ஈரோடு: ""குறைகளை சுட்டிக் காட்டுவதால் காங்கிரஸ், தி.மு.க., கூட்டணி உடையாது,'' என, முன்னாள் மத்திய இணையமைச்சர் இளங்கோன் கூறினார்.
ஈரோட்டில் ஆகஸ்ட் 4ம் தேதி காங்கிரஸ் கூட்டம் நடந்தது. அப்போது பேசிய இளங்கோவன், தி.மு.க., அரசை, "மைனாரிட்டி அரசு' என, விமர்சித்தார். பல்வேறு குற்றச்சாட்டுகளையும் முன்வைத்தார். தமிழகத்தில் மத்தியரசின் திட்டங்களே முழுமையாக செயல்படுத்தப்படுகின்றன. தமிழக அரசு அறிவித்துள்ள வீட்டு வசதி திட்டத்துக்கு, மத்திய அரசு 75 சதவீதம் பங்களிப்பு வழங்கிய போதும், இத்திட்டத்துக்கு, "கலைஞர் வீட்டு வசதி திட்டம்' என பெயர் வைத்துள்ளனர்.
தி.மு.க.,வுக்கு ஆதரவளிக்கும் 36 காங்கிரஸ் எம்.எல்.ஏ.,வுக்கு ஒரு அமைச்சர் பதவி கூட இல்லை. ஆனால், 15 எம்.பி.,க்களை வைத்து, மத்தியில் ஐந்து மத்திய அமைச்சர் பதவிகளை பெற்றுள்ளனர். "108' இலவச ஆம்புலன்ஸுக்கு மத்தியரசு பணம் கொடுப்பது, சாதாரண மக்களுக்கும் தெரியும். மாநில அரசின் திட்டமாக இருந்தால், ஆம்புலன்ஸில் முதல்வர், துணை முதல்வர் படங்களை வைத்துவிடுவர் என, குறை கூறினார் இளங்கோவன்.
சட்டசபை தேர்தல் நெருங்கும் நேரத்தில் தி.மு.க.,வை பற்றி இளங்கோவன் விமர்சனம் செய்தது, காங்கிரஸ் - தி.மு.க., கூட்டணியை பிளவுபடுத்தும் என்ற பேச்சு உலாவியது. வீட்டு வசதி வாரியம் திட்டம் குறித்த இளங்கோவனின் புகாருக்கு, தமிழக முதல்வர் கருணாநிதி உடனடியாக பதிலளித்தார். இத்திட்டம், தமிழக அரசின் முழு நிதியுதவியால் மட்டுமே செயல்படுத்துப்படுகிறது என, முதல்வர் விளக்கமளித்தார். அத்துடன், இளங்கோவனின் புகார்கள் கூட்டணியை வலுப்படுத்தாது; வலிப்படுத்தும் என்றும், கூறியிருந்தார்.
இதுபற்றி, சென்னையில் உள்ள இளங்கோவனிடம் ஃபோனில் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் கூறியதாவது: தமிழகத்தில் செயல்படுத்தப்படும் பல திட்டங்களை பற்றி குறை கூறியிருந்தேன். வீட்டு வசதி வாரிய திட்டத்துக்கு மட்டுமே தமிழக முதல்வர் விளக்கமளித்துள்ளார். என்னை பொறுத்த வரை, முதல்வரின் மனதை புண்படுத்த வேண்டும் என்ற எண்ணமில்லை. தமிழக அரசியலில் மத்திய அரசின் பங்கு ஏராளமாக இருக்கிறது என்பது குறித்து, முதல்வரிடம் நேரில் பேச நேரம் கேட்டேன்; வாய்ப்பு கிடைக்கவில்லை.
தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணி வலிமையாக இருக்க வேண்டும் என்றால், காங்கிரஸாரும், மக்களும் சந்தோஷமாக இருக்க வேண்டும். கூட்டணியை பலப்படுத்துவது தான் என்னுடைய நோக்கமே தவிர, கூட்டணியை பலவீனப்படுத்துவது நோக்கமல்ல. இதனால்தான், கூட்டணியில் உள்ள சிறு, சிறு தவறுகளை சுட்டிக்காட்டுகிறேன். குறைகளை சுட்டிக் காட்டுவதால் கூட்டணி உடையாது. உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை வாபஸ் பெற வேண்டும். டில்லி முதல்வர் ஷீலா தீட்ஷித் செய்திருப்பது போல தமிழக அரசும் டீஸல் மீதான வரியை குறைக்க வேண்டும். காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களின் வீடுகளை இடிக்க கூடாது. இவ்வாறு இளங்கோவன் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE