தமிழ்நாடு

கூடன்குளம் முதல் அணுஉலையில் யுரேனியம் நிரப்பும் பணி நிறைவு

Added : அக் 06, 2012 | கருத்துகள் (1)
Share
Advertisement

வள்ளியூர் : கூடன்குளம் முதல் அணுஉலையில் யுரேனியம் எரிபொருள் நிரப்பும் பணி நிறைவடைந்துள்ளது. விரைவில் மின்உற்பத்தி தொடங்கப்படுவதற்காக முன்னேற்பாடுகள் நடந்து வருகிறது.
கூடன்குளத்தில் ரஷ்யநாட்டு உதவியுடன் 13 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தலா ஆயிரம் மெகாவாட் மின்உற்பத்தி திறன் கொண்ட இரண்டு அணுஉலைகள் அமைக்கப்பட்டு வருகிறது. இதில் முதல் அணுஉலையின் கட்டுமான பணிகள் முடிவடைந்து மின்உற்பத்திக்கு தயாரான நிலையில் இருந்தபோது அணுஉலை எதிர்ப்பாளர்கள் நடத்திய பல்வேறு கட்ட போராட்டங்களினால் மின்உற்பத்தி பணி காலதாமதமாகி வந்தது. இந்நிலையில் ஜப்பான் நாட்டில் புகுஷிமா அணுமின் நிலைய சம்பவத்திற்கு பிறகு இந்தியாவில் உள்ள அணுமின் நிலையங்களில் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் அணுஉலைகளில் பல்வேறு ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகிறது.
அதன்படி அனைத்து அணுமின் நிலையங்களையும் ஆய்வு செய்த இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் அணுஉலையில் மேற்கொள்ளப்பட வேண்டிய 17 அம்ச பாதுகாப்பு நடவடிக்கைகளை பரிந்துரை செய்தது. அவற்றில் 11 பரிந்துரைகள் கூடன்குளம் அணுமின் நிலையத்தில் பூர்த்தி செய்யப்படவில்லை என கூறி கூடன்குளம் முதல் அணுஉலையில் யுரேனியம் எரிபொருள் நிரப்ப தடை விதிக்க வேண்டும் என்று பூஉலகின் நண்பர்கள் என்ற அமைப்பை சேர்ந்த சுந்தரராஜன் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்திருந்தார். அந்த மனு குறித்து விசாரித்த நீதிபதிகள் அணுஉலையில் யுரேனியம் எரிபொருள் நிரப்ப தடை விதிக்க முடியாது என கூறி இந்த வழக்கை செப்.20,27ம் தேதிகளில் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது அவர்கள் கூடன்குளம் பகுதி மக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் அணுஉலை பணிகளை நிறுத்தி வைக்கவும் தயங்க மாட்டோம் என்று எச்சரித்தனர். அதன்பின்பு அடுத்த கட்ட விசாரணையை ஒத்தி வைத்தனர். கூடன்குளம் அணுமின் நிலையத்தில் இந்திய அணுசக்தி கழகம் சார்பில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு குறித்து சுப்ரீம் கோர்ட் கேட்டுள்ள கேள்விகளுக்கு மத்திய அரசும், இந்திய அணுசக்தி கழகமும் இன்று பதில் மனு தாக்கல் செய்ய இருக்கின்றன.ஆனால் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் பாதுகாப்பைதான் பலப்படுத்த சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. ஆனால் யுரேனியம் எரிபொருள் நிரப்ப எந்தவித தடையும் விதிக்கவில்லை. இதனால் கூடன்குளம் முதல் அணுஉலையில் யுரேனியம் நிரப்பும் பணி இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதலோடு கடந்த செப்.19ம் தேதி முதல் அணுஉலையில் செரியூட்டப்பட்ட யுரேனியம் நிரப்பும் பணி துவங்கியது.
இந்த பணியில் ரஷ்ய விஞ்ஞானிகளுடன் இந்திய அணுசக்தி கழக விஞ்ஞானிகள் மேற்பார்வையில் முதல் அணுஉலையில் 75 டன் எடை கொண்ட 163 எரிகோல்களில் செரியூட்டப்பட்ட யுரேனியம் நிரப்பும் பணி அக்.1ம் தேதியோடு நிறைவடைந்தது. யுரேனியம் நிரப்பபட்ட பணி நிறைவைடைந்ததை அடுத்து இதன் அறிக்கையை இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இதையடுத்து கிரிட்டிக்காலிட்டி எனப்படும் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி வழங்கும். அதன்பின்பே மின்சாரம் தயாரிக்கும் நிலைக்கு முதல் அணுஉலை தயாராகும். அதற்கு முன்பாக அணுஉலை பாதுகாப்பு, கதிர்வீச்சு கட்டுபாடு உட்பட 5 கட்ட சோதனைகளை நடத்த வேண்டியுள்ளது. இறுதியாக இந்திய மற்றும் ரஷ்ய விஞ்ஞானிகள் கொடுக்கும் அறிக்கையை ஆய்வு செய்த பின்பு சர்வதேச அணுசக்தி ஒழுங்குமுறை வாரியம் மின்உற்பத்திக்கு அனுமதி வழங்கும்.
அதன்பின்புதான் மின்உற்பத்தி தொடங்கப்படும். ஆனால் மின்உற்பத்தி தொடங்குவதற்கான நாட்கள் எதுவும் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இதுகுறித்து அணுமின்நிலைய விஞ்ஞானி ஒருவர் கூறும்போது:- ""கூடன்குளம் அணுமின் நிலைய முதல் அணுஉலையில் கடந்த 19ம் தேதி யுரேனியம் எரிபொருள் நிரப்பும் பணி தொடங்கியது. இப்பணி கடந்த 1ம் தேதியோடு நிறைவடைந்தது. சுமார் 20 நாட்கள் நடக்க வேண்டிய இப்பணி எந்தவித பிரச்னையும் இல்லாததால் 13 நாட்களிலேயே வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது.
இந்திய அணுஉலைகளில் வி.வி.இ.ஆர். எனப்படும் நவீன முறையில் வடிவமைக்கப்பட்ட அணுஉலைகளில் கூடன்குளம் அணுஉலையும் ஒன்றாகும். அப்படிப்பட்ட இந்த அணுஉலையில் யுரேனியம் எரிபொருள் நிரப்பியது எங்களுக்கு புதிய அனுபவமாக உள்ளது. முதல் அணுஉலையில் 163 எரிகோல்கள் நிரப்பப்பட்டு பாதுகாப்பாக மூடப்பட்டுள்ளது'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X