திருநெல்வேலி: அணு உலை பணிகள் முடிந்து திறந்து எப்போடா மின்சாரம் வரும் என பலரும் ஏங்கி கொண்டிருக்க திறக்க விட மாட்டோம் என கங்கனம் கட்டி பல போராட்டங்களை நடத்தி வரும் இப்பகுதியினர் கடல் படகுகள் மூலம் கடலுக்கு சென்று தண்ணீரில் கருப்புக்கொடி போராட்டம் நடத்தினர். இதற்கென காலையில் கடலுக்கு படகுகள் மூலமும் சிலர் நீந்தியபடியும் சென்றனர். கரையில் இருந்து அரை கிலோமீட்டர் தூரம் வரை செல்வர். அங்கிருந்து கோஷங்கள் எழுப்பினர்.
சில மணி நேரங்கள் அடையாளமாக நின்று போராட்டத்தை கைவிடுவதா அல்லது தொடர்ந்து நின்று போலீசார் அப்புறப்படுத்தும் வரை தொடர்ந்து போராட்டம் நடத்துவதா, அந்த நேரத்தில் ஒரு வன்முறையை உருவாக்கி மீண்டும் களேபரம ஏற்படுத்தலாமா என்று போராட்டக்குழுவினர் ஆளுக்கொரு யோசனை சொல்லி வருகின்றனராம். இதற்கிடையில் படகுகள் மூலம் அணுஉலை அருகே வரமுற்பட்டால் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர். கடலோர பதுகாப்பு படையினரும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சட்ட நெறிமுறையை மீறினர்:
உதயக்குமார் தலைமையிலான இந்த போராட்டக்குழுவினர் கடந்த காலத்தில் இது போன்று தான் நடத்தியுள்ளனர். ஒரு நாள் உண்ணாவிரதம் என்பர் பின்னர் தொடர்ந்து மேடை அருகேயே ஆக்கப்பறையுடன் சுடச்சுட பந்தி பரிமாறியதும் உண்டு. ஆனால் காலவரையற்ற போராட்டம் என சட்ட ஒழுங்கு பாதிக்கும் அளவிற்கு போகும். கடந்த 9 ம் தேதி அணு உலை முற்றுகை என அறிவித்து பேரணியாக வந்தவர்கள் அங்கேயே தங்கி விட்டனர். இவர்களை கலைந்து போங்கள் என்று கேட்டபோது மறுத்தனர். இதனையடுத்து அகற்றும்போதுதான் வன்முறை வெடித்தது. பொதுவாக முற்றுகை என்றால் புறப்பட்டு செல்லும் போது ஒரு குறிப்பிட்ட இடத்தில் போலீசார் கைது செய்வர். அவர்கள் கைதுக்குட்பட வேண்டும். ஆனால் இந்த அணுஉலை போராட்டக்காரர்கள் சட்ட நெறிமுறையை மீறினர். இந்நேரத்தில் போலீசாரை எதிர்க்கும்போது வன்முறை வெடித்தது.
காப்பி அடித்து தண்ணீர் போராட்டம் :
சமீபத்தில் கூட பிரதமர், மத்திய அமைச்சர் வீடுகள் முற்றுகையிட முயன்ற போது போலீசார் தடியடி மற்றும் தண்ணீர் பீய்ச்சி அடித்து விரட்டினர். ஒடிசா முதல்வர் பதவி விலக கோரி சட்டசபை முற்றுகை போராட்டம் நடத்தப்பட்டது. அப்போதும் தடியடி நடத்த வேண்டியதாயிற்று. மத்திய பிரதேசத்தில் ஓம்காரேஸ்வர் அணை மட்டத்தை உயர்த்தக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்து ஜல் சத்தியாகிராக ( தண்ணீருக்குள்ளே தொடர்ந்து நிற்பது) இந்த போராட்டம் வலுப்பெற்ற போது அரசு பணிந்தது. இதனை பார்த்து அருகில் உள்ள விவசாயிகளும் தத்தம் வேண்டிய அணைகள் அருகே பலரும் இந்த போராட்டத்தில் குதித்தனர். இவர்களை போலீசார் தண்ணீரில் இறங்கி அப்புறப்படுத்தினர். இதனை காப்பி அடித்து இந்த தண்ணீர் போராட்டத்தை அணுஉலை போராட்டக்காரர்கள் இன்று துவக்கினர். இந்த போராட்டத்தில் பெண்கள், ஆண்கள், குழந்தைகள் என 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தண்ணீரில் இறங்கி நிற்கின்றனர்.
இன்று கூடங்குளத்தில் நடத்தப்படும் கடலில் சத்தியாகிரகா போராட்டத்தை துவக்க விடாமல் ஆரம்பத்திலேயே கிள்ளி எறிய வேண்டும். இல்லாத பட்சத்தில் இந்த போராட்டமும் வன்முறைக்கு வித்திடுவதாக அமைந்துவிடும். குறிப்பாக 144 தடை உத்தரவு இருக்கும் போது இவர்களுக்கு இன்னும் போராட்டம் என்ற பெயரில் இவர்களுக்கு அனுமதி வழங்க கூடாது. அல்லது குறிப்பிட்ட கால அவகாசம் வகுக்கப்பட்டு அனுமதி வழங்க வேண்டும்.
ஒரு நாள் அடையாள போராட்டம் என்பர் பின்னர் தொடர்ந்து நாங்கள் கடலிலேயே இருப்போம் என்றால் இவர்களை அப்புறப்படுத்தும்போது வன்முறை வெடித்து விடும் அபாயம் உள்ளது. படகு மூலம் கூடங்குளம் அணுமின்நிலையத்தையும் நெருங்கி வர முயற்சிக்கக்கூடும். எனவே தமிழக அரசும், போலீசாரும், கடலோர படையினரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆரம்பத்தில் இந்த போராட்டத்தை தடுக்க முயற்சிகள் எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பு !