உடுமலை: உடுமலை மற்றும் சுற்றுப்பகுதியில், "இனிக்கும்' வெல்லம் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களின் வாழ்க்கையில் "கசப்பே' மிஞ்சியுள்ளது. பல ஆண்டுகளாக இத்தொழிலில் ஈடுபட்டவர்களுக்கு மாற்றுத்தொழிலும் தெரியாததால், வேதனையடைந்துள்ளனர்.உடுமலை தாலுகாவிற்குட்பட்ட கிராமங்களில் தென்னைக்கு அடுத்ததாக கரும்பு பயிரிட்டு வருகின்றனர். இதில், ஏழு குள பாசனத்திற்குட்பட்ட பள்ளபாளையம், சுண்டக்காம்பாளையம், தளி உள்ளிட்ட பல்வேறு கிராமப்பகுதிகளில் மூன்று ஆயிரம் ஏக்கருக்கு மேல் கரும்பு சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.12 மாதப்பயிரான கரும்பினை அறுவடை செய்து வெல்லம் தயாரிக்கும் பணியினை "குடிசைத் தொழிலாக' இப்பகுதி விவசாயிகள் 50 ஆண்டுகளுக்கும் மேலாக செய்து வருகின்றனர். பரம்பரை பரம்பரையாக இத்தொழிலில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.சர்க்கரை ஆலைகள் துவங்குவதற்கு முன்பே வெல்ல உற்பத்தி ஆலைகள் துவங்கப்பட்டது. பழங்காலத்தில், மாட்டை பயன்படுத்தி செக்கிழுத்து கரும்பு சாறு எடுத்து வெல்ல உற்பத்தியை மேற்கொண்டனர். பின் காலப்போக்கில், தொழில் நுட்ப மாற்றத்தில், கரும்பு சாறு எடுக்க " கிரஷர்' பயன்படுத்தப்படுகிறது.நிலத்தில் வெட்டப்படும் கரும்பு "கிரஷர்' மூலமாக கரும்புச்சாறு தயாரிக்கப்படுகிறது.
பின் கரும்புச்சாறு பெரிய கொப்பரையில் இட்டு, நன்றாக காய்ச்சப்படுகிறது. பதமான கரும்பு சாறை அச்சுப்பலகையில் இட்டு வெல்லம் தயாரிக்கின்றனர்.இதில், சின்ன அச்சு மற்றும் பெரிய அச்சு பலகைகள் மூலமாக வெள்ளம் தயாரிக்கப்படுகிறது. பின்னர், தயாரிக்கப்பட்ட வெல்லம் மூட்டை கணக்கில் வெளி மாவட்டங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. நெய்காரப்பட்டி, பொள்ளாச்சி, தாராபுரம் உள்ளிட்ட சந்தைகளில் விற்பனை செய்யப்படுகிறது.பழங்காலத்தில் வெல்ல விலையும் தங்கத்தின் விலையும் ஒன்றாக இருந்தது. உற்பத்தி செலவும் குறைந்த அளவே என்பதால் விவசாயிகள் லாபம் பார்த்தனர்.பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை போதிய ஆட்கள், கரும்பு மகசூல், போதிய லாபம், உரத்தட்டுப்பாடின்றி கிடைத்தல் போன்ற பல்வேறு காரணங்களினால், கரும்பை வியாபாரிகளிடம் விற்பனை செய்வதை விட, வெல்ல உற்பத்தியில் ஆர்வம் காட்டினர். இதனால், ஏழுகுள பாசனத்திற்குட்பட்ட பகுதிகளில் மட்டுமே ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வெல்ல உற்பத்தியில் ஈடுபட்டனர்.இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக இத்தொழிலில் நிலவி வரும் சிக்கல்களால் வெல்ல உற்பத்தி பாதிக்கப்பட்டு தொழிலும் நசிவடைந்துள்ளது. இதனால் வெல்லம் உற்பத்தியாளர்களுக்கு வெல்லம் தித்திக்காமல் கசந்து வருகிறது.
