தை அறிந்தேன். இந்தியர்கள் யார் வேண்டுமானாலும் போட்டியில் கலந்துகொள்ளலாம் என்பதால், நானும் பங்கேற்றேன். அதற்கு இரண்டு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இப்போட்டியில் கடைசி சுற்றுக்கு தேர்வு செய்யப்படும் ஐந்து பேருக்கு தலா 25 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. போட்டிக்கான தீவிர ஆராய்ச்சியில் இறங்கினேன். இந்தி மொழியின் எழுத்து வடிவமான "தேவநகரி' எழுத்துக்களை ஆய்வு செய்தேன். இந்தி மொழியில் உள்ள "ர' என்ற எழுத்து "ருபியா' என்ற ரூபாயை குறிக்கும் முதல் எழுத்து என்பதால் அதை தேர்வு செய்தேன். ஆங்கில மொழியில் "ஆர்' எழுத்து, ரூபாயை குறிக்கும் முதல் எழுத்து என்பதால் அதையும் தேர்வு செய்தேன். இவை இரண்டையும் இணைத்து "ஆர்' போன்ற எளிதான எழுத்து வடிவத்தை உருவாக்கினேன்.


இந்திய தேசியக் கொடி பட்டொளி வீசி பறப்பது போன்ற உருவாக்கத்தை தெரிவிக்கவும், இந்திய பொருளாதாரம் எப்போதும், மற்ற நாடுகளுக்கு சமமானது என்பதை உணர்த்தவும், "இக்குவல்' என்ற குறியீட்டை "ஆர்' எழுத்தின் மேல் பகுதியில் இணைத்து ரூபாய்க்கு புதிய குறியீட்டை உருவாக்கி போட்டிக்காக அனுப்பினேன். என்னைபோலவே 8,000 முதல் 10 ஆயிரம் பேர் வரை போட்டிக்காக தாங்கள் வரைந்த குறியீட்டை அனுப்பி வைத்திருந்தனர். அதில் இருந்து 3,000 பேர் தேர்வு செய்யப்பட்டு கடைசி சுற்றுக்கு ஐந்து பேர் தேர்வு செய்யப்பட்டனர். அதில் மூன்று பேர் மும்பையை சேர்ந்தவர்கள், ஒருவர் கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்தவர், நான் தமிழகத்தை சேர்ந்தவன். கடந்த எட்டு ஆண்டாக மும்பையில் தங்கி படித்ததால் என்னையும் மும்பையை சேர்ந்தவர் என அறிவித்துவிட்டனர்.


ஐந்து பேரில் ஒருவராக நான் தேர்வு செய்யப்பட்ட தகவல், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தெரிவிக்கப்பட்டது. அதன்பிறகு நிதித்துறை தலைமை அலுவலகத்திற்கு அழைத்து ஏழு பேர் கொண்ட குழுவினர், நான் உருவாக்கிய ரூபாய்க்கான குறியீடு குறித்து விளக்கம் கேட்டு அனுப்பினர். அதன்பிறகு எந்த தகவலும் இல்லை. இந்த நிலையில் நான் தயாரித்த ரூபாய் குறியீடு தேர்வு செய்யப்பட்டிருப்பதாக பத்திரிகையாளர் ஒருவர் மூலம் தகவல் கிடைத்தது. ஆனால் அதை நான் நம்பவேயில்லை. கடந்த 14ம் தேதி இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானபோது நான் மகிழ்ச்சியில் கண்ணீர் விட்டு அழுதுவிட்டேன். பெற்றோர், சகோதரர்களுக்கு மொபைல் போனில் தகவல் தெரிவித்து அவர்களின் வாழ்த்துக்களை பெற்றேன்.


இந்த குறியீடு உருவாக்கியதன் மூலம் நாட்டிற்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்த்திருப்பதாக உணர்கிறேன். எனக்கு தமிழ் அச்செழுத்தியல் ஆய்வுகள் மட்டுமின்றி தோட்டக்கலை, சமையல் கலை, வீட்டு உள் அலங்காரம், நகைகள் வடிவமைப்பு ஆகியவற்றிலும் ஆர்வம் அதிகம். வாலிபால், ஓட்டப் பந்தய விளையாட்டுகளிலும் ஆர்வம் அதிகம். இதற்காக பள்ளியில் துவங்கி ஐ.ஐ.டி., வரை படித்தபோது பல்வேறு பதக்கங்கள், பரிசுகள் பெற்றிருக்கிறேன். நான் படித்து அறிந்தவற்றை உதவி பேராசிரியர் என்ற முறையில் எனது மாணவர்களுக்கும் கற்றுக்கொடுத்து அவர்களை சாதனையாளர்களாக மாற்றி நாட்டின் வளர்ச்சிக்கு உதவுவேன். எனது பெற்றோர், உடன்பிறந்தவர்கள், பேராசிரியர்கள் தான் எனது ரோல் மாடல். கடும் உழைப்பு மட்டுமே வெற்றிக்கு வழி என்பதை பலமுறை நான் அனுபவ பூர்வமாக உணர்ந்திருக்கிறேன். இவ்வாறு உதவி பேராசிரியர் உதயகுமார் கூறினார். அப்போது, அவரது தந்தையான ரிஷிவந்தியம் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ., தர்மலிங்கம், தாய் ஜெயலஷ்மி, சகோதரர்கள் ராஜ்குமார், மற்றும் விஜயகுமார் உடன் இருந்தனர்.


