பொது செய்தி

இந்தியா

பக்ரீத் சிறப்பு பகுதி

Updated : அக் 27, 2012 | Added : அக் 27, 2012 | கருத்துகள் (1)
Share
Advertisement

ஒருமைப்பாட்டை உருவாக்கும் தியாகத்திருநாள்
- அல்ஹாஜ் டாக்டர் மேஜர் மு.ஜெய்லானி, டீன், முகம்மது சதக் கலை அறிவியல் கல்லூரி, சென்னை

இன்று, ஈத் உல் அல்ஹா என்னும் தியாகப் பெருநாள், முஸ்லிம்களால் கொண்டாடப்படுகிறது. இது, ஹஜ் பெருநாள் என்றும், பக்ரீத் பண்டிகை என்றும் அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும், இஸ்லாமியர்கள் இரண்டு பெருநாள்களைக் கொண்டாடுகின்றனர். ரமலான் மாதத்தின் 30 நாட்களும், நோன்பு இருந்து அதன் பின், "ஷவ்வால்' மாதத்தின் முதல் பிறை கண்டபின், மறுநாள் காலையில், "பித்ரா' என்ற தருமத்தை, ஏழை எளியவர்களுக்கு வழங்கிய பின், "ஈத் உல் பித்ர்' என்ற, ரம்ஜான் பெருநாளைக் கொண்டாடுகின்றனர்.
இஸ்லாமிய ஆண்டின் இறுதி மாதமாகிய, "துல்ஹஜ்' மாதத்தின், 10வது நாளன்று, இறைவன் கட்டளைப் படி, குர்பானி என்னும் தியாகத்தை நிறைவேற்றி, "ஈத் உல் அல்ஹா' என்னும் தியாகப் பெருநாளைக் கொண்டாடுகின்றனர். "ஈத்' என்றால், திரும்பத் திரும்ப வருதல் என்பது பொருள். அல்ஹா என்ற சொல், தியாகம் என, பொருள்படும். ஆண்டுதோறும் இந்நாளில் செய்யும் தியாகத்தால், திரும்பத் திரும்ப இன்பம் பயக்க வரும் இந்நாள், "ஈத் உல் அல்ஹா' அல்லது தியாகப் பெருநாள் என, அழைக்கப்படுகிறது. குர்பானி என்ற தியாகம் செய்யும் வழக்கம், 5,000 ஆண்டுகளுக்கு முன், நபி இப்ராஹிம் அலைஹிவசலாம் காலத்தில் உருவானது. இறைவன், இவர்களுடைய கனவில் தோன்றி, அவர்களுடைய ஒரே மகனார் இஸ்மாயில் அலைஹிவசலாம் அவர்களை, தன் கரத்தாலே அறுத்துத் தியாகம் செய்ய வேண்டும் என்று கட்டளையிட்டான். நபி இப்ராஹிம் அலைஹிவசலாம், இதைத் தன் மகன் இஸ்மாயிலிடம் தெரிவித்த போது, அவரும் இதற்கு, புன்முறுவலோடு ஒப்புதல் அளித்தார்.

"தந்தையே நீங்கள் இறைவனின் கட்டளையை நிறைவேற்றுங்கள். அவ்வாறு நீங்கள் நிறைவேற்றும் நேரத்தில், என்னைப் பொறுமையானவர்களுள் ஒருவனாகக் காண்பீர்கள்' என்று கூறினார். தந்தை, தனயன் ஆகிய இருவரும், இறைவனுடைய, கட்டளையை நிறைவேற்ற முயன்ற போது, இறைவன் அதைத் தடுத்து நிறுத்தி, தந்தை, தனயன் இருவருடைய தியாக உணர்வையும், அவர்கள் கொண்டிருந்த இறை நம்பிக்கையும் பாராட்டி, நபி இஸ்மாயில் அவர்
களுக்குப் பதிலாக, ஒரு ஆட்டை அறுத்து, குர்பானி கொடுக்கச் செய்து, அந்த தியாகத்தை மகிழ்வோடு ஏற்றுக் கொண்டான். நரபலியிடும் பழக்கத்திற்கு, முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. இந்த ஈத் உல் அல்ஹா என்ற தியாகப் பெருநாளன்று, ஆடு, மாடு அல்லது ஒட்டகம் ஆகிய பிராணிகளில் ஒன்றை, குர்பானி செய்யும் தியாகமுறை பின்பற்றப்பட்டது. இந்த தியாகப் பெருநாளன்று, உலகின் பல பாகங்களிலிருந்து லட்சோப லட்சம் முஸ்லிம்கள் , தங்கள் ஐந்தாவது கடமையாகிய, ஹஜ், பயணத்தை துல்ஹஜ் மாதத்தின் 10வது நாளாகிய இன்று, மக்காவில் நிறைவேற்றுவதால், இந்தப் பெருநாள் "ஹஜ் பெருநாள்' என்றும் அழைக்கப்படுகிறது.


