பொது செய்தி

இந்தியா

அன்னா ஹசாரே உண்ணாவிரதத்தில் ராம்தேவ்: ஆதரவாளர்களுடன் ஊர்வலமாக வந்து பங்கேற்றார்

Added : ஜூலை 27, 2012
Share
Advertisement
அன்னா ஹசாரே உண்ணாவிரதத்தில் ராம்தேவ்: ஆதரவாளர்களுடன் ஊர்வலமாக வந்து பங்கேற்றார்

புதுடில்லி:அன்னா ஹசாரே குழுவினர் நடத்தும் காலவரையற்ற உண்ணாவிரதம் நேற்று மூன்றாவது நாளாக தொடர்ந்தது. நேற்றைய உண்ணாவிரதத்தில், யோகா குரு ராம்தேவும் பங்கேற்றார்.ஊழலை ஒழிக்கும் வகையில், பலமான லோக்பால் மசோதாவை பார்லிமென்டில் நிறைவேற்ற வலியுறுத்தி, சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே குழுவினர், தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.


இந்நிலையில், "ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள, 15 மத்திய அமைச்சர்களுக்கு எதிராக, விசாரணை நடத்துவதற்காக, சிறப்பு விசாரணைக் குழுவை அமைக்க வேண்டும். எம்.பி.,க்கள் மீதான ஊழல் வழக்குகளை விசாரிக்க, விரைவு கோர்ட்டுகளை அமைக்க வேண்டும். அரசியல் கட்சித் தலைவர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை, சிறப்பு விசாரணைக் குழு விசாரிக்க வேண்டும்' என்ற, கோரிக்கைகளை வலியுறுத்தி, அன்னா ஹசாரே குழுவைச் சேர்ந்த, அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா, கோபால் ராய் ஆகிய மூன்று பேரும், டில்லி ஜந்தர் மந்தரில், காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை கடந்த 25ம் தேதி துவக்கினர்.


ஊர்வலமாக வந்தார்:மூன்றாவது நாளாக நேற்று நடந்த உண்ணாவிரதப் போராட்டத்தின் போது, அன்னா ஹசாரே மற்றும் அவரது குழுவினருடன் யோகா குரு ராம்தேவும், தனது ஆதரவாளர்கள் இரண்டாயிரம் பேருடன், ராம்லீலா மைதானத்தில் இருந்து ஜந்தர் மந்தருக்கு ஊர்வலமாக வந்து பங்கேற்றார்.நேற்றைய உண்ணாவிரதத்தின் போதும், கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. அன்னா ஹசாரே தன் ஆதரவாளர்களுடன் காலை 11.00 மணிக்கு மேடைக்கு வந்தபோது, மேடை அருகே மட்டும் 300 பேர் நின்றிருந்தனர். மற்றபடி பெரிய அளவில் கூட்டம் இல்லை. ஆனால், ராம்தேவ் வந்த பின்னர், மூன்றாயிரம் பேருக்கு மேல் உண்ணாவிரதம் நடந்த இடத்தில் கூடியிருந்தனர்.


உண்ணாவிரதத்தில் பங்கேற்க ராம்லீலா மைதானத்தில் இருந்து புறப்பட்ட யோகா குரு ராவ், ""அன்னா ஹசாரேயின் இயக்கத்திற்கு என் ஆதரவு எப்போதும் உண்டு. அதே நேரத்தில், தனிப்பட்ட எவரையும் தாக்கிப் பேசக் கூடாது. ஜனாதிபதி பதவி என்பது அரசியல் சட்ட பதவி. அந்த அரசியல் சட்ட பதவி வகிப்பவரை, யாரும் விமர்சிக்கக் கூடாது. அன்னா ஹசாரேயே இதை ஏற்றுக் கொண்டுள்ளார்,'' என்றார்.


கிரன் வரவில்லை:நேற்றைய உண்ணாவிரதத்தின் போது, ஹசாரே குழுவைச் சேர்ந்த அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, நீரிழிவு நோய் காரணமாக, சிறிது உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், சிறிது நேரம் மட்டும் மேடையில் இருந்து விட்டுச் சென்றார். அதேபோல், மற்றொரு உறுப்பினரா கிரன்பேடியும் நேற்று வரவில்லை. அவர் புனேயில் சில நிகழ்ச்சியில் பங்கேற்க சென்று விட்டதாகக் கூறப்படுகிறது.


உண்ணாவிரத மேடைக்கு அன்னா ஹசாரே வந்ததும், ஊடகங்கள் நிகழ்ச்சிகளைப் படம் பிடிக்க, சிலர் எதிர்ப்புத் தெரிவித்தனர். ஆனால், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அதை தடுத்து விட்டனர். ஊடகங்களுக்கு இடையூறு செய்பவர்கள் மீது, போலீஸ் உதவியுடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மிரட்டினர். தங்கள் இயக்கத்தை சாராத வேறு சிலரே, இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதாக, ஹசாரே குழுவினர் குற்றம் சாட்டினர்.


திக்விஜய்சிங்,காங்கிரஸ் பொதுச் செயலர்:அன்னா ஹசாரே அரசியலில் இறங்க முடிவெடுத்திருப்பது வரவேற்கத் தக்கது. ஹசாரே, பாபா ராம்தேவ், சாந்தி பூஷண், கிரன்பேடி, அரவிந்த் கெஜ்ரிவால் உட்பட அன்னா ஹசாரே குழுவினர் அனைவரும் தேர்தலில் போட்டியிட வேண்டும்!''


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X