எந்த பணியும் நடக்காமல் ஒரு வாரமாக முடங்கிய பார்லிமென்ட்

Updated : ஆக 24, 2012 | Added : ஆக 24, 2012 | கருத்துகள் (10)
Share
Advertisement

நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு தொடர்பாக, மத்திய கணக்கு தணிக்கை அலுவலகம் (சி.ஏ.ஜி.,) சமர்ப்பித்த அறிக்கையால், "பிரதமர் மன்மோகன் சிங் பதவி விலக வேண்டும்' என, எதிர்க்கட்சிகள் பிடிவாதம் செய்ததால், இந்த வாரம் முழுவதும் பார்லிமென்ட் நடவடிக்கைகள் முடங்கின. அரசு தரப்புக்கும், எதிர்க் கட்சிகளுக்கும் இடையிலான முட்டுக்கட்டை நீடிப்பதால், இனி வரும் நாட்களிலும், பார்லிமென்ட் நடக்குமா என்ற, சந்தேகம் எழுந்துள்ளது. நிலக்கரி சுரங்கங்களை ஏலத்தில் விடாமல், சில குறிப்பிட்ட தனியார் நிறுவனங்களுக்கு, கொள்ளை லாபம் கிடைப்பதற்காக, ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், அதனால், அரசுக்கு 1.86 லட்சம் கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், சி.ஏ.ஜி., தன் அறிக்கையில் சுட்டிக் காட்டியது.


கடும் அமளி:

இதைப் பிரச்னையாக்கி, எதிர்க்கட்சியான பா.ஜ., கடுமையாக குரல் கொடுத்து வருகிறது. இந்த வாரம் முழுவதுமே, இந்தப் பிரச்னை ஆட்டிப் படைத்து வந்த சூழ்நிலையில், நேற்றும் பார்லிமென்டில் கடும் அமளி நிலவியது. காலையில் இருந்து மூன்று முறை, அடுத்தடுத்து சபைகள் ஒத்திவைக்கப்பட்டதால், கேள்வி நேரத்தை எடுத்துக் கொள்ள முடியவில்லை. பூஜ்ஜிய நேரத்தையும் எடுத்துக் கொள்ள இயலாமல் போனது. சபை நடவடிக்கைகள் எதையுமே, நடத்த முடியாத அளவுக்கு எதிர்க்கட்சிகளின் ஆக்ரோஷம் இருந்தது. லோக்சபாவில், பா.ஜ., - எம்.பி.,க்கள் அனைவரும், சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டபடி கோஷங்கள் எழுப்பினர். அ.தி.மு.க.,வைப் பொறுத்தவரை, நேற்று சின்ன மாற்றம் தெரிந்தது. எப்போதும் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு வந்த அ.தி.மு.க., - எம்.பி.,க்கள், நேற்று பா.ஜ., - எம்.பி.,க்களோடு சேராமல், தனியாக நின்று கோஷங்கள் எழுப்பினர்.


தனித்தன்மை:

பின், இதுகுறித்து அ.தி.மு.க., வட்டாரங்களை விசாரித்தபோது, அவர்கள் கூறியதாவது: நிலக்கரி ஊழல் பிரச்னையில், அரசுக்கு எதிராக இருக்கிறோம் என்பது உண்மை. அதேநேரத்தில், நாங்கள் பா.ஜ.,வுடன் இவ்விஷயத்தில், இணைந்து கைகோர்த்திருப்பதாக பலரும் கருதுகின்றனர். டில்லியில் இருந்து வெளியாகும், சில ஆங்கில பத்திரிகைகளில், இதுபோன்ற செய்திகள் வந்துள்ளன. எங்களது தனித்தன்மை எப்போதும் காப்பாற்றப்படும். ஆகவேதான் தள்ளி நின்றோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

சபையில், நடந்த ரகளையின் போது, வழக்கம்போல, இடதுசாரி கட்சிகளும் கடும் குரல் எழுப்பின. அவரவர் இருக்கைகளில் இருந்து எழுந்து நின்றவாறே, குரல் கொடுத்தனர். யாரும் சபாநாயகர் இருக்கையை முற்றுகை இடவில்லை. ஆளும் கட்சி எம்.பி.,க்களில் சிலர், எதிர்க்குரல் கொடுத்தபடி நின்றனர். லோக்சபாவில் இருந்தது போலவே, ராஜ்யசபாவிலும் நிகழ்வுகள் இருந்தன. நிலைமையை சரி செய்வதற்காக, நேற்று முன்தினம் அனைத்துக் கட்சி தலைவர்களையும், சபாநாயகர் அழைத்திருந்தார். இந்த கூட்டத்திற்கு, முக்கிய கட்சிகள் எதுவும் போகாமல் புறக்கணித்து விட்டன.


