கோவில்பட்டி: பருத்தியில் தண்டுக்கடன் வண்டு தாக்குதலை கட்டுப்படுத்தி 15 சதவீத மகசூல் இழப்பை தடுக்குமாறு வேளாண்மை உதவி இயக்குநர் தகவல் தெரிவித்துள்ளார்.குருவிகுளம் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் மானாவாரி மற்றும் கோடைப்பருவத்தில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இப்பயிர்களை வேர்பூச்சி எனப்படும் தண்டுக்கடன் வண்டு தாக்குவதால் சுமார் 10 முதல் 15 சதவீத மகசூல் இழப்பு ஏற்பட்டு வருகிறது. இந்த இழப்பை தடுக்க வேளாண்மை உதவி இயக்குநர் சார்பில் தொழில் நுட்ப குறிப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது.பூச்சி விபரம் : பருத்தியை தாக்கும் தண்டுக்கடன் வண்டுகள் கருப்பாக சுமார் 3 மிமீட்டர் நீளத்தில் இருக்கும். இதன் தலையின் முன்பகுதி தும்பிக்கை போன்று நீண்டு உள்நோக்கி வளைந்து இருக்கும். ஒவ்வொரு பெண் வண்டும் ஒருமுறைக்கு சுமார் 50 முட்டைகள் வரை இடலாம். இம்முட்டைகள் தண்டு பட்டைகளின் மேல் இடப்படுவதால், முட்டைகளில் இருந்து வெளிவரும் புழுக்கள் பருத்திச் செடியின் பட்டைக்கும் தண்டிற்கும் இடையில் இருந்து கொண்டு தண்டு பகுதியை அழித்து உண்கின்றன.வண்டு தாக்குதல் அறிகுறிகள் : இளம் பருத்திச்செடிகள் ஆங்காங்கே வாடி இருப்பதுடன், தரையை ஒட்டிய தண்டுப்பகுதி வீங்கியபடி இருக்கும். இதில் வீங்கிய பகுதியின் தண்டு பகுதியை உரித்துப் பார்த்தால் புழுக்கள் தண்டை அரித்து உண்டிருப்பதை பார்க்க முடியும். மேலும் வளர்ந்த செடிகளில் பஞ்சு முழு வளர்ச்சி அடையும் முன்னரே காய்கள் வெடித்துவிடும்.தடுக்கும் வழிமுறைகள் : சிபாரிசுப்படி ஏக்கருக்கு சுமார் 5 டன் நன்கு மக்கிய தொழு உரத்தை அடியுரமாக இட வேண்டும் என்பதுடன், ஏக்கருக்கு 100 கிலோ வேப்பம் புண்ணாக்கையும் அடியுரமாக இட வேண்டும். தவிர கார்போபியூரான் 3 சதவீத ஜி குருணையை ஏக்கருக்கு 12 கிலோ வீதம் இட்டு விதைத்த 20 மற்றும் 45ம் நாள்களில் மண் அணைக்க வேண்டும். பருத்திச் செடியில் தண்டுக்கடன் வண்டு தாக்கிய செடிகளை பிடுங்கி எடுத்து எரிப்பதுடன், கட்டைப்பயிர் விடுவதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு கடைபிடித்தல் பருத்தி சாகுபடியில் ஏற்படும் சுமார் 15 சதவிகித மகசூல் பாதிப்பை தடுக்க முடியும் என குருவிகுளம் வேளாண்மை உதவி இயக்குநர் கிருஷ்ணகுமாரி தெரிவித்துள்ளார்.