ஆழ்வார்குறிச்சி : "டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க சித்த மருத்துவத்தில் எளிய வழிமுறைகள் உள்ளது' என தென்னக பாரம்பரிய சித்த மருத்துவர்களின் கூட்டமைப்பு தலைவர் பாப்பான்குளம் டாக்டர் எஸ்.ராமசாமி தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி இதுவரையிலும் 24 பேர் பலியாகியுள்ளனர். டெங்கு என்ற எமனுக்கு தினம் தினம் இரையாகும் மனித உயிர்களை சித்த மருத்துவத்தின் மூலம் தடுப்பதற்கு பல்வேறு வழிவகைகள் உள்ளது என பாப்பான்குளம் நந்தீஸ்வரர் சித்த ஆராய்ச்சி அறக்கட்டளை மற்றும் தென்னக பாரம்பரிய சித்த மருத்துவர்களின் கூட்டமைப்பின் தலைவர் டாக்டர் எஸ்.ராமசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவித்திருப்பதாவது:
காய்ச்சல் என்பது ஒரு தனிப்பட்ட நோயல்ல. பிற நோய்களின் தாக்கத்தின் வெளிப்பாடே காய்ச்சல் ஆகும். ஒரு மனிதனின் உடலில் 72 ஆயிரம் நாடி நரம்புகள் உள்ளது. மனிதனை 4 ஆயிரத்து 448 நோய்கள் தான் தாக்கும் என்றும், ஒரு நாளைக்கு ஒரு மனிதன் 12 ஆயிரத்து 600 முறை தான் சாதாரணமாக சுவாசிக்க முடியும் என்றும் சித்தர்கள் கணக்கிட்டு உள்ளனர். மனிதரை தாக்கும் காய்ச்சல் 64 வகைப்பட்டது என வரையறுக்கப்பட்டுள்ளது.
வாதம், பித்தம், கபம் (சளி) என்ற 3 நாடிகள் தான் காய்ச்சலுக்கு அடிப்படையாகும். இவை ஒன்றுடன் ஒன்று கலப்பதால் தொந்தநாடி என்றும், இவற்றின் தன்மையை நன்கும் உணர்த்தியுள்ளனர். இன்றைக்கு பெருவாரியாக பேசப்படும் டெங்கு காய்ச்சல் பற்றி சித்த மருத்துவ அடிப்படையில் இதன் குணக்குறிகளை ஆராயும் போது கபவாதஜூரம் என்ற தொந்தநாடி நடையில் வருகிறது என்பது அனுபவ ரீதியாகவும், சாஸ்திர ரீதியாகவும் நன்கு புலனாகிறது.
இந்த டெங்கு காய்ச்சலை தீர்ப்பதற்கு முதலில் அகக் காரணம், புறக்காரணம் நன்கு அறிந்து மருத்துவம் செய்ய வேண்டும். காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர் வாந்தி பேதியில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளாரா என்று முதலில் கவனிக்க வேண்டும். அதோடு செரியாமையும், மலச்சிக்கலும் காரணமாக இருந்தால் முதலில் அவற்றை நீக்க வேண்டும். இவற்றில் எதுவும் இல்லையென தெரிந்தால் அதன்பின்னர் டெங்கு காய்ச்சலுக்கான கசாயத்தை தயாரித்து வழங்க வேண்டும்.
டெங்கு காய்ச்சல் வராமல் தடுப்பதற்கு வில்வ இலை, வேப்பங்கொழுந்து, துளசி இலை, சிறிது மிளகு இவை அனைத்தையும் சேர்த்து நன்கு அரைத்து சிறிய அளவு வெந்நீரில் கலந்து குடித்தால் டெங்கு காய்ச்சல் வராமல் இருப்பதற்கான முதல் தடுப்பு மருந்து ஆகும். லேசாக காய்ச்சல் வருவதற்கான அறிகுறி தோன்றினால் சித்த மருத்துவ கடைகளில் உள்ள வஜ்ஜிர கண்டி, பாலசஞ்சீவி, சூரி மாத்திரைகளை வாங்கி கொடுக்கலாம். டெங்கு காய்ச்சல் வந்துவிட்டது என்றால் பொதுவாக காய்ச்சல் எல்லாவற்றிற்கும் கசாயம் தான் சிறந்தது.
நிலவேம்பு கசாயத்தை குடித்தால் சிறந்ததாகும். நிலவேம்பின் தன்மை வைரஸை உடனே அழிக்கும் என்பதால் தான் நிலவேம்பு சிறந்ததாகும். ஆனால் டெங்கு காய்ச்சல் முழுமையாக வந்துவிட்டது என்றால் விஷ்ணுகிராந்தி என்ற கசாயத்தை நாமே வீட்டில் எளிதான முறையில் தயார் செய்து 3 நாட்கள் தொடர்ந்து 3 வேளையும் குடித்தால் டெங்கு காய்ச்சல் பறந்துவிடும்.
விஷ்ணுகிராந்தி கசாயம் தயாரிக்கும் முறைகள்
நாட்டு மருந்து கடைகளில் சென்று விஷ்ணுகிராந்தி கொடி வேருடன்-6, கீளாநெல்லி கொடி வேருடன்-6, ஆடாதொடை இலை-8 இவற்றை நன்கு சுத்தம் செய்து சிறுசிறு துண்டாக நறுக்கி வைத்து கொள்ளவும். பின்னர் சுக்கு, மிளகு, திப்பிலி, நறுக்குமூலம், சித்தரத்தை, தானிசபத்திரி, கோஸ்டம், அதிமதுரம், அக்கரா, பரங்கிப்பட்டை, கோரைகிழங்கு, பற்பாடகம், சீந்தில்கொடி, நிலவேம்பு, பேய்க்குடல் இவை அனைத்தும் ஒவ்வொன்றையும் தனித்தனியாக 6 கிராம் வாங்கி காய்ந்த 15 முந்திரிடன் நன்கு பொடி செய்ய வேண்டும்.
ஏற்கனவே தயார் செய்துள்ள மூலிகையையும் இந்த பொடியையும் ஒன்றாக கலந்து நான்கு லிட்டர் தண்ணீர் சேர்த்து இரண்டு மணிநேரம் ஊற வைத்து பின்னர் லிட்டர் அளவாக வற்றும் வரை நன்கு காய்ச்சி வடிகட்டி தேவைக்கேற்ப பனங்கற்கண்டு அல்லது பனைவெல்லம் சேர்த்து பெரியவர்களுக்கு 100 மிலியும், சிறியவர்களுக்கு 50 அல்லது 25 மிலியும், குழந்தைகளுக்கு 10 அல்லது 5 மிலியும் தினமும் 3 வேளை 3 நாட்கள் கொடுத்தால் டெங்கு காய்ச்சல் பூரண குணமடையும்.
காய்ச்சல் வந்து குணமடைந்த பின்பு மிகவும் சோர்வாகவும் உடலின் பலமில்லாமலும் உடல்வலியும் இருந்தால் அமுக்கிரா சூரணம், தண்ணீர்விட்டான் கிழங்கு லேகியம் ஆகியவற்றை வாங்கி சாப்பிட வேண்டும். காய்ச்சல் குணமாகிய பின்பு பசியின்மை இருந்தால் பஞ்சதீபாக்னி ஹஸ்தசூரணம் வாங்கி சாப்பிட வேண்டும். டெங்கு காய்ச்சல் வந்தால் கசாயம் மூலமாகவே சரிசெய்து விடலாம்.
இவ்வாறு தென்னக பாரம்பரிய சித்த மருத்துவர்களின் கூட்டமைப்பின் தலைவரும், பாப்பான்குளம் நந்தீஸ்வரர் சித்த அறக்கட்டளை தலைவருமான டாக்டர் எஸ்.ராமசாமி தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE