சீரமைக்கப்பட வேண்டிய தென்காசி சிற்றாறு சீர்‌பெறுமா ?| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சீரமைக்கப்பட வேண்டிய தென்காசி சிற்றாறு சீர்‌பெறுமா ?

Added : ஆக 06, 2010
Share
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களின் வரபிரசாதமாக இருப்பது தாமிரபரணி ஆறு. தாமிரபரணியின் கிளை ஆறாக சிற்றாறு விளங்குகிறது. "ஏழைகளின் ஊட்டி' என்று அழைக்கப்படும் குற்றாலம் சிற்றாறு தோன்றும் இடமாக இருக்கிறது. குற்றாலம் மெயின் அருவியில் துவங்கும் சிற்றாற்றில் காசிமேஜர்புரம் என்ற இடத்தில் ஐந்தருவியில் இருந்து வரும் சிற்றாறு இணைகிறது.செங்கோட்டை புளியரை மேற்கு

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களின் வரபிரசாதமாக இருப்பது தாமிரபரணி ஆறு. தாமிரபரணியின் கிளை ஆறாக சிற்றாறு விளங்குகிறது. "ஏழைகளின் ஊட்டி' என்று அழைக்கப்படும் குற்றாலம் சிற்றாறு தோன்றும் இடமாக இருக்கிறது. குற்றாலம் மெயின் அருவியில் துவங்கும் சிற்றாற்றில் காசிமேஜர்புரம் என்ற இடத்தில் ஐந்தருவியில் இருந்து வரும் சிற்றாறு இணைகிறது.செங்கோட்டை புளியரை மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து உற்பத்தியாகி வரும் ஹரிகரா நதியில் குண்டாறு அணையில் இருந்து உற்பத்தியாகி வரும் குண்டாறு செங்கோட்டை பார்டரில் இணைகிறது. இதன் பின்னர் ஹரிகரா நதி தென்காசியில் சிற்றாற்றில் இணைகிறது. பழையகுற்றாலத்தில் உற்பத்தியாகி வரும் அழுதகன்னி ஆறு தென்காசிக்கு கிழக்கே சிற்றாற்றில் சங்கமமாகிறது.சிற்றாற்றிலிருந்து தென்காசி, செங்கோட்டை, வீரகேரளம்புதூர், ஆலங்குளம் தாலுகா பகுதிகளில் உள்ள பெரும்பான்மையான குளங்களுக்கு தண்ணீர் செல்கிறது. இதன் மூலம் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாசன வசதியை பெறுகிறது. மேலும் இப்பகுதிகளில் நிலத்தடி நீருக்கு ஆதாரமாகவும் சிற்றாறு விளங்குகிறது.தென்காசி காசிவிசுவநாதர் கோயில் அருகே முன்பு பாய்ந்தோடிய சிற்றாற்றை பண்டைய கால குறுநில மன்னர்கள் சிறிது தூரம் தெற்கே திசை திருப்பி பாய்ந்தோட செய்ததாக வரலாறு கூறுகிறது. தற்போது சிற்றாறு மாசு படிந்து கால்வாய் போல் காட்சி அளிக்கிறது. சிற்றாற்றின் கரையின் இருபுறமும் அதிகளவில் ஆக்ரமிப்பு செய்யப்பட்டுள்ளது. சிற்றாற்றின் படித்துறை பகுதிகளில் அதிகளவில் ஆகாய தாமரையின் ஆக்ரமிப்பு உள்ளது.மழை இல்லாத காலத்தில் சிற்றாறு வறண்டு காணப்படும். அப்போது ஆற்றில் ஆங்காங்கே தேங்கி கிடக்கும் தண்ணீர் சாக்கடை நீராக மாறி விடுகிறது. மேலும் சிற்றாற்றில் தென்காசி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கழிவுநீர் கலந்து விடுகிறது. இதன் காரணமாக சிற்றாற்றை "மினி கூவம்' என்றே அழைக்க தோன்றும்.குற்றாலத்தில் உள்ள பெரும்பான்மையான கட்டடங்களில் உள்ள செப்டிக் டேங் கழிவுகள் நேரடியாக சிற்றாற்றில் கலந்து விடுகிறது. இதனால் காசிமேஜர்புரம், இலஞ்சி பகுதியில் வயல்களில் வேலை செய்யும் விவசாயிகள் தோல் நோயால் அவதிப்படுகின்றனர். இவற்றை எல்லாம் தடுத்து சிற்றாற்றை தூய்மைபடுத்த வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சிற்றாற்றை தூய்மைபடுத்த மத்திய அரசு உதவியுடன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் அந்த நிதி முறையாக பயன்படுத்தப்படாததால் திரும்பி விட்டது. இதனை மக்கள் பிரதிநிதிகளும் தடுத்து நிறுத்தவில்லை.சிற்றாற்றை தூய்மை படுத்தவும், ஆற்றின் கரையை பலப்படுத்தி ஆங்காங்கே தடுப்பணை கட்டி குளங்களுக்கு தனி கால்வாய் மூலம் தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கவும் அரசு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். இதனால் நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் பாசன வசதி பெறுவதுடன் பொதுமக்களின் குடிநீர் பிரச்னைக்கும் தீர்வு ஏற்படும்.குற்றாலம் அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் போது சிற்றாற்றில் அதிகளவில் தண்ணீர் வீணாக சென்று விடுகிறது. கடந்த 1992ம் ஆண்டு குற்றால அருவிகளில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் சிற்றாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. அப்போது பல லட்சம் பொருளாதார சேதம் ஏற்பட்டது. ஆற்றின் கரையோரம் இருந்த கட்டடங்கள் இடிந்து விழுந்தன. இதுபோன்ற பாதிப்பு இனி வருங்காலங்களில் ஏற்படாமல் இருக்க தகுந்த முன்னேற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.சிற்றாற்றில் தடுப்பணைகள் கட்டப்பட்டால் கூடுதல் பாசன வசதியை பெறலாம். தென்காசியில் சற்று உயரமான தடுப்பணை ஏற்படுத்தினால் குற்றால சீசன் காலத்தில் இங்கு சுற்றுலா பயணிகளின் பொழுது போக்கிற்காக படகு சவாரிக்கும் ஏற்பாடு செய்யலாம். இதனால் சுற்றுலா வருமானம் அதிகரிக்கும்.சிற்றாறு மாசுபடுவதை தடுத்து அதனை சீரமைக்க உரிய முயற்சிகளை துணை முதல்வர் ஸ்டாலின் மேற்கொண்டால் சிற்றாற்றின் வரலாற்றில் அவர் இடம் பிடிப்பதோடு நெல்லை மாவட்ட விவசாயிகள், பொதுமக்கள் மனதிலும் இடம் பெறுவார் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.


Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X