கூடங்குளம்: கூடங்குளம் அணு உலையை செயல்படத் துவங்க விடாமல், இத்தனை நாட்களாக, போராட்டம், வன்முறை எனத் தடுத்த, உதயகுமார் உள்ளிட்டோர், நேற்று காலை முதல், இருக்கும் இடம் தெரியாமல், பதுங்கி விட்டனர். அணுமின் நிலையம் இருக்கும் பகுதியில், அமைதி திரும்பிஉள்ளதால், உலையை இயக்குவதற்கான ஆயத்தப் பணிகள் முழு வேகத்தில் நடக்கத் துவங்கியுள்ளன.
நெல்லை மாவட்டம், கூடங்குளம் அணுமின் நிலையத்தில், மின் உற்பத்தி யூனிட்கள் இரண்டு உள்ளன. 14 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள, இவற்றின் உற்பத்தித் திறன், தலா, 1,000 மெகாவாட். இதை நிர்மாணித்து, செயல்படுத்துவதில், விஞ்ஞானிகள் முழு மூச்சுடன் செயல்பட்டு வரும் வேளையில், இந்த அணு உலை செயல்படத் துவங்கினால், கூடங்குளத்தில் உள்ள மக்களுக்கு பாதிப்பு ஏற்படும்; பூகம்பம் ஏற்பட்டால், அணுக் கதிர் பரவி கேடு ஏற்படும் என்றெல்லாம் கூறி, "அணு உலை எதிர்ப்பாளர்கள்' என்று கூறிக் கொள்ளும் சிலர், அப்பாவி மக்களைத் தூண்டி விடும் வேலையில் ஈடுபட்டனர். அணு உலையால் எந்த பாதிப்பும் ஏற்படாது என, முன்னாள் ஜனாதிபதியும், அணு விஞ்ஞானியுமான அப்துல் கலாம் உட்பட பலர், ஆராய்ந்து, அரசுக்கு அறிக்கை கொடுத்த பின்னரும், வெளிநாடுகளில் இருந்து பணம் பெரும் சிலர், இந்த உலையை செயல்படுத்த விடாமல் முட்டுக்கட்டை போடத் துவங்கினர். அப்பகுதியில் உள்ள மக்கள், இனி, அங்கே வாழவே முடியாது என, பீதியைக் கிளப்பி, மீனவர்களையும் தூண்டி, போராட்டத்தில் ஈடுபட்டனர். பல மாதங்களாக நடந்த போராட்டத்தின் உச்சக்கட்டமாக, கடந்த வாரம், ஆர்ப்பாட்டத்தில்
ஈடுபட்டனர். போலீசார் சுற்றி வளைத்ததும், பொதுமக்களையும், அவர்களின் குழந்தைகளையும் கேடயமாக வைத்து, கடலில் குதித்துத் தப்பி ஓடினர். இதில் குறிப்பிடத்தக்கவர், உதயகுமார். ஓர் ஆண்டாக, கூடங்குளத்தை அடுத்த, இடிந்தகரையில், "டென்ட்' அமைத்து, உண்ணாவிரதம் இருப்பதாகக் கூறி, ஆட்டம் காட்டி வருபவரும் இவரே! தன்னைத் தானே, "அரசியல் ஹீரோ'வாக்கிக் கொள்ள முயற்சித்த அவர், தன் மனைவி, குழந்தைகளை மட்டும் விடுத்து, மற்ற அனைத்து வீடுகளிலும் உள்ள, அப்பாவிக் குழந்தைகளைக் கூட விட்டு வைக்காமல், போராட்டத்தில் ஈடுபட வைத்தார். இவர் மீது பல பிரிவுகளில் வழக்கு பதிவானதும், தலைமறைவு வேலைகளிலும் ஈடுபட்டார். நேற்று முன்தினம் முழுக்க, அவ்வப்போது தலை காட்டுவதும், படகில் தப்பி ஓடி ஒளிவதுமாக இருந்தார். தென் மண்டல, வடக்கு மண்டல ஐ.ஜி.,க்கள், ஏ.டி.ஜி.பி.,க்கள் முகாமிட்டு, தீவிரமாகக் கண்காணிக்கத் துவங்கியதும், "சரண்டர் ஆகப் போகிறேன்' என அறிவித்து, பின், வட மாநில சமூக சேவகர் என்ற பெயரில், "உலா' வரும், அரவிந்த் ஹெஜ்ரிவால்,
"அறிவுரை'ப்படி, "சரண்டர்' ஆகாமல் தப்பித்து, தலைமறைவானார். இப்படி இவர் ஒரு பக்கம் நாடகம் ஆடிக் கொண்டிருக்க, கூடங்குளத்தில், நேற்று முன்தினம் முதல், அமைதி திரும்பியது. அணு உலையை இயக்குவதற்கான ஆயத்தப் பணிகளை, விஞ்ஞானிகள் முழு வீச்சில் துவக்கி விட்டனர். இன்னும் இரண்டு அல்லது மூன்று வாரங்களில், உற்பத்தி துவங்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.