குடவாசல் அருகே, கண்டிரமாணிக்கத்தில் கிடைத்த, கி.பி., 10, 11ம்
நூற்றாண்டைச் சேர்ந்த பழமையான, சோழர் கால புத்தர் சிலையை சிவப்புத்துணி
போட்டு மூடி வைத்துள்ளதால், வரலாற்று ஆர்வலர்கள் அதிருப்தியடைந்துள்ளனர் .
திருவாரூர் மாவட்டம், குடவாசல் தாலுகா கண்டிரமாணிக்கம் கிராமம்,
மேட்டுத்தெருவில் வசிப்பவர் மணிகண்டன். இவர், வீட்டுக்கொல்லைப் பகுதியில்
கட்டுமானப் பணிக்காக, சமீபத்தில் அஸ்திவாரம் தோண்டியுள்ளார். பெரிய புத்தர்
சிலை உள்ளே புதைந்திருப்பது தெரிந்தது. புத்தர் சிலையை மக்கள் பத்திரமாக
மீட்டு, கொட்டகை அமைத்து, வழிபடத் துவங்கியுள்ளனர். பழமையான புத்தர் சிலை
கிடைத்த தகவலறிந்தும், ஆய்வாளர்கள் குடவாயில் பாலசுப்பிரமணியன், தஞ்சை
தமிழ் பல்கலை கண்காணிப்பாளர் ஜம்புலிங்கம் ஆகியோர், நேரில் சென்று ஆய்வு
செய்தனர். அந்த சிலை, கி.பி., 10, 11ம் நூற்றாண்டைச் சேர்ந்தது எனத்
தெரியவந்தது. புத்தர் சிலை குறித்து, ஆய்வாளர்கள் குடவாயில்
பாலசுப்பிரமணியன், தஞ்சை தமிழ் பல்கலை கண்காணிப்பாளர் ஜம்புலிங்கம் ஆகியோர்
கூறியதாவது: குடவாசல் தாலுகா, கண்டிரமாணிக்கம் கிராமத்தில் கண்டெடுத்த
புத்தர் சிலை, சோழர் காலத்தைச் சேர்ந்த சிற்பம். இது, கி.பி., 10, 11ம்
நூற்றாண்டைச் சேர்ந்தது. இந்த சிலை, இந்த கிராமத்திலிருந்த பவுத்த
பள்ளியில் வழிபாட்டுக்காக வைக்கப்பட்டு இருந்திருக்கலாம். ஒருங்கிணைந்த
தஞ்சை, திருச்சி, புதுகை மாவட்டங்களை உள்ளடக்கிய சோழ நாட்டில் காணப்படும்,
66வது சிற்பம் இது. பிரமாண்ட புத்தர் சிலை, அமர்ந்த நிலையில் தியான
கோலத்தில் உள்ளது. புத்தர் புன்னகை தவழும் இதழ்களுடன் காணப்படுகிறார்.
நெற்றியில் திலகக்குறி, நீண்டு வளர்ந்த காதுகள், பரந்த மார்பில் காணப்படும்
மேலாடை, இடுப்பில் ஆடை ஆகியவை தத்ரூபமாக செதுக்கப்பட்டுள்ளது. வான்
நோக்கியுள்ள வலதுகையில் தர்ம சக்கரக்குறி உள்ளது. சுருள்முடிக்கு மேல்
தீச்சுடர் உள்ளது. இச்சிலையின், மூக்குப்பகுதி சிதைந்து இருப்பது,
பிற்காலத்தில் ஏற்பட்டிருக்கலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
கண்டிரமாணிக்கம் கிராமத்தில் இருந்து வருவாய்த்துறையினரால், அவசர அவசரமாக
எடுத்து செல்லப்பட்ட புத்தர் சிலை, திருவாரூர் தியாகராஜர் கோவிலிலுள்ள
அருங்காட்சியக வாயிலில் வைக்கப்பட்டது. கோவில் வளாகத்தில் புத்தர் சிலையை
வைக்க, கோவில் நிர்வாகத்தினர் எதிர்ப்பு காட்டியதால், புத்தர் சிலையை
சிவப்பு துணியால் கட்டி மறைத்துள்ளனர். திருவாரூருக்கு இடம் பெயர்ந்த
புத்தர் சிலையை, அருங்காட்சியகம் முன் சிவப்பு துணி போட்டு மூடி வைத்துள்ள
கலெக்டர் நடராசனுக்கு, எழுத்தாளரும், பேராசிரியருமான மார்க்ஸ் கடும்
எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், ""சிவன் கோவில் வளாகத்தில்,
புத்தர் சிலையை சிவப்பு துணி போட்டு மூடி வைத்து, வரலாற்று ஆய்வாளர்கள்
ஆய்வு செய்ய முடியாமல், மாவட்ட நிர்வாகம் அவமதித்துள்ளது,'' என்றார்.
கண்டிரமாணிக்கம் கிராமத்தைச் சேர்ந்த ஞான ஒளி கூறுகையில், ""புத்தர் சிலையை
மீட்டு, மீண்டும் கிராமத்திலேயே வைப்போம்,'' என்றார்.
- நமது சிறப்பு நிருபர்-
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE