இந்தியாவுக்கு இமாலய வெற்றி: ஹர்பஜன் "சுழலில்' இங்கிலாந்து காலி

Added : செப் 24, 2012 | கருத்துகள் (2)
Share
Advertisement
 இந்தியாவுக்கு இமாலய வெற்றி:  ஹர்பஜன் "சுழலில்' இங்கிலாந்து காலி

கொழும்பு: "டுவென்டி-20' உலக கோப்பை லீக் போட்டியில் அபாரமாக ஆடிய இந்திய அணி 90 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஹர்பஜன், பியுஷ் சாவ்லா "சுழலில்' சிக்கிய "நடப்பு சாம்பியன்' இங்கிலாந்து அணி பரிதாபமாக வீழ்ந்தது. அரைசதம் கடந்த ரோகித் சர்மாவும் வெற்றிக்கு கைகொடுத்தார்.இலங்கையில் நான்காவது "டுவென்டி-20' உலக கோப்பை தொடர் நடக்கிறது. நேற்று கொழும்புவில் நடந்த "ஏ' பிரிவு லீக் போட்டியில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதின.

ஜாகிர் ஓய்வு:இரு அணிகளுமே ஏற்கனவே "சூப்பர்-8' சுற்றுக்கு முன்னேறி விட்டதால், இப்போட்டியில் முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. இந்திய அணியில் ஜாகிர் கான், சேவக், அஷ்வினுக்கு பதிலாக டிண்டா, ஹர்பஜன், பியுஷ் சாவ்லா இடம் பெற்றனர். இங்கிலாந்து அணியில் சமித் படேல் நீக்கப்பட்டு, டிம் பிரஸ்னன் வாய்ப்பு பெற்றார். "டாஸ்' வென்ற இங்கிலாந்து கேப்டன் ஸ்டூவர்ட் பிராட் பீல்டிங் தேர்வு செய்தார்.சேவக் இல்லாத நிலையில், சோதனை ரீதியில் துவக்க வீரராக இர்பான் பதான் களமிறங்கினார். டெர்ன்பாக் வீசிய 2வது ஓவரில் காம்பிர் அடுத்தடுத்து 2 பவுண்டரி விளாசினார். ஸ்டீபன் "வேகத்தில்' இர்பான்(8) போல்டானார். அடுத்து வந்த விராத் கோஹ்லி பவுண்டரிகளாக அடித்தார். இவர் சுவான் "சுழலில்' 40 ரன்களுக்கு வெளியேறினார். சிறிது நேரத்தில் காம்பிரும்(45) அவுட்டாக, ரன் வேகம் குறைந்தது.

ரோகித் அதிரடி:கடைசி கட்டத்தில் ரோகித் சர்மா அதிரடியாக பேட் செய்தார். மறுபக்கம் கேப்டன் தோனி மந்தமாக ஆட, ஸ்கோர் எதிர்பார்த்த அளவுக்கு விரைவாக உயரவில்லை. பிராட் ஓவரில் ரோகித் 2 பவுண்டரி விளாசினார். பின் டெர்ன்பாக் வீசிய போட்டியின் 20வது ஓவரில் அடுத்தடுத்து ஒரு சிக்சர், பவுண்டரி அடித்த இவர், அரைசதம் கடந்தார்.

நல்ல "கேட்ச்':இதே ஓவரின் நான்காவது பந்தை தோனி தூக்கி அடித்தார். எல்லைக் கோட்டு அருகே ஹேல்ஸ் பிடித்தார். பின் தடுமாறிய இவர், எல்லைக் கோட்டை கடப்பதற்கு முன் சுதாரித்துக்கொண்டு, பந்தை மைதானத்துக்குள் எறிந்தார். இதனை பட்லர் பிடிக்க, தோனி(9 ரன், 8 பந்து) பரிதாபமாக அவுட்டானார். இந்திய அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 170 ரன்கள் எடுத்தது. ரோகித் சர்மா(33 பந்தில் 55 ரன்கள், 5 பவுண்டரி, 1 சிக்சர்), ரெய்னா(1) அவுட்டாகாமல் இருந்தனர்.

