அரசியல் செய்தி

தமிழ்நாடு

நாஞ்சில் நாடு காட்டிய வழியில் தமிழகம் ஒருங்கிணைந்து போராட வேண்டும்: வைகோ

Added : ஆக 23, 2012 | கருத்துகள் (13)
Advertisement
நாஞ்சில் நாடு காட்டிய வழியில் தமிழகம் ஒருங்கிணைந்து போராட வேண்டும்: வைகோ

நாஞ்சில் நாடு காட்டிய வழியில், தமிழகம் ஒருங்கிணைந்து போராட வேண்டும்'' என, ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ பேசினார்.
கலை இலக்கியப் மேம்பாட்டு உலகப் பேரவை விழா நாகர்கோவிலில் நடந்தது. "திருவிதாங்கூர் தமிழர் போராட்ட வரலாறு' என்ற நூலை எழுதிய நூலாசிரியர் யோகீஸ்வரன், "சோழர் காலச் செப்பேடுகள்' என்ற நூலை எழுதிய ராஜேந்திரன் ஐ.ஏ.எஸ்., ஆகியோருக்கு, "தினமலர்' நாளிதழ் நிறுவனர் டி.வி.ராமசுப்பையர் விருது வழங்கப்பட்டது.
விழாவில் வைகோ பேசியதாவது:நாஞ்சில் மண்ணின் உரிமை காக்க நடந்த போராட்டக் களங்களில், தோள் கொடுத்துத் துணை நின்று, மக்கள் மன்றத்துக்குச் செய்திகளை எடுத்துச் சென்று அரும்பணி ஆற்றிய, "தினமலர்' நாளிதழின் நிறுவனர், மேதகு டி.வி.ராமசுப்பையர் பெயரால் வழங்கப்படுகின்ற விருதை, "திருவிதாங்கூர் தமிழர் போராட்ட வரலாறு' என்ற நூலை தந்த நூலாசிரியர் யோகீஸ்வரனுக்கு வழங்கியுள்ளனர்.
மகடூஉ முன்னிலை
தாயம்மாள் அறவாணனின் மகடூஉ முன்னிலை என்கின்ற நூலில், இலக்கியப் பாடல்களை வடித்த பெண்பாற்புலவர்களைப் பற்றி, அந்தப் பாடல்களுக்கு உரிய, அரிய விளக்கங்களோடு தந்துள்ளார். சங்க இலக்கியங்களைப் படைத்த புலவர்கள், 473 பேர் எனில், அதில், 45 பேர் பெண்பாற்புலவர்கள். அது வியப்பை ஏற்படுத்துகிறது. ஆனால், இது பெண் உரிமை பேசுகின்ற காலம் அல்லவா? எனவே, நூலைப் படைத்தவர், அந்த எண்ணிக்கை குறைவு என்று தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