இஸ்லாமியர்கள் நிறைவேற்ற வேண்டிய கடமைகள் ஐந்து. முதலாவதாக, ஈமான் என்னும் இறை நம்பிக்கை உடையவராக இருத்தல். அதாவது, ஏக இறைவன் மீதும், அவனுடைய திருத்தூதர் மீதும், மறுமை நாள் உண்டு என்ற கொள்கையின் மீதும், நம்பிக்கை கொள்ள வேண்டும்; இரண்டாவது கடமை, ஐந்து வேளை தொழுகையை, நாள் தோறும் நிறைவேற்ற வேண்டும். மூன்றாவது கடமை, புனித ரமலான் மாதம் முழுவதும், நோன்பு நோற்க வேண்டும்; நான்காவது கடமை, ஆண்டின் நிகர வருமானத்திலும், கையிருப்பிலும், இரண்டரை சதவீதம், ஏழைவரி என்னும், "ஜகாத்' வழங்க வேண்டும்; ஐந்தாவது கடமை, புனிதப் பயணம்
மேற்கொண்டு, மக்காவிற்குச் சென்று கபா என்னும், முதலாவதாகக் கட்டப்பட்ட வணக்க ஸ்தலத்தில், வழிபாடுகளை நிறைவேற்ற வேண்டும். இவற்றுள் முதலாவதாகக் கூறப்பட்ட நான்கு கடமைகளும், அனைவராலும் கட்டாயமாக நிறைவேற்றப்பட வேண்டும். ஐந்தாவதான ஹஜ் என்னும் கடமை, அந்த புனிதப் பயணத்தை மேற்கொள்ளத் தக்க உடல் வலிமையும், பொருள் வசதியும் பெற்றவர்கள் மீது மட்டும் தான் கட்டாயமாக்கப் பட்டுள்ளது.


ஹஜ் என்னும் தியாகப்பயணம்: இது, மன மகிழ்ச்சிக்காக, ஊர்சுற்றிப் பார்ப்பதற்காகச் செல்லும் உல்லாசப்பயணம் அல்ல; பொருள் ஈட்டும் நோக்கத்துடன் நாடு விட்டு நாடு செல்லும் பயணமும் அல்ல. தன்னுடைய சுக போகங்களைத் துறந்து, உற்றார் உறவினரைப் பிரிந்து, வியாபாரம், தொழில் போன்றவற்றை விட்டுச் செல்வதால் ஏற்படும் நஷ்டங்களையும், கஷ்டங்களையும் ஏற்று மனமுவந்து பொருட்செலவு செய்து, இறைவனுடைய நாட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன், மேற்கொள்ளப்படும் தியாகப் பயணம்.


ஹஜ் பயணிகள் நிறைவேற்றுகிற நற்பணிகள்: பெருமானார் (ஸல்) அவர்கள் இறுதிச் சொற்பொழிவு நிகழ்த்திய அரபா மைதானத்தில் தங்கி, தொழுகையை நிறைவேற்றுவது, முன்னாளில் நபி இப்ராஹிம் அவர்களின் துணைவியார் அன்னை ஹாஜிரா அவர்கள், தன்னுடைய குழந்தை இஸ்மாயிலின் தாகத்தைப் போக்க தண்ணீர் தேடி ஸபா, மருவா என்னும் இரு குன்றுகளுக்கிடையே ஓடியதை நினைவுகூரும் வகையில் தொங்கோட்டம் ஓடுவது; ஆடு, ஒட்டகம் ஆகிய கால்நடைகளை குர்பானி கொடுப்பது; மனிதனைத் திசை திருப்பி, தீய செயல்களில் ஈடுபடத் தூண்டும் சைத்தானை, நம்மிடம் அணுகாமல் விரட்ட வேண்டும் என்ற நோக்குடன், மினா என்னுமிடத்தில் கல் எறிவது போன்றவை ஹஜ் பயணிகள் செய்கின்ற நற்காரியங்களாகும்.