குவியும் வாழ்த்து மழை! இந்திய ரூபாய்க்கு குறியீட்டை உருவாக்கியதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கல்வியாளர்கள், மாணவர்கள் தொடர்புக்கொண்டு உதயகுமாரை வாழ்த்தி வருகின்றனர். சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள தனது வீட்டிற்கு வந்துள்ள அவருக்கு நேரிடையாகவும், மொபைல் போன் மூலமும் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. கரூர் வைஸ்யா வங்கி நிர்வாகம் சார்பாக, அவ்வங்கி சென்னை மண்டல துணை பொதுமேலாளர் ஆனந்தகுமார், தி.நகர் கிளை முதன்மை மேலாளர் லஷ்மணன், ராயபுரம் கிளை மேலாளர் ரமேஷ் ராஜா ஆகியோர் பூங்கொத்து கொடுத்து நேற்று நேரில் வாழ்த்து தெரிவித்தனர். அப்போது மொபைல் போன் மூலம் கரூர் வைஸ்யா வங்கியின் தலைவர் ஜனார்தனன், நிர்வாக இயக்குனர் குப்புசாமி ஆகியோரும் உதயகுமாருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். இதேபோல உதயகுமார் படித்த பள்ளி, அண்ணா பல்கலைக் கழக நிர்வாகிகள் மற்றும் பலதரப்பட்டவர்களும் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்.


அடுத்த போட்டிக்கும் தயார்: தற்போது, அமெரிக்கா(டாலர்), ஐரோப்பா (யூரோ), ஜப்பான்(யென்), கியூபா(பெசோஸ்), கொரியா(வான்), லாவோஸ்(கிப்ஸ்), கோஸ்டாரிக்கா (கொலோன்), ஸ்விட்சர்லாந்து(பிராங்க்), நைஜீரியா(நைராஸ்), மங்கோலியா(டக்ரிஸ்), உக்ரைன்(இர்வினா), தாய்லாந்து(பாக்ட்), துருக்கி (லிராஸ்), தென்ஆப்ரிக்கா(ரான்ட்) உள்ளிட்ட பல நாடுகளின் பணத்திற்கு குறியீடுகள் உள்ளன. இந்தியாவும் ரூபாய்க்கு சர்வதேச குறியீடு அறிமுகம் செய்து இந்த வரிசையில் சேர்ந்துள்ளது. இதில், இந்திய ரூபாய்க்கு முன்பு பயன்படுத்தப்பட்டு வந்த "ஆர்' குறியீடு தான் தென் ஆப்ரிக்காவின் தற்போதைய குறியீடு. புதிய குறியீடு உருவாக்கப்பட்டுள்ளதால் இதில் இருந்து இந்தியா தனித்துவம் பெற்றுள்ளது. அமெரிக்காவின் டாலருக்கு அடுத்துள்ள பணமான "சென்ட்' என்பதை குறிப்பதற்கு "சி' என்ற குறியீடு பயன்படுத்தப்பட்டு வருகிறது.


அதேபோல இந்திய ரூபாய்க்கு அடுத்துள்ள பைசாவை குறிக்கவும், வரும் காலத்தில் புதிய குறியீடு தேவைப்படும். இதற்கான அறிவிப்பை நிதித் துறை அமைச்சம் வெளியிட்டால் அதில் பங்கேற்பதற்கும் உதயகுமார் இப்போதே தயாராகிவிட்டார். இதற்காக இந்தி மொழியில் பைசாவை குறிக்கும் முதல் எழுத்தான "ப'வுடன் "ஈக்குவல்' குறியீட்டை இணைத்து, தேசியக்கொடி பறப்பது போல பைசாவிற்கும் புதிய குறியீட்டை உதயகுமார் உருவாக்கியுள்ளார். மத்திய நிதித்துறை அமைச்சகம் கேட்கும் பட்சத்தில் இந்த வடிவமைப்பை மேலும் மெருகூட்டி, எளிமைபடுத்தவும் தயாராக இருப்பதாகவும் உதயகுமார் தெரிவித்துள்ளார். அவர் உருவாக்கியுள்ள ரூபாய் குறியீடு, வங்கி, தபால் நிலையம், வர்த்தக நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு பயன்பாடுகளுக்கு இனி பயன்படும். இந்த குறியீடு, ரூபாய் தாளில் அச்சிடப்படும் பட்சத்தில் விரைவில் அடித்தட்டு மக்கள் மத்தியிலும் பிரபலமாகும் வாய்ப்புள்ளது.


                                                                             - நமது சிறப்பு நிருபர் -


Advertisement
வாசகர் கருத்து (112)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
L.Ramasubramanian - Tirunelveli,இந்தியா
26-ஆக-201015:19:59 IST Report Abuse
L.Ramasubramanian We are indian
Rate this:
Cancel
kumar - riyadh,இந்தியா
27-ஜூலை-201001:37:27 IST Report Abuse
kumar உதயகுமார் உங்கள் பணி தொடர வாழ்த்துகள். உங்கள் அப்பாவின் பேட்டி கண்டோம்.மிக்க மகிழ்ச்சி
Rate this:
Cancel
D.MASILAMANI - kanchipuram,இந்தியா
26-ஜூலை-201021:44:53 IST Report Abuse
D.MASILAMANI I saw the news in first time. very nice and today news in very intersting
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X