பொது செய்தி

தமிழ்நாடு

சமஸ்கிருத ஓலை சுவடிகளின் "என்சைக்ளோபீடியா'உலக அளவில் பெரும் வரவேற்பு

Added : அக் 01, 2012
Advertisement

சமஸ்கிருதம், பாலி, பிராகிருதம் ஆகிய மொழிகளில் எழுதப்பட்ட ஓலைச்சுவடிகளில் உள்ள அனைத்துக்கும் விளக்கம், அவை எங்குள்ளன, எத்தனை பேர் பொழிப்புரை எழுதியுள்ளனர் போன்ற தகவல்களைக் கொண்ட, சென்னை பல்கலைக் கழகத்தின் சமஸ்கிருத, "என்சைக்ளோபீடியா' உலகளவில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.


இதுவரை வெளிவராத சமஸ்கிருத ஓலைச் சுவடிகளை அகர வரிசையில் தொகுத்து, அரும்பொருள் சொல்லகராதியான, "என்சைக்ளோபீடியா'வை, உருவாக்கியுள்ளனர். 40 தொகுப்புகள் வெளியிட திட்டமிட்டு, 25 தொகுப்புகளை வெளியிட் டுள்ளனர். மேலும், 15 தொகுப்புகளை வெளியிடும் பணியை, பல்கலையின் சமஸ்கிருத துறை மேற்கொண்டுள்ளது.


பல லட்ச ஓலைச் சுவடிகள்:உலகிலேயே மிகப் பழமையான பாரம்பரியத்தைக் கொண்ட இந்தியா, ஆதிகாலத்திலேயே, மதம், தத்துவம், இலக்கியம், ஜோதிடம், யோகா, கணிதம், ஆயுர்வேத மருத்துவம், கட்டடக்கலை, வாஸ்து, நிர்வாகம், வணிகம், அரசியல், நகரமைப்பு போன்ற துறைகளில் வளர்ச்சிபெற்று இருந்தது.


இத்துறைகள் தொடர்பான செயல்பாடுகள், சூத்திரங்களை, ஓலைச் சுவடியில் சமஸ்கிருதத்தில் எழுதியும் வைத்துள் ளனர்.நம்நாட்டின் அரிய சொத்துக்களான இந்த சமஸ்கிருத ஓலைச்சுவடிகள், நம் நாட்டில் மட்டுமல்லாமல், உலகெங் கிலும் பரவிக்கிடக்கின்றன. இவற்றை தொகுத்து, புதிய அட்டவணைப்படுத்தும் பணி நாடு முழுவதும் பல தரப்பினரால் செய்யப்படுகிறது. ஓலைச் சுவடிகளைத் தேடும் பணியில், பல லட்சம் ஓலைச்சுவடிகள் கிடைத்துள்ளன.


18ம் நூற்றாண்டில் துவங்கியது: இப்பணியின்போது, 1891ல் ஆவணப்படுத்தப்பட்ட சமஸ்கிருத ஓலைச்சுவடிகளின் தொகுப்பு கிடைத்துள்ளது. இவை, 1896 மற்றும் 1903ம் ஆண்டுகளில், கூடுதல் தொகுப்புகளைக் கொண்டு வெளியிட்டுள்ளது தெரிய வந்துள்ளது.


சென்னை பல்கலை:இதையடுத்து, சமஸ்கிருதத்தோடு சேர்த்து, புத்தர் காலத்தில் பாலி மொழியிலும், ஜைனர் காலத்தில் பிராகிருத மொழியிலும் எழுதப்பட்ட ஓலைச் சுவடிகளை ஆவணப்படுத்தும் பணி, 1935ல் துவங்கப்பட்டது. ஓலைச் சுவடிகள் பெரும்பாலும் தென்னிந்தியாவில் தான் அதிகம் இருப்பதால், சென்னையிலேயே இதைச் செய்யலாம் என, பஞ்சாப் பல்கலைக் கழக துணைவேந்தரும், சமஸ்கிருதத் துறை தலைவருமான ஏ.சி.ஊல்னர் கூறினார்.