மனிதன் புனிதனாகிறான்: ஹஜ் பயணத்தை நிறைவேற்றும் மனிதன், புனிதமடைகிறான். வஞ்சகம், பொறாமை, கோபம், புறம் பேசுதல், ஏமாற்றுதல், காம இச்சைகளில் நாட்டங் கொள்ளுதல் போன்ற தீய குணங்களை கடைபிடிக்காமல், சாந்தி, சமாதானம், சகோதரத்துவம் போன்ற நற்காரியங்களில் நாட்டம் உடையவனாகிறான். பாவங்கள் நீங்கப் பெற்று, அன்று பிறந்த பாலகன் போல் தூயவனாகத் திரும்புகிறான். தூய நீர், நம் ஆடையிலுள்ள அழுக்கை நீக்குவது போல், ஹஜ் பயணம் மனிதனுடைய மனதிலுள்ள தீமைகளை நீக்கி அவனைப் புனிதமடையச் செய்கிறது. ஹஜ் பயணம் மேற்கொள்ள விரும்புபவர்கள், பயணம் புறப்படுவதற்கு முன், தம் உறவினர்களையும், தாம் அறிந்த பிறரையும் சந்தித்து, தாங்கள் ஏதேனும் அவர்களுக்குத் தீங்கு இழைத்திருந்தாலோ, அல்லது மனதை எவ்வகையிலேனும் புண்படுத்தியிருந்தாலோ, அதற்காக மன்னிக்கும் படி வேண்டுகின்றனர். இது அவர்களிடம், பணிவான பண்பை வளர்க்கிறது. மக்கா மாநகரத்திற்குள் நுழையும் முன், "இஹ்ராம்' என்னும் வெண்ணிற ஆடையை அணிகின்றனர். இடுப்பில் சுற்றப்படும் ஒரு ஆடையும், உடம்பில் போர்த்திக் கொள்ள ஒரு ஆடையும் தவிர, வேறு உடைகள் எதுவும் கிடையாது. எவ்வளவு பெரிய பணக்காரர்களும் இந்த எளிய உடைகளையே அணிய வேண்டும். இது அவர்கள் மனதிலே பணிவான பண்புகளை வளர்க்கிறது.இறைவனின் சன்னிதியில் அனைவரும் சமம் என்பதை உணர்த்தி சமத்துவத்தை வளர்க்கிறது. உண்மையிலேயே இந்தச் சீருடை உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த மக்களிடையே, ஒருமைப்பாட்டு உணர்வை உருவாக்குகிறது.
உலக ஒருமைப்பாடு உருவாகிறது: பிறந்த நாட்டால், பேசும் மொழியால், பின்பற்றும் பழக்க வழக்கங்களால், வேறுபட்ட மக்கள், தாம் கொண்டிருக்கின்ற கொள்கைகளால், இறை அச்சத்தால், இறை நாட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு, வேறு எந்தப் பயனையும் எதிர்பாராமல், தியாக உணர்வோடு ஓரிடத்தில் கூடுகின்றனர். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து உதவுகின்றனர்; பிறரோடு ஒத்துவாழப் பழகிக் கொள்கின்றனர். சகிப்புத் தன்மை வளர்கிறது; உலக சகோதரத்துவம் மலர்கிறது; மனிதநேயம் போற்றப்படுகிறது; உலக ஒருமைப்பாடு உருவாகிறது!இத்துணை சிறப்புகளையும் ஒருங்கே பெற்ற இனிய நாள் தான் இந்த தியாகப் பெருநாள். அனைவருக்கும் பக்ரீத் பெருநாள் வாழ்த்துக்கள்!


