ஈரோடு: பெரிய மாரியம்மன் கோவில் நில மீட்பு இயக்கம் சார்பில் மேம்பாலம் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு லட்சம் துண்டு பிரசுரம் விநியோகம் செய்யப்பட உள்ளது. ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் மேம்பாலம் பணி நடக்கிறது. மேம்பால பணியால் பெரிய மாரியம்மன் கோவிலில் 15 அடி தூரம் வரை இடிக்கப்படுவதாக நெஞ்சாலைத் துறையினர் தெரிவித்துள்ளனர். பெரிய மாரியம்மன் கோவிலை இடிக்க கூடாது என்றும், பெரிய மாரியம்மன் கோவில் நிலத்தை மீட்க கோரியும், 80 அடி சாலையை திறக்க கோரியும், பெரியமாரியம்மன் கோவில் நில மீட்பு இயக்கத்தினர் போராடி வருகின்றனர். மேம்பாலம் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து சின்னமுத்து வீதி, பாப்பாத்திக்காடு, சூரம்பட்டி வலசு உள்ளிட்ட இடங்களில் வீடுகளில் கறுப்பு கொடி ஏற்றப்பட்டுள்ளது. இயக்க நிர்வாகிகள் கறுப்பு பேட்ஜ் அணிந்துள்ளனர். இப்போராட்டத்துக்கு ஈரோடு நகரில் உள்ள 78 சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. ஈரோட்டில் மே 28ம் தேதி முழு கடையடைப்பு நடத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.கடையடைப்புக்கு மக்கள் ஆதரவை திரட்டும் வகையில் ஒரு லட்சம் துண்டு பிரசுரம் அச்சிடப்படுகிறது. துண்டு பிரசுரத்தில், "பெரிய மாரியம்மன் கோவிலை இடிக்க கூடாது, அம்மனுக்கு சொந்தமான இடத்திலேயே ஆலயம் அமைய வேண்டும். 80 அடி சாலைத் திட்டத்தை நிøவேற்ற வேண்டும். போக்குவரத்து நெரிசல் மிகுந்த எம்.ஜி.ஆர்., சிலை அருகில் மேம்பாலம் தேவை. ஆனால், தேவையற்ற "எல்' வடிவ மேம்பாலத்தால் பயன்கிடையாது. கடை அடைப்பு போராட்டத்துக்கு முழு ஆதரவு தர வேண்டும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.ஈரோடு நகர் முழுவதும் இன்று முதல் துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்யப்படுகிறது.