நாமக்கல் கவிஞர் பிறந்த நாள் விழா:நாடு முழுவதும் இன்று கொண்டாட்டம்| district news | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நாமக்கல் கவிஞர் பிறந்த நாள் விழா:நாடு முழுவதும் இன்று கொண்டாட்டம்

Added : அக் 19, 2012
Share
நாமக்கல்: தமிழர்களின் இதயத்தில், சுதந்திர உணர்வை ஏற்படுத்திய, தேசிய கவிஞர் ராமலிங்கம் பிறந்த நாள், இன்று (அக்., 19), நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.நாமக்கல் மாவட்டம், காவிரிக் கரை மீது அமைந்துள்ள மோகனூரில், 1888 அக்டோபர், 19ம் தேதி, வெங்கட்ராமபிள்ளை, அம்மணி அம்மாளுக்கு எட்டாவது மகனாக பிறந்தார் ராமலிங்கம். அவரது தந்தை, மோகனூர் போலீஸ் ஸ்டேஷனில் ஏட்டாக

நாமக்கல்: தமிழர்களின் இதயத்தில், சுதந்திர உணர்வை ஏற்படுத்திய, தேசிய கவிஞர் ராமலிங்கம் பிறந்த நாள், இன்று (அக்., 19), நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.
நாமக்கல் மாவட்டம், காவிரிக் கரை மீது அமைந்துள்ள மோகனூரில், 1888 அக்டோபர், 19ம் தேதி, வெங்கட்ராமபிள்ளை, அம்மணி அம்மாளுக்கு எட்டாவது மகனாக பிறந்தார் ராமலிங்கம். அவரது தந்தை, மோகனூர் போலீஸ் ஸ்டேஷனில் ஏட்டாக பணியாற்றினார்.
பெற்றோர், அவருக்கு கருப்பண்ணசாமி என பெயர் சூட்டி அழைத்தனர். நாமக்கல்லில் குடியேறிய பின், நாமக்கல்லில் தொடக்கக் கல்வியும், கோவை நகரில் உயர் கல்வியும், திருச்சி நகரில், கல்லூரிக் கல்வியும் கற்றுத்தேர்ந்தார். ஓவிய கலைஞராகவும் திகழ்ந்தார்.
கடந்த, 1912ம் ஆண்டு ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் உருவத்தை வரைந்து, மன்னரால் பரிசும், பாராட்டும் பெற்று அவருடன் சமமாக விருந்துண்ட பெருமை, கவிஞர் ராமலிங்கத்துக்கு உண்டு. நாமக்கல் நாகராஜர் அய்யரின் தொடர்பால், விடுதலை இயக்கத்தில் இணைந்து, 1932ல் சத்தியாகிரக போராட்டத்தில் பங்கேற்று, ஓராண்டு சிறையில் இருந்தார்.
"கத்தியின்றி ரத்தமின்றி யுத்தம் ஒன்று வருகுது...,' தமிழன் என்றொரு இனமுண்டு; தனியே அதற்கொரு குணமுண்டு,' "கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள்; கவலை உனக்கிலை ஒத்துக்கொள்' ஆகிய பாடல்களை பாடி, சுதந்திர உணர்வை ஏற்படுத்தியவர், தேசிய கவிஞர் ராமலிங்கம்.
அவரது உப்பு சத்தியாகிரக வழி நடைப்பாட்டு, எல்லோரது பாராட்டையும் பெற்றது. கவிஞர் ராமலிங்கம், நாட்டின் விடுதலை பெற்ற பின்னும், பல்வேறு பட்டங்களை பெற்றுள்ளார். 1906ம் ஆண்டு அரசியலில் இறங்கினார். 1914ல், திருச்சி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் செயலாளர் மற்றும் கரூர் மாவட்ட வட்டாரத் தலைவராகவும், 1921 முதல், 1930 வரை, நாமக்கல் வட்டார காங்கிரஸ் தலைவராகவும், 1953ம் ஆண்டு, சாகித்ய அகாடமி உறுப்பினராகவும் பொறுப்பு வகித்தார்.
கடந்த, 1971ல், பத்ம பூஷன் விருதும், 1956 மற்றும், 1962ல், சட்டசபை உறுப்பினராகவும் பொறுப்பு வகித்தார். 1949ல், சென்னை மாகாண அரசவை கவிஞராகவும் பதவி வகித்த கவிஞர், பல்வேறு பொறுப்புகளில் பாராட்டும்படி பணியாற்றினார்.
நாமக்கல் கவிஞர் காப்பியங்கள் ஐந்து, கவிதை தொகுப்புகள், 15, கட்டுரை நூல்கள், 15, இலக்கிய நூல்கள், 14, வாழ்க்கை வரலாறுகள் ஏழு, இசை ஆய்வு நூல்கள் நான்கு, மொழி பெயர்ப்பு நூல்கள் மூன்று, நாடகங்கள் இரண்டு, திருக்குறள் உரை ஒன்று என மொத்தம், 66 நூல்களை எழுதி உள்ளார். இன்று (அக்., 19), நாடு முழுவதும் அவரது பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X