ஹஜ்ஜின் நோக்கம்: மக்காவிற்குச் சென்று அங்கு கட்டப்பட்ட மனித வர்க்கத்தின் முதல், வணக்க ஸ்தலமான புனித கபாவை தரிசித்து, அதைச் சுற்றி தவாப் செய்து பாவமன்னிப்பு கேட்பதும், மதீனா சென்று நபி பெருமானாரின் அடக்கஸ்தலமாகிய ரவ்லா ஷெரீபின் முன் நின்று சலாம் கூறுவதும், நபி பெருமானார் (ஸல்) நிறுவிய மஸ்ஜிதே நபவி என்றும், திருப்பள்ளியில் தொழுகையை நிறைவேற்றி, நற்பலன்களைப் பெறுவதும் ஹஜ்ஜின் நோக்கம்.

ஒரு பயணம் புனிதமாகிறது:- சையத் நசீர் இஸ்லாமிய மார்க்கத்தில் ஐந்து கடமைகள் உண்டு. கலிமா, தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ் ஆகியவையே, அந்த ஐந்து முக்கிய கடமைகள். கலிமா என்றால், "லாஇலாஹா இல்லல்லாஹ் முஹம்மதுர் ரசூலில்லாஹ்' என்பதாகும். இதன் அர்த்தம், "அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் கிடையாது. முஹம்மத் நபி(ஸல்) அல்லாஹ்வின் தூதர் ஆவார்' என்பதே! இஸ்லாம் என்ற சத்திய நெறியை, மக்களிடம் எடுத்துரைக்க, முதல் நபி ஆதம் முதல், கடைசி நபி முஹம்மத்(ஸல்) வரை, இறைவன், ஒரு லட்சத்து, 24 ஆயிரம் நபிமார்களை, உலகிற்கு அனுப்பி வைத்தார். எல்லாரும், "லா இலாஹா இல்லல்லாஹ்' என்ற கலிமாவை, மக்களிடம் எடுத்து வைத்தனர்.
உருவமற்ற ஒரு இறைவனை ஏற்று, அவர் கட்டளைகளை நிறைவேற்றுவதில் தான் இம்மை, மறுமை இரண்டின் வெற்றியும் அடங்கியுள்ளது என்பதே, அவர்கள் சொன்ன சேதி.
முஹம்மத் நபி (ஸல்) தான், இஸ்லாத்தின் கடைசி தூதர். அதன் பிறகு வேறு எந்த தூதரும் வரவில்லை; இனி வரப் போவதும் இல்லை. இறைவனுடைய தூய வேதமான, "குர்ஆனை' நபி (ஸல்) அவர்கள், மக்களிடம் சேர்த்து விட்டார். இதை புரிந்து படிப்பதும், அதன்படி நடப்பதும், நம்முடைய நிம்மதியான வாழ்க்கைக்கு வழி. தினசரி ஐந்து வேளை தொழுகை, முஸ்லிம்கள் மீது கடமையாக்கப்பட்டுள்ளது. பஜர் - காலை, ஜூஹர் - பகல், அஸர் - மாலை, மக்ரிப் - அந்தி நேரம், இஷா - இரவு, ஆகியவையே, அந்த ஐந்து வேளை தொழுகை. மனிதனை தீயவழியை விட்டு தடுக்கிறது தொழுகை. மனிதனுக்கு ஆன்ம பலத்தை தருகிறது. இறைவனிடம் வேண்டியதை கேட்டு பெறும் வழியாக, தொழுகை இருக்கிறது. தொழுகை மூலம் மனதிற்கு சாந்தியும், உடலுக்கு உற்சாகமும் கிடைக்கிறது. சொர்க்கத்தின் திறவுகோல் தொழுகை தான்.
ஆண்டுக்கு ஒரு முறை, பிறை பார்ப்பது, ரமலான் மாதத்தில் ஒரு மாதம் முழுக்க, 29 அல்லது, 30 நாட்கள் நோன்பு வைப்பது, மூன்றாவது கடமை. இதே ரமலான் மாதத்தில் தான், "ஜகாத்' கொடுக்கும் நான்காவது கடமையும் வருகிறது. வசதியுள்ளவர்கள் தங்கள் செல்வத்திலிருந்து, 2.5 சதவீதம், வசதியற்றவர்களுக்கு உதவி செய்வதே, "ஜகாத்!'


