ஜேம்ஸ் பாண்ட்' பட பொன் விழா கொண்டாட்டம் ரசிகரை கிறங்கடித்த பின்னணி குரல் நாயகிக்கு தடை

Added : செப் 23, 2012
Share
Advertisement

லண்டன்:"ஜேம்ஸ் பாண்ட்' முதல் படம் வெளியாகி, ஐம்பது ஆண்டு ஆனதைக் கொண்டாடும் பொன் விழா நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள, அப்படங்களில் கதாநாயகியருக்கு பின்னணி குரல் கொடுத்த நிக்கி வான்டர் சில்லுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.


ரகசிய உளவாளி, "ஜேம்ஸ் பாண்ட் 007' கதாபாத்திரத்துடன் வெளியான படங்களில், அவருடன் ஜோடி சேர்ந்த கதாநாயகியரில், பலர் குரல் கேட்கச் சகிக்காதாம். இருந்தும், அவர்களின் குரலுக்கு ரசிகர்கள் கிறங்கிப் போய், கனவுக்கன்னியராய் நினைத்து, தூக்கி வைத்துக் கொண்டாடியதற்கு காரணமாக இருந்தவர் நிக்கி வான்டர் சில். இந்த உண்மை, பல கோடி ரசிகர்களுக்கு சமீப காலம் வரை, தெரியாமல் இருந்தது."ஜேம்ஸ் பாண்ட்' படவரிசையில் முதலில் வெளிவந்தது, "டாக்டர் நோ.' 1962ம் ஆண்டு வந்த இப்படத்தில், ஹனி ரைடராக நடித்த கதாநாயகி உர்சுலா ஆண்ட்ரஸ், கொஞ்சும் மொழியில் பேசி ரசிகர்களை கிறங்கடிப்பார்.


உண்மையில், சுவிஸ் - ஜெர்மன் மொழிகளின் கலப்பில், கட்டைக்குரலில் உர்சுலா பேசியது, படத் தயாரிப்பாளரை முகம் சுளிக்கச் செய்ததாம். இதற்கு தீர்வாக, பின்னணி குரல் கொடுக்கத் தேர்வானார், நிக்கி வான்டர் சில். அதன் பின், 1964ல் வெளியான, "கோல்ட் பிங்கர்' படத்தில், கனவுக்கன்னி ஷர்லி ஈடனுக்கு குரல் தந்தார் நிக்கி. பின், தொடர்ச்சியாக பல படங்களில் நிக்கியின் குரலே, "ஜேம்ஸ் பாண்ட்' பட நாயகியரின் பலமாக இருந்தது.


பல படங்களில் அவரது பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தாலும், இதுவரை எந்த பரிசும், அங்கீகாரமும் தரப்படாததால் மனம் நொந்து போய் இருக்கும் நிக்கி, மீண்டும் ஒரு புறக்கணிப்பால் அதிர்ந்து போய் உள்ளார்."ஜேம்ஸ் பாண்ட்' படங்கள் வெளிவந்து, 50 ஆண்டு ஆனதைக் கொண்டாடும் வகையில், அடுத்த மாதம் நடத்தப்பட உள்ள, பொன் விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்ள, நிக்கிக்கு அனுப்பப்பட்ட அழைப்பை, விழாக் குழுவினர் திரும்பப் பெற்றுள்ளனர்.


நிக்கியின் குரலால் புகழ் பெற்ற, "ஜேம்ஸ் பாண்ட்' கதாநாயகியரில் ஒருவரான, ஷர்லி ஈடன் தான் இந்த அவமதிப்பின் பின்னணியில் இருப்பது, தெரிய வந்துள்ளது. முன்னர் ஏற்பட்ட மனத்தாங்கல் காரணமாக, "நிக்கி வந்தால், தான் விழாவுக்கு வர முடியாது' என, ஷர்லி ஈடன் கண்டிப்பாகத் தெரிவித்ததால், அழைப்பை திரும்பப் பெற்றுள்ளனர்.அதோடு நில்லாமல், "ஜேம்ஸ் பாண்ட்' பட வெற்றிக்கு பங்களித்தோர் பட்டியலில் இருந்து நிக்கியின் பெயரை, "பாண்ட் ஸ்டார்' இணையதளத்தில் இருந்து, அதிரடியாக நீக்கியுள்ளனர். இது குறித்து கருத்து தெரிவிக்க, இணையதளம் மறுப்பு தெரிவித்துள்ளது.


ஷர்லி ஈடன் விவகாரத்தால், "ஜேம்ஸ் பாண்ட்' பட பொன் விழா மற்றும் அது தொடர்பான நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளக்கூடாது என, தடை விதிக்கப்பட்டுள்ளதை, தற்போது 77 வயதான நிக்கியும் வருத்தத்துடன் உறுதி செய்துள்ளார்.


Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X