பொது செய்தி

தமிழ்நாடு

குடிகாரர்களும் இல்லை; குற்றவாளிகளும் இல்லை: ஆச்சர்யப்படுத்தும் யோகா கிராமம்

Updated : ஜூன் 04, 2012 | Added : ஜூன் 04, 2012 | கருத்துகள் (57)
Advertisement

மதுபான விற்பனை மூலம் 20 ஆயிரம் கோடி ரூபா# வருவாய் இலக்கு வைத்து தமிழக அரசு சுறுசுறுப்பாகச் செயல்படும் அதே வேளையில், அஜ்ஜிப்பட்டி கிராம மக்கள், யோகா பயிற்சி மூலம் குடிக்கு அடிமையானவர்களை திருத்தி, நல்வழிப்படுத்தி ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளனர்.இதனால், அந்தப் பகுதியில் குற்றச் செயல்கள் அறவே குறைந்து உள்ளதாக, காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.

தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஜருகு ஊராட்சியில், அஜ்ஜிப்பட்டி என்ற மலை கிராமம் உள்ளது. இங்கு 800 வீடுகளில் கிட்டத்தட்ட 1,200 பேர் வசித்து வருகின்றனர். இவர்களில் 80 சதவீதம் பேர், அரசு பள்ளி வளாகத்தில் தினமும் யோகா பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.இங்கு, குடிமையங்கள், புகையிலைப் பொருட்கள் மற்றும் மாமிசம் ஊர் கட்டுப்பாட்டின்படி, தடை செய்யப்பட்டு உள்ளது.

முதல் அச்சாரம்:இந்த யோகா புரட்சியைத் தொடங்கி வைத்தவர், அஜ்ஜிப்பட்டியை சேர்ந்த, போலீஸ் குற்றப்பரிவு, சப் இன்ஸ்பெக்டர், வெங்கடேஷ். தன் சொந்த பிரச்னைகளைச் சமாளிக்க யோகாவை நாடியவர், அதன் பயனை அனுபவித்த பின், அதை பரப்பத் துவங்கினார்.

இது குறித்து, அவர் கூறுகையில், ""நான் தர்மபுரி காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு பிரிவில் பணிபுரிந்தபோது, தினம்தோறும் நூற்றுக் கணக்கானவர்கள் புகார் கொடுக்க வந்ததால், மன உளைச்சல் ஏற்பட்டது. என்னுடன் பிறந்தோர் குடும்பங்களில் அடிக்கடி தகராறு ஏற்பட்டதாலும் எனக்கு அடிக்கடி மனச்சோர்வு ஏற்படும்,'' என்றார்.

மேலும், ""இதைத் தவிர்க்க, ஆழியாறு வேதாத்ரி மகரிஷியின் மனவளக்கலை மன்றத்தில், யோகா பயிற்சி பெற்று , அதை பின்பற்ற ஆரம்பித்தேன். அதனால், மனதளவில் பெரிய மாற்றம் ஏற்பட்டது. பின்னர் இதையே என் குடும்ப பிரச்னைகளுக்கான தீர்வாக எடுத்துக் கொண்டேன். என் உறவினர்களிடம் யோகாவின் அவசியத்தை உணர்த்தினேன். அங்கும் நல்ல மாற்றம் ஏற்பட்டது. இன்று எங்கள் குடும்பம் மட்டும் அல்லாது, ஊரே யோகா மூலமாக நல்வழியில் நிமிர்ந்து நிற்கிறது,'' என்றார்.