குர் ஆனில், "தொழுகையை கடைபிடியுங்கள்; ஜகாத்தை கொடுத்து வாருங்கள்' என, பல இடங்களில் சொல்லப்பட்டுள்ளது. இதிலிருந்து, "ஜகாத்' ஆனது, தொழுகைக்கு ஈடாக முக்கிய கடமையாக இருப்பது தெரியவரும். ஜகாத் கொடுப்பவர்களின் செல்வம் பெருகுவது, கண் கூடாக நாம் பார்க்கும் உண்மை.ஐந்தாவது கடமையான ஹஜ், கடைசியாக வந்தாலும், மிக முக்கியமான கடமை. வசதியுள்ளவர்கள், தங்கள் வாழ்வில் ஒருமுறையாவது, "ஹஜ்' (புனித பயணம்) சென்று வர வேண்டும். சவுதி அரேபியாவிலுள்ள, "மெக்கா' தான் முஸ்லிம்களின் முதல் இறையில்லம், மசூதி. அங்கு செல்வது நம் புனித கடமை. ஆனால், இந்த கடமையானது, வசதியுள்ளவர்கள் மீது மட்டுமே கட்டாயமாகும். ஆண்டுதோறும், "ஜில்ஹஜ்' மாதத்தில், மக்காவிற்கு செல்வதே, "ஹஜ்' என்று புனிதப்பயணம். மற்ற காலங்களில் அங்கு சென்றால், அதன் பெயர் உம்ரா. மக்கா நகரில் உள்ள மஸ்ஜிதே, "ஹரம்' எனும் பள்ளி வாசல். இதுதான் முஸ்லிம்களின் முதல் பள்ளி வாசல். இதை கட்டியவர் இறைத்தூதர் இப்ராஹிம் (அலை). இந்த பள்ளிவாசலை புதுப்பித்து, இங்கு தொழுகையையும், மார்க்க சொற்பொழிவையும் நடைமுறைப் படுத்தியவர் முஹம்மத் நபி(ஸல்). "லப்பைக் அல்லாஷூம்மா லப்பைக், லப்பைக் லாஷரீகலக லப்பைக், இன்னல் ஹம்த வல்நியமத...'"இதோ வந்து விட்டோம் இறைவா! உன் அழைப்பை ஏற்று, உன் இடத்திற்கு... இதோ வந்துவிட்டோம் இறைவா... உன் அருட்கொடைகளுக்கு நன்றி கூற... அங்கு சென்றிருக்கும் ஹாஜிகளின் பிரார்த்தனையும், அவர்களின் இந்த புனிதமான ஹஜ் பயணத்தையும், இறைவன் ஏற்றுக் கொள்ளட்டும். ஆமின்...! இன்ஷா அல்லாஹ், இனி வருங்காலத்தில் இதுவரை ஹஜ்ஜிற்கு செல்லாதவர்களுக்கும், அந்த பாக்கியம் கிடைக்கட்டும்... ஆமீன்!

இறைவனுக்கு பிடித்த குர்பானி: பஸி உர் ரஹ்மான்
தனக்குள்ளே ஓரிறைக் கொள்கையின் உறுதியையும், தியாகப் பண்பையும், பரிசுத்தத் தன்மையையும், இறையச்சத்தையும், நல்லொழுக்கச் சிறப்பையும் உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்பது தான், தியாகத் திருநாளின் நோக்கம். இதையே தான் அல்லாஹ்வின் திருமறை தெளிவாக உணர்த்துகிறது."இவ்வாறு குர்பானி செய்த போதிலும், அதன் மாமிசமோ அல்லது ரத்தமோ அல்லாஹ்வை அடைந்து விடுவதில்லை. உங்களுடைய இறையச்சம் தான் அவனை அடையும்.' அல்குர்ஆன் - 22:37 "எண்ணங்களை கொண்டே எல்லா செயல்களும் கணிக்கப்படும்; மனிதனுக்கு அவன் எண்ணியதே கிடைக்கும்' என்ற, நபி (ஸல்)யின் வார்த்தைக்கேற்ப, குர்பானியினும், உள்ளத்தின் தூய்மை முக்கியம். உள்ளத்தின் ரகசியங்கள் அனைத்தையும், ஊடுருவி அறியும் வல்லமை பெற்ற இறைவனின் இடத்தில், தூய்மையைக் கொண்டே எல்லா வழிபாடுகளும் அங்கீகரிக்கப்படும் என்பதற்கு, "நபியே நீர் கூறும்... நிச்சயமாக என்னுடைய தொழுகையும், என்னுடைய தியாகமும், என் வாழ்வும், என் மரணமும் உலகத்தாரைப் படைத்து பரிபலிக்கும் அல்லாஹ்வுக்கே உரியவை...' எனும் திருக்குர் ஆனின் (6:122) வசனமே ஆதாரம். "எந்தக் குர்பானியானது அல்லாஹ்வின் திருப்பொருத்தத்திற்காக மட்டுமே செய்யப்பட்டதோ, அதுவே அல்லாஹ்வின் இடத்தில் அங்கீகரிக்கப் பட்டதாகவும், குர்பானி என்று கூறத் தகுதியுடையதாகவும் ஆகும்' என்பதையே, இந்த வசனம் நமக்கு தெளிவாக உணர்த்துகிறது.