எதிர்பார்ப்பு:

ராஜ்யசபா தலைவரும், இதுபோன்ற ஆலோசனைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தார். அந்தக் கூட்டத்தாலும் எந்த பயனும் ஏற்படவில்லை. அதனால், நேற்று இதுபோன்ற எந்தவொரு சமாதான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த வாரம் முழுக்க, இவ்வாறு கழிந்துவிட்ட நிலையில், அடுத்த வாரம் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு கிளம்பி உள்ளது. தங்களது கட்சியின் இளம் எம்.பி.,க்களிடம் நேற்று முன்தினம் பேசிய சோனியா, "எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு பதிலடி தர வேண்டும்' என்று கூறியிருந்தார். சோனியாவின் இந்த பேச்சால், பா.ஜ., - எம்.பி.,க்கள் மேலும் தீவிரம்அடைந்துள்ளதாக தெரிகிறது.


முலாயம் யார் பக்கம்?

இருதரப்புக்கும் இடையில், சமாதான நடவடிக்கை வரலாம் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில், சோனியாவின் இந்தப் பேச்சு அதை கெடுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது. எனவே, சமாதானத்திற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாக இருப்பதாகவே தெரிகிறது. இப்போதுள்ள சூழ்நிலையில், முலாயம் சிங் யார் பக்கம் செல்லவுள்ளார் என்பதை வைத்தே பிரச்னை முடியுமா, முடியாதா என்று தெரியும். அவரை எதிர்க்கட்சிகளுடன் போக விடாமல் செய்ய, காங்கிரஸ் பெரும் முயற்சி எடுத்து வருகிறது. அவரோ எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கிறார். ஆனாலும், அவர் காங்கிரஸ் பக்கம் போவதற்கு வாய்ப்பு இருப்பதாகவே, எதிர்க்கட்சிகள் கருதுகின்றன. அவர் காங்கிரஸ் பக்கம் போனாலுமே, நிலக்கரி பிரச்னையை அப்படியே வைத்து இருக்க இடதுசாரிகள் விரும்புகின்றன. காங்கிரசுடன் ரொம்பவும் நெருக்கம் பாராட்டாமல், அதேசமயம் இப்பிரச்னையில் நெருக்கடியை கொடுத்துக் கொண்டே இருக்கவும், இடதுசாரிகள் விரும்புவதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.


- நமது டில்லி நிருபர் -Advertisement
வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
g.s,rajan - chennai ,இந்தியா
25-ஆக-201221:52:54 IST Report Abuse
g.s,rajan பாராளுமன்றத்தை நடத்தி மூன்று வருஷமா இதுவரை என்ன கிழிச்சாங்க, இனிமே பெறுசா என்னத்தை கிழிச்சுடப்போறாங்க. ஏறிய விலை வாசி குறையவில்லை,ஏற்றிய எரிபொருள் விலை குறையவில்லை. ,மக்கள் படும் கஷ்டம் குறையாமல் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது . இது வரை ஊழல் பண்ணுனதா அனைத்து இந்திய இந்திரா காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஒத்துக்கிட்டதே இல்லை ,இனிமே புதுசா ஒத்துக்கிட போறாங்களாக்கும்.அதெல்லாம் மாட்டாங்க அவங்க எல்லோரும் உத்தம புத்திரர்கள் ஆக்கும், அவங்க எந்த தப்பையும் பண்ணவே இல்லை ,ஊழலுக்கும் அவர்களுக்கும் ரொம்ப ரொம்ப தூரம் .அவங்களை தவிர மத்தவங்க எல்லாரும் அயோக்கியர்கள் ,ஏமாற்றுக்காரர்கள், உலக மகா பித்தலாட்டக்காரர்கள்சரிதானே . ஜி.எஸ்.ராஜன் சென்னை .
Rate this:
Cancel
Ramesh Rajendiran - CHENNAI,இந்தியா
25-ஆக-201219:31:03 IST Report Abuse
Ramesh Rajendiran மேற்படி பிரச்சினையில் உள்ள அனுமதிகள் எல்லாவற்றையும் ரத்து செய்து விட்டால் கதை முடிந்தது. இப்படிதான் ராஜா வின் 2G கேசில் ஆரம்பத்தில் நஷ்டமே இல்லை என்று சொன்னார்கள்,
Rate this:
Cancel
Kavee - Jeddah,சவுதி அரேபியா
25-ஆக-201217:25:34 IST Report Abuse
Kavee ரொம்ப சந்தோஷமா இருக்குமே இப்போ எல்லோருக்கும் ..... நிம்மதிதானே .... இதக்குத்தானே ஆசை பட்டாய் பாலகுமாரா .... என் தேசத்தின் பணம் இப்படி எல்லாமா நாசமா போறது .... இவங்களுக்கு அறிவு என்பது மருந்துக்கு கூட கிடையாதா ???
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X