இர்பான் மிரட்டல்:சவாலான இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணிக்கு இர்பான் பதான் "ஷாக்' கொடுத்தார். இவர் வீசிய முதல் ஓவரில் ஹேல்ஸ் "டக்' அவுட்டானார். பாலாஜி வீசிய அடுத்த ஓவரில் கீஸ்வெட்டர் ஒரு சிக்சர், பவுண்டரி அடித்தார். மீண்டும் பந்துவீச வந்த இர்பான் இம்முறை "ஆபத்தான' லூக் ரைட்டை(6) வெளியேற்றினார்.

சுழல் ஜாலம்:பின் டிண்டா ஓவரில் கீஸ்வெட்டர் ஒரு சிக்சர், பவுண்டரி விளாச, சுழலுக்கு மாறினார் கேப்டன் தோனி. இதற்கு உடனடி பலன் கிடைத்தது. ஹர்பஜன் பந்தில் இயான் மார்கன்(2) போல்டானார். சாவ்லா வலையில் பேர்ஸ்டோவ்(1), தனிநபராக போராடிய கீஸ்வெட்டர்(35) சிக்கினர். தொடர்ந்து அசத்திய ஹர்பஜனிடம் பிரஸ்னன்(1), பட்லர்(11), சுவான்(0) சரண்டைந்தனர். டிண்டா "வேகத்தில்' கேப்டன் பிராட்(3) நடையை கட்டினார். டெர்ன்பாக்(12) ரன் அவுட்டானார். இங்கிலாந்து அணி 14.4 ஓவரில் 80 ரன்களுக்கு சுருண்டு படுதோல்வி அடைந்தது. அசத்தல் வெற்றி பெற்ற இந்திய அணி நான்கு புள்ளிகளுடன் "ஏ' பிரிவில் முதலிடம் பெற்றது. இந்தியா சார்பில் ஹர்பஜன் 4, சாவ்லா 2, இர்பான் 2 விக்கெட் வீழ்த்தினர்.ஆட்டநாயகன் விருதை ஹர்பஜன் தட்டிச் சென்றார்.

மிகச் சிறந்த வெற்றி:
நேற்று 90 ரன்களில் வென்ற இந்திய அணி, "டுவென்டி-20' வரலாற்றில் தனது மிகச் சிறந்த வெற்றியை பதிவு செய்தது. முன்னதாக 39 ரன்கள்(எதிர், இலங்கை, 2012, பல்லேகலே) வித்தியாசத்தில் வென்றிருந்தது.

குறைந்த ஸ்கோர்: இங்கிலாந்து அணி "டுவென்டி-20' அரங்கில் தனது குறைந்த ஸ்கோரை(80) பதிவு செய்து பெரும் அவமானத்தை சந்தித்தது. முன்னதாக 88 ரன்கள்( எதிர், வெ.இண்டீஸ், 2011, ஓவல்) எடுத்திருந்தது.

அம்மாவுக்கு அர்ப்பணம்:ஒரு ஆண்டுக்கு பின் சர்வதேச போட்டியில் பங்கேற்ற ஹர்பஜன் தனது திறமையை நிரூபித்தார். இவர் (4-2-12-4), "டுவென்டி-20' உலக கோப்பை அரங்கில் சிறப்பாக பந்துவீசிய வீரர்கள் வரிசையில் 5வது இடம் பெற்றார். முதலிடத்தில் இலங்கையின் மெண்டிஸ்(4-2-8-6, எதிர், ஜிம்ப்., 2012) உள்ளார். இது குறித்து ஹர்பஜன் கூறுகையில்,""கடந்த ஒரு ஆண்டு காலமாக இந்திய அணியில் இடம் பெறாமல் தவித்தேன். இந்த நேரத்தில் எனக்கு ஆதரவாக இருந்த எனது அம்மாவுக்கு ஆட்டநாயகன் விருதை அர்ப்பணிக்கிறேன்,''என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
karthi - dharapuram  ( Posted via: Dinamalar Android App )
24-செப்-201211:31:21 IST Report Abuse
karthi sing is king
Rate this:
Cancel
ashokkumar - paramakudi  ( Posted via: Dinamalar Android App )
24-செப்-201210:16:54 IST Report Abuse
ashokkumar தி்றமைக்கு என்றும் மதி்ப்புண்டு என்பதை நிருபத்துள்ளார்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X