ஜகாத் கொடுக்க தகுதியான முஸ்லிம்களுக்கு, இந்த தியாகத் திருநாளன்று, குர்பானி வாஜிபு கடமை. பக்ரீத் பெருநாள் தொழுகைக்கு பின், குர்பானி கொடுக்க வேண்டும். குர்பானி இறைச்சியை, மூன்று சமமான பங்காக பிரிக்க வேண்டும். அதில் ஒரு பங்கை, தனக்கும், இன்னொரு பங்கை, உறவினர்களுக்கும், மூன்றாவது பங்கை, ஏழைகளுக்கும், பகிர்ந்து அளிக்க வேண்டும். குர்பானி, மூன்று தினங்களில் கொடுக்கலாம். அவை, துல்ஹஜ் மாதம், 10, 11, 12 தினங்களாகும். கூட்டாக ஏழு பேர் சேர்ந்து, ஒவ்வொருவரும் தம் பங்குக்குரிய தொகையை போட்டு, ஒரு மாட்டை அல்லது ஒட்டகத்தை வாங்கி, குர்பானி கொடுக்கலாம் என்பதற்கு, பின்வரும் நபிமொழி ஆதாரம். "மாட்டிலும், ஒட்டகத்திலும் எங்களுள் ஏழு பேர் சேர்ந்து கொள்ளுமாறு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார் என்று, ஜாபிர் (ரவி) அறிவித்துள்ளார்.' (நூல்: முஸ்லீம்). "நாங்கள் பயணத்தில் இருந்தோம், ஹஜ் பெரு நாள் வந்தது, ஒரு மாட்டில் ஏழு பேரும், ஒரு ஒட்டகத்தில் 10 பேரும் கூட்டாகிக் கொண்டோம்' என்று, இப்னு அப்பாஸ் (ரவி) அறிவித்துள்ளார். (நூல்: திர்மீதி). இப்ராஹிம் நபியின் தியாகத்தை, நினைவு கூரும் விதமாக நபிகள் நாயகம் (ஸல்) "இந் நாளில் நீங்கள் அனைவரும் இந்த தியாகத்தை நினைவில் கொள்ள, உங்களில் வசதியுள்ளவர்கள், ஓர் ஆட்டை குர்பானி கொடுத்து, அதன் கறியை, ஏழைகளுக்கு கொடுத்து கொண்டாடுங்கள்' என்று கூறியுள்ளார்.


குர்பானி கொடுப்பது, ஓர் உன்னதமான வணக்க வழிபாடு. தியாகத் திருநாளன்று குர்பானி கொடுப்பதைவிட, அல்லாஹ் இடத்தில், வேறு சிறந்த வணக்கம் எதுவும் கிடையாது.
குர்பானிக்காக, பிராணியை அறுக்கும் போது, அதன் ரத்தச் சொட்டு பூமியில் விழுவதற்கு முன்னாலேயே, அல்லாஹ் இடத்தில் , அது ஒப்புக் கொள்ளப்பட்டதாகி விடுகிறது.
இறைவன் நம் அனைவருக்கும் குர்பானி கொடுக்கும் பாக்கியத்தை தருவானாக... ஆமீன்!


