பொது செய்தி

தமிழ்நாடு

நெல்லுக்கு தட்டுப்பாடு: உயர்கிறது அரிசி விலை: ஆலைகளில் உற்பத்தி நிறுத்தம்

Added : ஜூலை 11, 2012
Advertisement
நெல்லுக்கு தட்டுப்பாடு: உயர்கிறது அரிசி விலை: ஆலைகளில் உற்பத்தி நிறுத்தம்

"தமிழகத்தில், நெல்லுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், 50 சதவீத அரிசி ஆலைகள் இயங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. இதனால், அரிசி விலையில் மேலும் உயர்வு ஏற்படும்,' என, வியாபாரிகள் தெரிவித்தனர்.


தமிழகத்தில், நெல் அதிக அளவில் விளையும் தஞ்சாவூர், ஆவுடையார் கோவில், செஞ்சி, சேத்துப்பட்டு, செய்யாறு, வந்தவாசி, செங்குன்றம். காஞ்சிபுரம், மன்னார்குடி ஆகிய இடங்களில், எதிர்பார்த்த விளைச்சல் இல்லை. இந்த பகுதிகளில் இருந்து, அரிசி ஆலைகளுக்கு விற்பனைக்கு வந்து கொண்டு இருந்த நெல்லின் வரத்து, 10 சதவீதமாக குறைந்து விட்டது.


ஆந்திராவில் தடை: அண்டை மாநிலமான ஆந்திராவில் இருந்து, பிற மாநிலங்களுக்கு நெல், அரிசி எடுத்துச் செல்ல முழுமையாக தடை விதிக்கப்பட்டு விட்டது. இதனால், கர்நாடகா மாநில நெல்லை மட்டுமே, தமிழக அரிசி ஆலைகள் நம்பி இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு, மத்திய, மாநில அரசுகள், நெல் கொள்முதல் விலையை, கிலோவுக்கு, 13.50 ரூபாயாக உயர்த்தின. இதனால், வெளி மார்க்கெட்டில் நெல் விலை உயர்ந்துள்ளது.


கிலோவுக்கு எட்டு ரூபாய்...: வெளி மார்க்கெட்டில், நெல் கிலோ, 17 ரூபாய் முதல், 22 ரூபாய் வரை விற்கிறது. விலை உயர்த்தப்பட்ட போதிலும், விவசாயிகளிடம் நெல் இருப்பு இல்லாததால், அரிசி ஆலைகள் தங்களின் உற்பத்திக்கு வெளி மாநிலங்களையே நம்ப வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. தட்டுப்பாட்டால் அனைத்து ரக நெல்லின் விலை, கிலோவுக்கு, எட்டு ரூபாய் வரை உயர்ந்துள்ளது. அதிசய பொன்னி நெல் கிலோ, 11.40 ரூபாய்க்கு விற்றது, 17 ரூபாய்க்கும், வெள்ளை பொன்னி, பாபத்லால் பொன்னி ரகங்கள், 16 ரூபாய்க்கு விற்றது, 22 ரூபாய்க்கும் விற்கின்றன. அம்பை 16, ஏ.டி.டி., 37, ஏ.டி.டி., 45, ஐ.ஆர்., 20 நெல் ரகங்கள், கிலோ, 10 ரூபாய்க்கு விற்றது, 16 ரூபாயாக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் செயல்பட்டு வந்த அரிசி ஆலைகள், தங்களுக்கு போதிய நெல் கிடைக்காமலும், நெல்லை அதிக விலை கொடுத்து வாங்கி, உற்பத்தி செய்தால் கட்டுப்படியாகாது என்பதாலும், உற்பத்தியை வெகுவாக குறைத்து விட்டன.


உற்பத்தி நிறுத்தம்: தமிழகத்தில், கடந்த மாதம் வரை இயங்கி வந்த, 7,400 அரிசி ஆலைகளில், 3,000 அரிசி ஆலைகள் இயங்க முடியாமல் தங்களின் உற்பத்தியை முழுமையாக நிறுத்தி உள்ளன. மீதமுள்ள ஆலைகளும், 50 சதவீத அளவுக்கே உற்பத்தி செய்து வருகின்றன. இதனால், "மார்க்கெட்டில் அரிசிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும்' எனும் அச்சம் வியாபாரிகள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. நெல் விலை, கிலோவுக்கு, ஆறு ரூபாய் முதல், எட்டு ரூபாய் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், அரிசி விலை, கிலோவுக்கு குறைந்த பட்சம், 10 ரூபாய் உயர்ந்து இருக்க வேண்டும். ஆனால், வியாபாரிகள் அரிசி விலையை, கடந்த வாரம் கிலோவுக்கு, மூன்று ரூபாய் வரை மட்டுமே உயர்த்தினர். நேற்றைய அளவில், மார்க்கெட்டில் அரிசி நிலவரம், உயர்ரக வெள்ளை பொன்னி கிலோ, 45 ரூபாய், உயர்தர கர்நாடகா டீலக்ஸ் பொன்னி கிலோ, 38 ரூபாய், பி.பி.டி., (பாபத்லால் பொன்னி) கிலோ, 42 ரூபாய், கிராந்தி ரக இட்லி அரிசி கிலோ, 34 ரூபாய், அம்பை 16 கிலோ, 32 ரூபாய், ஐ.ஆர்.,20 கிலோ, 31 ரூபாய், ஏ.டி.டி.,45 கிலோ, 34 ரூபாய்க்கு விற்கிறது.


குறையும் இருப்பு: இந்த விலையானது, இன்னும் சில தினங்களில் கிலோவுக்கு, மூன்று ரூபாய் முதல் ஐந்து ரூபாய் வரை உயர்வு ஏற்படும் என, வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். இது குறித்து அரிசி ஆலை உரிமையாளர்கள் தரப்பில் கூறப்படுவதாவது: தமிழக அரிசி ஆலைகளில், 15 நாள் உற்பத்திக்கு தேவையான நெல்லும், அரிசி கடைகளில், 45 நாள் விற்பனைக்கு தேவையான அரிசியும் மட்டுமே இருப்பு உள்ளது. தமிழகத்தில், நெல்லுக்கு கடும் தட்டுபாடு நிலவுகிறது. இதனால், அரிசி ஆலைகளில் உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உற்பத்தி பாதிப்பை சரி செய்யும் வகையில், சத்தீஸ்கர், பீகார், ஒரிசா மாநிலங்களில் இருந்து நெல்லை வரவழைக்கும் முயற்சியில் இறங்கி உள்ளோம். அங்கிருந்து நெல் வந்தாலும், அரிசி தட்டுப்பாட்டை மட்டும் எங்களால் நீக்க முடியும். ஆனால், விலை உயர்வை எங்களால் தடுக்க முடியாது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


- நமது சிறப்பு நிருபர் -


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X