செஞ்சி : ரம்ஜான் நாள் கொண்டாட தயராகி கொண்டிருந்த நேரத்தில் பெண்கள் மெகந்தி வைத்ததால் உடல் நலக்குறைவு ஏற்படுவதாக ஏற்பட்ட வதந்தியால் தமிழகம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பகுதியில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பெண்கள் தங்கள் கைகளை அழகுபடுத்த கடைகளில் விற்கப்படும் மெகந்தியை (கோன்) வாங்கி அலங்காரம் செய்தனர். இதை பயன்படுத்திய சிலருக்கு கைகளில் அலர்ஜி, மயக்கம் ஏற்படுவதாக இரவில் தகவல் பரவியது. இதையடுத்து நள்ளிரவு இரவு 2 மணி அளவில் சொரத்தூர் மற்றும் அப்பம்பட்டை சேர்ந்த யாஸ்மீன் ( வயது 9) ஷமீம் ( வயது 15) தில்ஷாத் ( வயது 25) ரஜீமா (40) அஷ்ரத் ( 12) ஆகியோர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்தனர். இதில் அஷ்ரத்துக்கு மயக்கம், தலைவலி இருந்ததால் செஞ்சியில் இருந்து மேல்சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு சிகிச்சைக்கு அனுப்பினர்.
இத்தகவல் செஞ்சி பகுதியில் உள்ள முஸ்லிம்கள் மத்தியில் மொபைல் போன் மூலம் வேகமாக பரவியது. இதையடுத்து இன்று அதிகாலை 4.30 மணிவரை 123 பேர் மெகந்தி பாதிப்பு ஏற்பட்டதாக சிகிச்சைக்கு வந்தனர். இதனால் செஞ்சி மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
வதந்தியை பரப்பியது யார் ?
இந்த தகவல் சென்னை மற்றும் தமிழகம் முழுவதும் பல மாட்டங்களில் வதந்தி பரவியது. இது குறித்து டாக்டர்கள் கூறுகையில்; மெகந்தி மூலம் எவ்வித பாதிப்பும் ஏற்பட்டதாக அறிகுறி யாருக்கும் இல்லை. சிலருக்கு உடல்களில் அரிப்பு இருந்ததாக தெரிகிறது. ஆனால் மெகந்தி வைத்த இடத்தில் எவ்வித கோளாறும் இல்லை. என்றார். இது குறித்து யாரும் அச்சப்பட வேண்டாம் என இஸ்லாமிய அமைப்பை சேர்ந்தவர்கள் கேட்டு கொண்டுள்ளனர்.
இந்த வதந்தி பரவியது எப்படி? :
முதன் முதலாக வேலூரில் இந்த அலர்ஜி ஏற்பட்டது . இதன் சுற்றுப்பகுதியான வாணியம்பாடி மற்றும் சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு பரவியது. வேலூர் ஆஸ்பத்திரிக்கு 45 பேர் சிகிச்சைக்காக வந்தனர். செஞ்சியில் மட்டும் 140 பேர் ஆஸ்பத்திரிக்கு வந்து சிகிச்சை பெற வந்னைர். அச்சத்தின் காரணமாக இந்த தகவல் மொபைல் மூலம் பலரும் தங்கள் உறவினர்கள் , நண்பர்கள் என பகிர்ந்துள்ளனர். மெகந்தி வைத்தவர்கள் எல்லோரும் தமக்கும் எதுவும் பாதிப்பு இருக்குமோ என்று அஞ்சி பலரும் ஆஸ்பத்திரி நோக்கி வந்துள்ளனர். இது போல் பல பகுதிகளுக்கு பரவியது. காலையில் சிறப்பு தொழுகையின்போது மசூதிகளில் ஒலிபெருக்கி மூலம் புரளியை யாரும் நம்ப வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டது.
தாசில்தார் எச்சரிக்கை:
செஞ்சியில் ஏற்பட்டுள்ள இந்த பிரச்னை குறித்து முழுக்கவனமாக கண்காணிக்குமாறு மாவட்ட கலெக்டர் சம்பத் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக தாசில்தார் வாசுதேவன் கூறுகையில், மெகந்தியினால் பாதிப்பு இல்லை. தவறான தகவல் பரப்புவோர் யார் என கண்டறிந்து அவர்கள் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
மெசேஜ் இல்லாததால் தப்பியது :
குறிப்பாக மத்திய அரசு பல்க் மெசேஜ் தடை செய்திருப்பதால் மேலும் பரவாமல் தடுக்கப்பட்டுள்ளது. இல்லையேல் மேலும் பலருக்கு இந்த பொய்செய்தி போய்ச்சேர்ந்திருக்கும்.சமீபத்தில் வட மாநிலத்தவர்கள தாக்கப்படுவதாக மொபைல் மூலம் தகவல் பரப்பி விடப்பட்டது. இதனையடுத்து பல்க் மெசேஜ் அனுப்பிட மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில் இந்த மெகந்தீ வதந்தி குறித்தும் போலீஸ் தரப்பில் விசாரிக்கப்பட்டு வருகிறது.