சென்னை : "காங்கிரஸ் கட்சியின் விதிகளை மீறி, கூட்டணி பற்றி தலைவர்கள் யாரும் பேசக் கூடாது' என, தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு எச்சரிக்கை விடுத்து உள்ளார். தி.மு.க., ஆட்சி குறித்து இளங்கோவன் தெரிவித்த குற்றச்சாட்டு, முதல்வருக்கு "வலி' ஏற்படுத்தியதால், டில்லி மேலிடத்தின் உத்தரவின் பேரில், காங்கிரஸ் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
ஈரோட்டில் கடந்த 4ம் தேதி நடந்த மாவட்ட காங்கிரஸ் கூட்டத்தில், முன்னாள் மத்திய அமைச்சர் இளங்கோவன், தி.மு.க., ஆட்சி பற்றி கடுமையாக பேசினார். "இளங்கோவனின் பேச்சு தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணிக்கு வலி ஏற்படுத்துவதாக அமைந்து உள்ளது' என, முதல்வர் கருணாநிதி தனது கேள்வி- பதில் அறிக்கையில் தெரிவித்தார். மத்தியில் தி.மு.க., ஆதரவுடன் ஐக்கிய முற் போக்கு கூட்டணி ஆட்சி நடக்கிறது. தி.மு.க.,வுடன் உள்ள கூட்டணியில் அதிருப்தி ஏற்பட்டால், மத்திய அரசுக்கு தி.மு.க., அளித்து வரும் முழு ஆதரவில் இன்று உள்ள நெருக்கம் குறைந்து விடும் என, காங்கிரஸ் மேலிடம் கருதியது. இதையடுத்து, தி.மு.க., கூட்டணிக்கு எதிராக தமிழக காங்கிரஸ் தலைவர்கள் எந்த கருத்தையும் தெரிவிக்க வேண்டாம் என, டில்லி மேலிடம் உத்தரவிட்டது.
இது குறித்து தமிழக காங்., தலைவர் தங்கபாலு, சத்தியமூர்த்திபவனில் நிருபர் களிடம் கூறியதாவது: காங்கிரஸ் - தி.மு.க., கூட்டணி வலிமை பெறுவதற்குரிய கவசமும், வலிக்கு நிவாரணமும் விரைவில் கிடைக்கும். காங்கிரஸ் - தி.மு.க., கூட்டணி மிக வலிமையானது. மத்திய அரசில் அங்கம் வகிக்கும் தி.மு.க., மாநில அரசிலும், மத்திய அரசிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்தக் கூட்டணி வலிமையாக இருப்பதற்கு மாநில காங்கிரஸ் தலைவர் என்ற முறையில் என்னால் முடிந்தவற்றை சிறப்பாக செய்வேன். சில சங்கடங்கள் இருந்தால் அதை தவிர்க்க முயற்சி செய்வேன். காங்கிரஸ் கட்சியின் விதிகளை மீறி, கூட்டணி பற்றி யாரும் பேசக் கூடாது. உள்அரங்கில் பேசும் விஷயங்களை பொது மேடையில் யாரும் இனி பேசக் கூடாது. காங்கிரஸ் கட்சியின் சிறப்பை மட்டுமே பேச வேண்டும். இவ்வாறு தங்கபாலு கூறினார்.
காங்கிரசாருக்கு தங்கபாலு விடுத்துள்ள எச்சரிக்கை, முதல்வரின் வலிக்கு நிவாரணமாக அமையும் என கூட்டணி வட்டாரத்தில் எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்தகட்டமாக, காங்கிரசின் முக்கிய தலைவர்கள், முதல்வரை நேரில் சந்தித்து சமாதானம் செய்யவும் ஏற்பாடுகள் நடப்பதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே, இந்த சர்ச்சைக்கு காரணமான இளங்கோவனும், முதல்வர் மனதைப் புண்படுத்தும் எண்ணம் தனக்கு இல்லை, காங்கிரசாரும், மக்களும் சந்தோஷமாக இருக்க வேண்டும்' என்றும் கருத்து தெரிவித்திருக்கிறார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE