அரசியல் செய்தி

தமிழ்நாடு

கூட்டணிக்காக மேடை பிரசாரம் மூலம் பேரம்: "காப்பி' அடிக்கிறார் விஜயகாந்த்

Updated : அக் 19, 2012 | Added : அக் 19, 2012 | கருத்துகள் (121)
Share
Advertisement

லோக்சபா தேர்தலுக்கு, அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வரும் நிலையில்,
"சீட் பேரத்தை அதிகரிப்பதற்காகவே, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், தமிழக முக்கிய கட்சிகளை, கடுமையாக விமர்சித்து வருகிறார். தனக்கென தனி பாணி உள்ளது என, விளம்பரப் படுத்திக் கொண்ட அவர், வட மாநிலத் தலைவர்கள் பாணியை பின்பற்றுகிறார்' என, அரசியல் வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தி.மு.க., - காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையேயான கூட்டணியில், சமீப காலமாக, விரிசல் அதிகரித்துள்ளது. இதனால், காங்கிரஸ் கட்சியை கழற்றி விட்டு, தே.மு.தி.க., தலைமையுடன் கூட்டணி அமைத்து, லோக்சபா தேர்தலை சந்திக்க, தி.மு.க., தலைமை, வியூகம் அமைத்தது.
இதற்காக, 12 சீட்கள் வரை தருவதாக, தே.மு.தி.க.,விற்கு, தி.மு.க., தலைமை, ரகசிய தூது அனுப்பியது. ஆனால், தே.மு.தி.க., தரப்பில் இருந்து, அதற்கு பதில் இல்லை. அதே நேரத்தில், காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகள் சிலர், தே.மு.தி.க.,வை, தங்கள் பக்கம் இழுக்க, காய் நகர்த்தினர். எந்தக் கட்சி பக்கம், தே.மு.தி.க., சாயும் என்ற கேள்வியும் எழுந்தது.
ஆனால், ரிஷிவந்தியம் தொகுதியில், நலத் திட்ட உதவிகள் வழங்கச் சென்ற
விஜயகாந்த், அ.தி.மு.க., - தி.மு.க., - காங்., ஆகிய, மூன்று கட்சிகளையும் கடுமையாக விமர்சித்தார். "இந்த கட்சிகளுக்கு மக்கள் ஓட்டுப் போடக் கூடாது' என, கூறி அதிர வைத்தார்.
இதனால், பா.ஜ.,வுடன், தே.மு.தி.க., கூட்டணி அமைக்கும் வாய்ப்பு இருப்பதாக, தகவல் வெளியானது. இந்நிலையில், அடுத்ததாக, நாகர்கோவிலில் நடந்த பொதுக் கூட்டத்தில், விஜயகாந்த், பா.ஜ.,வையும் விமர்சித்து பேசினார். அதே நேரத்தில், "தமிழகத்திற்கு நன்மை செய்யும் கட்சியுடன் கூட்டணி அமைப்போம்' என்ற வெடியையும் கொளுத்திப் போட்டார். அனைத்து கட்சிகளையும் விஜயகாந்த் விமர்சித்துள்ள நிலையில், அவர், எந்த கட்சியுடன் கூட்டணி அமைக்க நினைக்கிறார் என, தொண்டர்கள் சிந்திக்கத் துவங்கினர்.

இது குறித்து, தே.மு.தி.க., முன்னணி நிர்வாகி ஒருவரிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:
லோக்சபா தேர்தல், எப்போது நடக்கும் என்பது தெரியாது. இந்த நேரத்தில், யாருடன் கூட்டணி அமைக்கப் போகிறோம் என்பதை, வெளிப்படையாக கூறிவிட்டால், அரசியலில் ஆதாயம் அடைய முடியாது; பெரிய கட்சிகள், எங்களுக்கு ஒதுக்கக் கூடிய தொகுதிகளின் எண்ணிக்கையையும், குறைத்து விட வாய்ப்புள்ளது. தே.மு.தி.க.,வுடன் கூட்டணி அமைத்தால் தான், அவர்கள் ஆதாயம் அடைய முடியும் என்ற கருத்து பரவலாகவுள்ளது. அதனால், எப்படியாவது எங்களை கூட்டணிக்குள் இழுக்க,பேரம் நடத்தி, தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பர். அந்த சந்தர்ப்பம் வரும் வரை, அனைத்து கட்சிகளையும் கேட்டு மேனிக்கு விமர்சித்துப் பேச, கட்சித் தலைமை முடிவு ‌‌செய்துள்ளது. தமிழக அரசியல் களத்தில், கடுமையாக விமர்சனம் செய்து கொண்ட அரசியல் கட்சிகள், ஒன்றோடு ஒன்று, கூட்டணி வைப்பது புதிதல்ல என்பதால், அந்த பாணியில் நாங்களும் இவ்வாறு அவர் தெரிவித்தார்.