காலை எழுந்ததும்...:அஜ்ஜிப்பட்டியில், யோகா, வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் ஊடுருவி உள்ளது. அதன் பயனை அனுபவிக்கும் மக்களும், இடையறாது பயிற்சி செய்து, அறவாழ்வை பராமரித்து வருகின்றனர்.இங்கு உள்ள அனைத்து வீடுகளின் முகப்பிலும் யோகா குறித்த வாசக அட்டைகள் தொங்கிக் கொண்டிருக்கிறன. புதிதாக எந்த மனிதரை எதிர்கொண்டாலும், வணக்கத்திற்கு பதில், "வாழ்க வளமுடன்' என்ற வாசகம் வாழ்த்துகிறது.இங்கு எவரிடமும், எதற்கும் பதட்டமில்லை, எந்த அவசரமும் இல்லை. எல்லாவற்றையும் பொறுமையாகவும் நேர்த்தியாகவும் செயல்படுத்துகின்றனர். அதிகாலை நான்கு மணிக்கு, இங்குள்ள அரசு பள்ளி வளாகத்தில் கூடும் மக்கள், காலை ஆறு மணி வரை மொத்தமாக யோகாசன பயிற்சி செய்கின்றனர். பின்னர் தான், கூலி வேலைக்கு செல்வது, காட்டு வேலைகளை பார்ப்பது என, தங்களின் அன்றாடப் பணிகளைத் தொடங்குகின்றனர்.வேலையை முடித்துவிட்டு, மதியம் வீட்டுக்கு வந்த பின்னர் சிறிது ஓய்வெடுத்து விட்டு, மாலை நான்கு மணி முதல் ஆறு மணி வரை யோகா பயிற்சி செய்கின்றனர், பின்னர் ஒன்பது மணிக்கு தூங்கச் செல்கின்றனர். இப்படியாக இவர்களின் அன்றாட வாழ்வு அமைந்து உள்ளது.

திருந்திய குடிகாரர்கள்:இங்கு, ஐம்பதுக்கும் மேற்பட்டோர் குடிப் பழக்கத்திற்கு அடிமையாக இருந்து உள்ளனர். முதலில், இவர்களில் ஐந்து பேரை தேர்வு செய்து, யோகா பயிற்சிக்கு அழைத்து சென்றிருக்கின்றனர். அங்கு மாற்றம் ஏற்பட்டு, குடியை விட்டவர்கள், இன்று அதன் வாடை வந்தாலே காததூரம் ஓடுகின்றனர். அப்படி திருந்தியவர்களில் ஒருவர் வடிவேலு, 74.

அந்த அனுபவம் குறித்து, அவர் கூறுகையில்,
""விவரம் தெரியாத 14 வயதிலிருந்து குடித்து வந்தேன். யோகா பயிற்சிக்கு ஐந்து நாட்கள் பொள்ளாச்சிக்கு அனுப்பிச்சாங்க. இப்ப அந்த கருமத்தோட நாத்தம் வந்தாலே அந்த இடத்தில் நிக்க மாட்டேன்,'' என்றார். எட்டு வயதில் இருந்து குடித்து வந்த, பழனி, குடிகாரர்களை கண்டாலே வெறுப்பு வருகிறது என்கிறார்.இப்படி ஒவ்வொருவராக திருந்தி, இங்கு குடி என்ற வார்த்தையைக் கூட கேட்க முடிவதில்லை. கடைகளில் பீடி, சிகரெட் விற்பனையும் இல்லை.

சாதிக்கும் மாணவர்கள்:இங்கு உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு யோகா பயிற்சி வகுப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. ஜருகு ஊராட்சியைச் சுற்றி உள்ள, பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து நூற்றுக்கணக்கான மாணவர்கள், இங்கு பயிற்சி எடுத்து செல்கின்றனர்.சென்ற முறை பிளஸ் 2 வகுப்பில் 68 சதவீதம் தேர்ச்சி பெற்ற மாணவர்கள், இந்த முறை 78 சதவீதம் தேர்ச்சி பெற்று இருக்கின்றனர்.

யோகா பயிற்சியின் மூலம் படிப்பில் முன்னேற்றம் கண்ட மாணவர், பிரபாகரன் கூறுகையில், ""காலை நான்கு மணிக்கு எழுந்து யோகா செய்த பின்னர் படிப்பதால் மனதில் பசுமரத்தாணி போல பதிகிறது. அதிகாலையில் எழுவதால், படிப்பதற்கு நிறைய நேரம் கிடைக்கிறது. அதுவே இம்முறை நான் அதிக மதிப்பெண் எடுப்பதற்கு காரணம்,'' என்றார்.

குற்ற செயல்கள்:கிராமங்களும், தெரு சண்டையும் ஒட்டிப்பிறந்த இரட்டைக் குழந்தைகள். ஆனால் இங்கு ஊரே அமைதிப் பூங்காவாக இருக்கிறது.ஆரம்பத்தில் யோகா பயிற்சி பெற்று, தற்போது, யோகா பயிற்சி ஆசிரியராக இருக்கும், ஸ்ரீதேவி கூறுகையில், ""கிராமத்தில் உள்ள அனைவரும் யோகா செய்வதன் மூலம் எங்களுக்கு விட்டுக் கொடுக்கும் தன்மை வந்து விட்டது. இப்பயிற்சி கடந்த ஆறு ஆண்டுகளாகத் தொடர்ந்து நடக்கிறது. இதனால் பிரச்னை ஏற்படுவதில்லை. குறிப்பாக குழாயடியிலோ, தெரு முனையிலோ சண்டை போடுவதில்லை,'' என்றார்.

மேலும், ""உங்க மண் வெட்டியையோ, கடப்பாரையையோ இங்கே விட்டு செல்லுங்கள். நாளை அதே இடத்தில் இல்லை என்றால் நீங்கள் எது சொன்னாலும் நாங்கள் கேட்கிறோம்,'' என, ஊரில் தனிநபர் ஒழுக்கம் பற்றி பெருமையாக சவால் விடுத்தார்.

அடிப்படையிலேயே மக்கள் ஒழுக்கமாக இருப்பதால், பெரும்பாலான குற்றச்செயல்கள் நிகழ்வதில்லை என்கின்றனர், இந்த ஊர் மக்கள்.

- அ.ப.இராசா -

Advertisement
வாசகர் கருத்து (57)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vikram.s - chennai,இந்தியா
07-நவ-201214:42:57 IST Report Abuse
vikram.s வெங்கடேஷ் ,அய்யா ,அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்தும், நன்றியும், தெரிவிக்கிறேன். உங்களை ஒரு முன்மாதிரியாக நினைத்து ,ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள, நல்லுள்ளம் படைத்த அன்பர்கள் முயற்சிக்கலாமே என வேண்டி வணங்குகிறேன் இப்படிக்கு ச.விக்ரம் ஆத்துவாம்பாடி கிராமம் போளூர் தலுக்க திருவண்ணாமலை
Rate this:
Share this comment
Cancel
Siva Kumar G - Bangalore,இந்தியா
12-ஜூன்-201210:09:20 IST Report Abuse
Siva Kumar G வாழ்க வையகம்.வாழ்க வளமுடன். அறமும், ஈகையுமே வாழ்வதற்கான வழிகள், அது நம்பிக்கையை மேம்படுத்தும். இதுவே தமிழ் மரபு. இது உலக மரபாகி அனைவரும் ஒழுக்கமான உயர்ந்த நிலையில் கூடி vaaza இறைவனை வேண்டி கொள்கிறோம். வாழ்க வளமுடன்.
Rate this:
Share this comment
Cancel
santhosh rajendran - Toronto,கனடா
08-ஜூன்-201206:49:43 IST Report Abuse
santhosh rajendran அற்புதம் அந்த அஜ்ஜிபட்டி மக்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ., இந்த நல் செய்தியை வெளியிட்ட தினமலருக்கும் என் அன்பான வாழ்த்துக்கள் .. இந்த பழக்கத்தை தமிழ் நாட்டில் உள்ள அனைத்து கிராமங்களும் கற்றுக்கொண்டால் அடேங்கப்பா தமிழ் நாடு சொர்க்கம் தான்.. யோகாவை அமெரிக்காவில் christian யோகா என்று கற்றுகொடுக்கிறார்கள். அதுவும் ஆசனங்களை ஆங்கில மொழியில் தப்பாக அசிங்கமாக கூறுகிறார்கள் ..இப்படி இருக்கும்போது இந்தியாவில் தோன்றி பல முனிவர்கள் மற்றும் ஆசான்கள் கற்று தந்ததை இந்துமதத்தோடும் புத்த மதத்தோடும் ஒப்பிடுவது சரியே. ஏன் என்றால் யோகாவின் அடிப்படைகள் இவ்விரு மதங்களில் தான் உள்ளன , வணக்கம் சொல்லுவதில் இருந்து விநாயகர்கு தோப்பு கரணம் போடுவது (தற்சமயம் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமான இதற்கு பெயர் " சூப்பர் brain யோகா " ) கூட யோகா தான் ., இல்லை என்றால் பிற்காலத்தில் யோகாவும் அமெரிக்க copyright ஆகிவிடும்... நண்பர்களே
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X