நாகர்கோவில் : கன்னியாகுமரியில் பிடிபட்ட கள்ள நோட்டுகள், பாகிஸ்தானில் அச்சடிக்கப் பட்டு கொண்டுவரப்பட்டதாக, விசாரணையில் தெரியவந்துள்ளது. கன்னியாகுமரி டாஸ்மாக் கடையில் 1000 ரூபாய் கள்ளநோட்டு மாற்ற முயன்றவரை பிடித்த போது, ஒரு கும்பலே கள்ள நோட்டு மாற்ற கன்னியாகுமரி வந்துள்ளது தெரிய வந்தது. மொபாரக் உசேன் (22), முகமது முஸ்தபா ஷேக்(25), முகமது சபிக் ஷேக (24), முகமது அஸ்ராகுல் ஷேக் (22), மகிபூஸ் ஷேக் (32), நாசிர் ஷேக்(30), அனபது ஷேக் (22), முகமது மத்தியூர் (23) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் ஆறு லட்சத்து 21 ஆயிரம் ரூபாய், இரண்டு கேமரா, இரண்டு மொபைல் போன் பறிமுதல் செய்யப்பட்டது. இவர்கள் அனைவரும் ஜார்க்கண்ட் மாநிலம் சாகிப்கன்ஜ் பகுதியை சேர்ந்தவர்கள்.
அவர்கள் போலீசில் கொடுத்த வாக்குமூலம்: நாங்கள் ஆடு மேய்க்கும் தொழில் செய்து வந்தோம். கோல்கட்டாவை சேர்ந்த ஷேக் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அவரிடம் கள்ளநோட்டை மாற்றும் வேலையில் சேர்ந்தோம். ஒரு லட்சம் ரூபாய் கள்ள நோட்டை மாற்றி கொடுத்தால் 40 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். கன்னியாகுமரியில் 3000 ரூபாயை ஓட்டல் மற்றும் பேன்சி ஸ்டோரில் மாற்றினோம். ஆனால் மதுக்கடையில் 1000 ரூபாய் கொடுத்த போது மாட்டிக்கொண்டோம். இவ்வாறுஅவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த கும்பலுக்கு பெரிய நெட் ஒர்க்குடன் தொடர்பு உள்ளதும், பாகிஸ்தானில் இருந்து இந்த நோட்டுகள் அச்சடித்து புழக்கத்தில் விடப்பட்டுள்ளது என்றும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.