வட மாநில அரசியல் தலைவர்கள், கூட்டணி வைக்க ஆசைப்படும் தலைவர்களை விமர்சித்துப் பேசுவதும், "பேரம்' படிந்த பின், அன்றைக்கே, அவர்களுக்கு ஆதரவாக அறிக்கை விடுவதும் வாடிக்கை. "நேரடியாக பேரம் பேசுவதை விட, மேடையில் விமர்சித்தால் பலன் அதிகம் என, கருதி, சகட்டுமேனிக்கு, கட்சிகளைத் தாக்குகிறார். இதே பாணியை, விஜயகாந்த் தற்போது பின்பற்றத் துவங்கி உள்ளார்' என, அரசியல் வல்லுனர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

- நமது நிருபர் -

Advertisement




வாசகர் கருத்து (121)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
19-அக்-201223:09:29 IST Report Abuse
Nallavan Nallavan \\\\ "நேரடியாக பேரம் பேசுவதை விட, மேடையில் விமர்சித்தால் பலன் அதிகம் என கருதி, சகட்டுமேனிக்கு கட்சிகளைத் தாக்குகிறார். இதே பாணியை, விஜயகாந்த் தற்போது பின்பற்றத் துவங்கி உள்ளார் " //// இந்த பார்முலா எல்லா சந்தர்பங்களிலும், எல்லா இடத்திலும் சக்சஸ் ஆகாது. ஒரு சில உதாரணங்களைக் கொண்டு அரசியல் பாணி ஒன்றைக் கடைபிடித்தால் அது எதிரிடையான விளைவைக் கூடத் தரும் வாய்ப்புள்ளது. மக்களின் மனநிலையைச் சரியான சமயத்தில் நாடி பிடித்து, அதற்குத் தகுந்தாற்போல் கூட்டணி அமைப்பவர் என்று புகழப்படும் கலைஞரின் திமுக கூட படுதோல்வி அடைந்துள்ளது. தேமுதிகவின் உண்மையான பலம் உள்ளாட்சித் தேர்தல்களினால் தெரிந்து கொள்ள முடியாது. மக்களவைத் தேர்தலில் தெரிய வரும். அப்போது தேமுதிகவுக்கு உள்ள தனிப்பட்ட செல்வாக்கினை அனைத்துக் கட்சிகளும் அறிந்து கொள்ள முடியும். அப்போது அமையப்போகும் கூட்டணிதான் தேமுதிகவின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும். மூன்றாவது அணி என்ற கூத்து துவங்கப்பட்டாலும், அது மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் அல்லது பாஜக உதவியில்லாமல் ஆட்சி அமைக்க முடியாது. எனக்கு முன்பு தேமுதிக மீது இருந்த நம்பிக்கை இப்போது இல்லை, அதே சமயம் திமுகவுடன் தேமுதிக கூட்டணி அமைத்தால் தேமுதிக தன்னுடைய செல்வாக்கை இழப்பதோடு, சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னர் அதிமுக அரசின் குறைகள் காரணமாக திமுகவை மக்கள் ஆதரிக்கத் துவங்கி விட்டனர் என்ற பொய்யான தோற்றத்தை மட்டுமாவது ஏற்படுத்தவே திமுக, தேமுதிகவுக்கு தூது விட்டிருக்க வேண்டும். அடுத்த வருட இறுதியில் எப்படியும் கூட்டணிகள் முடிவாகிவிடும் பார்ப்போம்
Rate this:
Cancel
muthu Rajendran - chennai,இந்தியா
19-அக்-201222:59:30 IST Report Abuse
muthu Rajendran விஜயகாந்த்இடம் 11 % வாக்கு வங்கி உள்ளது. இவர் வாக்குகளை பிரித்ததால் அதிமுக கூட்டணி 25 இடங்களை இழந்தது. இவர் தனியே நின்று வெற்றி பெறுகிறாரோ இல்லையோ ஒரு கூட்டணியின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கிறார். இது கடந்த தேர்தல் கணக்குப்படி. அதிமுகவின் செல்வாக்கு குறைந்துள்ள நிலையில் திமுகமீது இன்னும் மக்கள் ஆதரவு பெருகாத நிலையில் தேதிமுக சற்று மகிழ்வான நிலையில் உள்ளது என்றே சொல்ல வேண்டும். ஆனால் சட்டசபையை புறகணிப்பது போன்ற அணுகுமுறைகள் விரும்பத்தக்கது அல்ல. பிஜேபி குறைந்த அளவில் தான் செல்வாக்கு பெற்றுள்ளது தமிழகத்தை பொறுத்தவரை. எனவே மேற்சொன்ன கட்சிகள் தவிர புதிய கூட்டணி ஏதும் வருமா என்று தெரியாத நிலையில் பொறுத்து இருந்து பார்போம்
Rate this:
Cancel
dinesh - pune,இந்தியா
19-அக்-201221:05:06 IST Report Abuse
dinesh பார்த்துப்பா, ஓவரா பேசிட்டா அப்புறம் யாருமே வராம போய்டுவாங்க
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X