ஆட்கள் பற்றாக்குறை :
கரும்பு சாகுபடிக்கு முக்கியமானதாக விளங்குவது வெட்டுதல், வெல்ல உற்பத்திக்கு ஆட்கள் அதிகளவு தேவைப்படும். கரும்பு வெட்டுவதற்கு மட்டும் குறைந்தபட்சம் ஏக்கருக்கு 15க்கும் மேற்பட்ட கூலியாட்கள் தேவைப்படுகிறது. ஆட்கள் பற்றாக்குறையால், கரும்பு வெட்டும் பணிகள் பாதிக்கப்பட்டு வருகிறது.கூலி அதிகமாக கொடுத்தாலும் உள்ளூரில் ஆட்கள் கிடைப்பது அரிதாகி வருகிறது. தற்போது, 100 நாள் வேலை உறுதியளிப்பு திட்டத்தினால், விவசாயப்பணிகளுக்கு ஆட்கள் கிடைப்பது அரிதாகியுள்ளது. ஆட்கள் பற்றாக்குறை பெரிய "தலைவலி' யாக உற்பத்தியாளர்களுக்கு மாறி வருகிறது.
வெளியூர் ஆட்கள் வருகை:
உள்ளூரில் கரும்பு வெட்டும் பணி, வெல்ல உற்பத்திக்கு ஆட்கள் கிடைப்பதில்லை. எனவே, வெளி மாவட்டங்களிலிருந்து ஆட்களை அழைத்து வந்து கரும்பு வெட்டும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இந்நிலையில், வெளியூரிலிருந்து வரும் ஆட்களும் தற்போது ஆர்வம் காட்டததால், உடுமலையில், சில இடங்களில்,வெல்ல உற்பத்தி துவங்குவதில் சிக்கல் நீடிக்கிறது. இதனால், ஆலைகள் ஆட்கள் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது.
வெல்ல உற்பத்தி பாதிப்பு:
கரும்பை பொறுத்தவரை 10 மாதங்களில் இருந்து 12 மாதங்களுக்குள் வெட்டினால் மட்டுமே, கரும்பு சாறு அதிகளவில் கிடைக்கும். பருவம் தவறி அறுவடை செய்வதால் கரும்பு காய்ந்து சாறு குறைவதோடு எடையும் வெகுவாக குறையும். இதனால், வெல்ல உற்பத்தி பாதியாக குறைந்து நஷ்டம் ஏற்படும். ஆட்கள் பற்றாக்குறையால், கரும்புகளை குறிப்பிட்ட பருவத்தில் வெட்ட முடியாத சூழ்நிலை உள்ளது.
வெல்லத்திற்கு கூடுதல் விலை:
வெல்லச்சந்தையில், கடந்த சில ஆண்டுகளாக இல்லாமல், தற்போது நல்ல விலை கிடைத்து வருகிறது. தற்போது, சிப்பத்திற்கு ரூ. 750 முதல் 900 வரை கிடைத்து வருகிறது. ஆனால், தற்போதுள்ள வெல்ல உற்பத்தி மூலப்பொருட்கள் விலை உயர்வு, கூலி, உர விலை போன்றவற்றின் காரணமாக வெல்லத்திற்கு தற்போது கிடைக்கும் விலை விட அதிக விலை கிடைத்தால் மட்டுமே லாபம் பார்க்க முடியும்.
குடிசைத்தொழிலாக பரம்பரை பரம்பரையாக வெல்லம் தயாரிப்பு பணியில் ஈடுபட்ட விவசாயிகளுக்கு மாற்று தொழில் தெரியாததால், லாபம் இல்லாத நிலையிலும், இத்தொழிலில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர்.
"கரும்பு சாகுபடி குறைகிறது'
வெல்ல உற்பத்தியாளர்கள் கூறுகையில்," உடுமலையில், கடந்தாண்டை போலவே இந்தாண்டும் கரும்பு மகசூல் குறைந்துள்ளது. மழை பெய்யாதது; குளத்தில் தண்ணீர் இல்லாமல் வறண்டது போன்ற காரணங்களினால், மகசூல் பாதிக்கப்பட்டது.கரும்பு வெட்டுதல், வெல்லம் தயாரித்தல் உள்ளிட்ட வகையில், ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் வரை செலவாகிறது. மூலப்பொருட்கள் விலை உயர்வு, கூலி உயர்வு, ஆட்கள் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால், ஏழு குள பாசனத்திற்குட்பட்ட பகுதிகளில் கரும்பு சாகுபடி குறைந்து வருகிறது. இதே நிலை நீடித்தால், நாட்டு வெல்லம் தயாரிப்பு முடங்கி வெல்லம் கிடைப்பதே அரிதாகி விடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. லாபம் கிடைக்காமல் நஷ்டமே ஏற்பட்டு வருகிறது,' என்றனர்.