14 தொகுப்புகள்:: இதையடுத்து, புதிய அட்டவணைப்படுத்தும் பணியை, சென்னை பல்கலைக்கழக சமஸ்கிருதத் துறை பேராசிரியர் ராகவன் மற்றும் உதவியாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் துவங்கினர். ஓலைச்சுவடிகளின் முதல் கொத்து, 1937ம் ஆண்டு வெளியிடப்பட்டது. 1949ம் ஆண்டு முதல் தொகுப்பு வெளியானது. மத்திய, மாநில அரசுகள், அமெரிக்காவின் ராக்பெல்லர் பவுண்டேஷன் ஆகியன இதற்கு நிதி அளித்தன. 2000ம் ஆண்டு வரை 14 தொகுப்புகள் வெளியிடப்பட்டன.


கடும் நிதி நெருக்கடியால், பணியை வேகமாக செய்ய முடியவில்லை. மத்திய அரசின் கலை மற்றும் பண்பாட்டுத்துறை, 10வது ஐந்தாண்டுத் திட்டத்தில் 75 லட்சம் ரூபாயை அளித்ததால், பணிகள் விரைவுபடுத்தப்பட்டது. இதுவரை, 25 தொகுப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. மேலும், 15 தொகுப்புகள் வெளியிட வேண்டியுள்ளது. இதில், 10 தொகுப்புகள் அச்சுக்குத் தயாராக உள்ளன.


விரல் நுனியில்:இத்திட்டம் குறித்து, சென்னைப் பல்கலைக்கழக சமஸ்கிருத துறை தலைவர் பேராசிரியர் சினிருதா தாஸ் கூறியதாவது:சமஸ்கிருதத்தில் நம் வாழ்வுக்குத் தேவையானதும், வாழ்வை நெறிப்படுத்துவதுமான தகவல்கள் ஏராளமாக உள்ளன. சமஸ்கிருதம் பெரும்பாலும் வழக்கத்தில் இல்லாததால், இம்மொழி அறிந்தவர்கள் மிகக் குறைவாக உள்ளனர். இதனால், சமஸ்கிருத ஓலைச் சுவடிகளில் உள்ளவற்றை யாரும் பொருட்படுத்துவதில்லை.


இந்நிலையை மாற்றி, சமஸ்கிருத ஓலைச்சுவடிகளில் உள்ளவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, "என்சைக்ளோபீ டியா'வை உருவாக்கி உள்ளோம். சமஸ்கிருதத்தில் ஒரு வார்த்தையைச் சொன்னால், அதனுடைய விளக்கம், அது தொடர்பாக எத்தனை ஓலைச்சுவடிகள் உள்ளன, அவை எங்கு உள்ளன, எந்த காலகட்டத்தைச் சார்ந்தவை, இதுவரை அதற்கு எத்தனை பொழிப்புரைகள் உள்ளன போன்ற அனைத்துத் தகவல்களையும் அட்டவணைப்படுத்தி உள்ளோம்.


இதன்மூலம், சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டுள்ள தகவல்களை விரல் நுனியில் வைத்துக்கொள்ள முடியும். இத்தொகுப்புக்கு, உள்நாட்டில் மட்டுமல்லாமல், வெளிநாடுகளிலும் மிகுந்த வரவேற்பு உள்ளது. 10 தொகுப்புகள் தயார் செய்யப்பட்டு அச்சிட பணம் இல்லாமல் உள்ளது. இருந்தாலும், இத்தொகுப்புகளுக்கு பலர், "ஆர்டர்' கொடுத்துள்ளனர்.


நிதி பற்றாக்குறையால், 29 பணியாளர்களின் எண்ணிக்கை 11 ஆக குறைந்து விட்டது. மத்திய அரசு இத்திட்டத்துக்கு அறிவித்த இரண்டு கோடி ரூபாயில், 1.50 கோடி ரூபாயை இன்னும் அளிக்காமல் உள்ளது. இத்தொகையை விரைவில் வழங்கினால், பணியை முடித்து விடலாம்.இவ்வாறு சினிருதா தாஸ் கூறினார்.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X