புதுடில்லி :ஹாலிவுட்டின் பிரபல நடிகை ஜூலியா ராபர்ட்ஸ்(42), இந்து மதத்துக்கு மாறிவிட்டார். கோவிலுக்குச் சென்று பிரார்த்தனை செய்கிறார். "அடுத்த பிறவியிலாவது நான் நிம்மதியாக இருக்க வேண்டும்' என, மனமுருகிக் கூறியுள்ளார்.
ஆஸ்கர் விருது பெற்ற ஹாலிவுட் நடிகையான ஜூலியா ராபர்ட்சின் பெற்றோர் பிராட்டஸ்டண்ட் மற்றும் கத்தோலிக்கக் கிறித்தவ மதத்தைச் சேர்ந்தவர்கள். ஜூலியா பிறந்ததோ, கிறித்தவ நாடான ஜார்ஜியாவில். ஆனால் அவர் இப்போது இந்து மதத்துக்குரிய சடங்குகளை கடைபிடிக்கிறார்.அவர் நடித்து வரும், "ஈட், பிரே அண்ட் லவ்' என்ற படத்தின் கதைப்படி, நாயகி, விவாகரத்து பெற்றவள். உணவுக்காக இத்தாலிக்கும், ஆன்மிகத்துக்காக இந்தியாவுக்கும், அன்புக்காக இந்தோனேசியாவிலுள்ள பாலித் தீவுக்கும் செல்கிறாள். இப்படத்தின் படப்பிடிப்பு, கடந்த ஆண்டு, அரியானாவிலுள்ள பட்டோடி என்ற இடத்தில் நடந்தது. அங்கு ஹரி மந்திர் என்ற கோவிலின் சுவாமி தர்மதேவ் என்ற துறவியைச் சந்தித்து ஆசி பெற்றார் ஜூலியா. மேலும் தன்னுடைய குழந்தைகளின் பெயர்களையும் இந்துப் பெயர்களாக மாற்றிக் கொண்டார். அப்போதே அது பரபரப்பான செய்தியாக பேசப்பட்டது. இதையடுத்து இப்போது அவர் இந்து மதத்துக்கு முழுமையாக மாறிவிட்டார். அடிக்கடி கோவிலுக்குச் சென்று பிரார்த்தனையில் ஈடுபடுகிறார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "நான் என் குடும்பத்தாலும் நண்பர்களாலும் வஞ்சிக்கப்பட்டேன். அடுத்த பிறவியிலாவது நான் அமைதியுடனும் நல்ல ஆதரவுடனும் வாழ வேண்டும்' என்றார்.
ஜூலியாவின் இந்த மாற்றம் பற்றி சுவாமி தர்மதேவ் கூறியதாவது:படப்பிடிப்பு நடந்த இடத்தில் ஒரு கோவில் செட் போடப்பட்டிருந்தது. அங்கு பக்தர்கள் சிலர் தீபம் ஏற்றி, பத்திகள் கொளுத்தி வைத்து வழிபட்டனர். ஜூலியாவும் அங்கு சென்று, தீபத்தைக் கண்ணில் ஒற்றிக் கொண்டார். நான் அவரது கையில் சிவப்புக் கயிறு கட்டிவிட்டேன். அவரது நெற்றியில் திலகமிட்டேன். மேலும் அவர் தனது தனிச் செயலர் மூலம், நோய்வாய்ப்பட்டுள்ள தாயின் உடல்நலம் தேறுவதற்காக பிரார்த்தனை செய்யும்படி என்னிடம் கேட்டுக் கொண்டார்.அவர் புறப்படும் முன், நான் அவரிடம், "நீங்கள் உணவு அல்லது அன்பு இரண்டையும் தேர்வு செய்யாவிடிலும், பிரார்த்தனை செய்ய மறந்து விடாதீர்கள். அது உங்கள் வாழ்வின் ஒரு அங்கமாக இருக்கட்டும்' என சொன்னேன். அவரும் புன்னகையுடன் அதை ஏற்றுக் கொண்டார்.இவ்வாறு தர்மதேவ் தெரிவித்தார்.
அமெரிக்காவிலுள்ள, "இந்து சர்வதேச சங்க'த்தின் தலைவர் ராஜன் சேத், ஜூலியாவின் முடிவை வரவேற்றுள்ளார்.ஜூலியின் இம்முடிவு, இணையதளங்களில் சூடாக விவாதிக்கப்படுகிறது. அவரை ஆதரிப்பவர்களைப் போலவே அவரை எதிர்ப்பவர்களும் உள்ளனர்.