அந்தக் காலத்தில், மன்னனையே எதிர்த்து, "தேரா மன்னா, செப்புவது உடையேன்' என்று கூறி, பாண்டியன் அரசவையில், எரிமலையின் சீற்றமாகத் தன்னுடைய உணர்ச்சியைக் கொட்டினாளே, கொங்கற் செல்வி குடமலையாட்டி, கண்ணகிப் பெருந்தேவி, அள்ளூர் நன்முல்லையார், ஆதிமந்தியார், ஓக்கூர் மாசாத்தியார், அவ்வையார், காக்கைப் பாடினியார், நச்செள்ளையார், காவற்பெண்டு, குறமகள் இளஎழினி, குறமகள் எயினி, பேய்மகள் இளஎயினி, பூதப்பாண்டியன் தேவி பெருங்கோப் பெண்டு, பொன்முடியார், பொன்மணியார், நெறி பாடிய காமக்கண்ணியார் இவர்கள் எல்லாம் பெண் பாற்புலவர்களே. அவ்வையார் எத்தனையோ அரிய கவிதைகளைத் தந்தார்.
சோழர் காலச் செப்பேடுகள்:
சோழர் காலச் செப்பேடுகள் வரலாற்று நூலை நான் பார்த்தேன். கி.பி., 846ம் ஆண்டிலே, விசயாலய சோழன், முத்தரைய மன்னர்களை வென்று, பிற்காலச்சோழப் பேரரசுக்கு அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தான்.
அவனது வழியிலே தான் பராந்தகச் சோழன், அவன் மகன் ராஜாதித்திய சோழன், அவன் தக்கோலப் போரிலே வீழ்ந்துபட்டான், ஆயினும் போரில் புலிக்கொடி வென்றது. அடுத்து அரிஞ்சய சோழன், அழகுமிக்க சுந்தரச் சோழன், அவரது மூத்த மகன் ஆதித்த கரிகாலன் படுகொலை செய்யப்பட்டது வரை சொல்லி, அவனது இளவல் தான் அருள்மொழிவர்மன் என்ற முதலாம் ராஜராஜசோழன் அவரது சித்தப்பா மதுராந்தகச் சோழன் வரையிலான வரலாற்றுச் செய்திகளை எல்லாம் தொகுத்து முனைவர் ராஜேந்திரன் நூலாகத் தந்து இருக்கிறார்.வஞ்சி மூதூரில், கரூரிலே சேர மன்னர்களின் ஆட்சிக்காலத்தில், அதுவும் தமிழர்களின் ஆட்சி தான், அங்கே ரோமர்களுடைய, ரோமப் பேரரசரின் காசுகள் கண்டு எடுக்கப்பட்டன. அகஸ்டஸ் காலத்துக் காசுகள், டைபீரியஸ் காலத்துக் காசுகள்; அவற்றை வெளிக் கொண்டு வந்த பெருமை "தினமலர்' நாளிதழின் இன்றைய ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி அவர்களைச் சாரும்.
திருவிதாங்கூர் தமிழர் போராட்ட வரலாறு
திருவிதாங்கூர் தமிழர் போராட்ட வரலாறு நூலை, நான் முழுமையாகப் படித்தேன். அதன் விளைவாகத்தான் கூர் தீட்டப்பட்ட போர்க்கருவியாக களத்துக்கு வந்துள்ளேன். எப்படியெல்லாம் தலைவர்கள் இந்த குமரி மண்ணிலே போராடினார்கள் என்பதைப் பார்க்கின்ற போது, ஜாதி, மதம், கட்சிகளைக் கடந்து போராடிய அந்த வீரவரலாறைப் பார்க்கின்ற போது, அவர்கள் இந்த நாஞ்சில் நாட்டுக்காக மட்டும் போராட வில்லை.தமிழகத்திற்காகப் போராடினார்கள். கேரள வல்லாதிக்கத்தில் இருந்து, இந்த மண்ணை அவர்களுடைய பார்வை மிக, மிக விசாலமாக இருந்தது. தேவிகுளம், பீர்மேடையும் மீட்பதற்காகப் போராடினார்கள் என்பதை அறிந்த போது வியந்து போனேன். இந்தக் குமரி மாவட்ட மக்கள், குமரி மாவட்டத்தை மட்டும் மீட்பதற்காக அல்ல, தமிழகத்துக்காகப் போராடினார்கள். அதுதான் எனக்கு வியப்பையும், மகிழ்ச்சியையும் தருகிறது.எனவே முல்லைப் பெரியாறா? அது தென்பாண்டி மண்டலத்துக்கு மட்டும் தான் பிரச்னை என்று கருதி விடக் கூடாது. சிறுவாணியா? கீழ்பவானி பாசனப்பகுதியா? அமரவாதி பிரச்னையா? அது கொங்கு மண்டலத்துக்குத்தானே பிரச்னை என்று கருதி விடக் கூடாது. ஒட்டு மொத்தத் தமிழகமும் ஒன்றாக இணைந்து போராட வேண்டும்.இவ்வாறு வைகோ பேசினார்.
- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bebeto - Michigan,யூ.எஸ்.ஏ
24-ஆக-201221:13:04 IST Report Abuse
Bebeto நிறுத்தப்பா உன் வியாக்யானத்தை. நீ தமிழன் கிடையாது. உன் தாய் மொழி தெலுங்கு. நீ போய் உன் வேலையை பாரு - ஜெயில் உடைத்து, கைதிகளை படகில் ஏத்தி, யாழ்பாணத்திற்கு அனுப்பு.
Rate this:
Share this comment
Haris David - Singapore,சிங்கப்பூர்
01-செப்-201223:28:45 IST Report Abuse
Haris Davidவாயை மூடுடா...
Rate this:
Share this comment
Cancel
Babu Rajendran - Sharjah,ஐக்கிய அரபு நாடுகள்
24-ஆக-201214:51:02 IST Report Abuse
Babu Rajendran பொறுத்திருந்து பாருங்கள். வரும் காலம் அது வைகோவின் காலம்
Rate this:
Share this comment
Cancel
Babu Rajendran - Sharjah,ஐக்கிய அரபு நாடுகள்
24-ஆக-201214:50:13 IST Report Abuse
Babu Rajendran சக்திவேல் உனக்கு வைகோவை பத்தி என்ன தெரியும், நாவை அடக்கி பேசு
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X