எல்லையற்ற தியாகம்: - ஆ.நூருல் முபீன்: உலக மக்களை நேர்வழியில் கொண்டு செல்லும் முயற்சிகளை மேற்கொண்டு, அதில் வெற்றி பெற்ற நபிமார்கள் வரிசையில், இப்ராஹிம் நபியின் வாழ்க்கை வரலாறு, முக்கியமானதாய் விளங்குகிறது. அவருக்கு முன் வாழ்ந்த நூஹ் நபி, ஹூது நபி, சாலிஹ் நபி ஆகிய நபிமார்கள் வரிசையில், இவரும் வருகிறார்.
இப்ராஹிம் நபி (அலை) செய்த தியாகத்தை நினைவு கூர்ந்து தான், இன்றைய நாளை, தியாகத் திருநாள் என்றும், பக்ரீத் என்றும், உலகம் முழுக்க இருக்கும் முஸ்லிம்கள் அனைவரும் கடை பிடிக்கின்றனர். இதை ஒரு பண்டிகையாக கொண்டாடுகின்றனர். இஸ்லாமிய சரித்திரம் ஆண்டு துவக்கமான முஹர்ரம் மாதமும், இறுதி மாதமான துல்ஹஜ் மாதமும் மாபெரும் தியாகங்களை உள்ளடக்கிய மாதங்கள். இப்ராஹிம் நபி (அலை) காலகட்டத்தில் மக்கள் சூரியன், சந்திரன், நட்சத்திரங்களை கடவுள்களாக எண்ணி வணங்கி வந்தனர். இப்ராஹிம் நபிக்கு, சிறு வயதிலிருந்தே இதில் ஈடுபாடு இருந்ததில்லை. அதனால் அவர், ஓரிறைக் கொள்கைகளை பற்றி, மக்களிடம் போதித்து வந்தார். இறைவனின் வழிகாட்டுதலை பின்பற்றி வருவதால் ஏற்படுகிற பலன்களை பற்றியும், அதற்கு மாற்றமாக செயல்படுவதால் ஏற்படும் பேரழிவுகளை பற்றியும், மக்களிடம் தொடர்ந்து எடுத்துரைத்தார். இரவில் மின்னும் நட்சத்திரங்களை கடவுள்களாக வழிபடுபவர்களிடம், "இவற்றை நாம் இறைவனாக எடுத்துக் கொண்டால், இவை இரவில் தோன்றி, பகலில் மறைந்து விடுகிறதே... இவற்றை நாம் எவ்வாறு இறைவனாக ஏற்றுக் கொள்வது?' என்று கேட்டார் (அல்குர் ஆன் 0 6:76) நிலவை கடவுளாக வழிபடுபவர்களிடம், "இதை நான் இறைவனாக ஏற்றுக் கொள்வதாக இருந்தால், அதுவும் இரவில் ஒளியை தந்து, பகலில் மறையக் கூடியதாக இருக்கிறதே... எனக்கு இறைவன் நேர்வழி காட்டவில்லை என்றால், நானும் வழிதவறிச் செல்பவரில் ஒருவனாக இருந்திருப்பேன்' என்றார். (அல்குர் ஆன் - 6:77)

மிகப் பிரகாசமாக சுடர் விட்டு ஒளி வீசும் பிரம்மாண்டமான சூரியனை, கடவுளாக வழிபடும் மக்களை பார்த்து, "இதை நான் இறைவனாக ஏற்று கொள்வதாக இருந்தால், அது பகலில் தோன்றி இரவில் மறைந்து விடுகிறதே... இவ்வாறு பகலில் தோன்றி இரவில் மறைவனவற்றையா நான் இறைவனாக ஏற்றுக் கொள்ள முடியும்? இறைவனின் படைப்புகளை இறைவனாக கருதுவதை விட்டு விலகி நிற்கிறேன். இவற்றை எல்லாம் படைத்தது, அல்லாஹ் தான். இவ்வாறு படைத்து பரிபாலிக்கிற, அந்த ஏக இறைவனாகிய, அல்லாஹ்வின் வழிகாட்டுதலுக்கு மட்டும் அடிபணிந்து வாழ விரும்புகிறேன். அதனால் ஏற்படும் பலன்களை நான் உங்களுக்கு எடுத்துரைக்கிறேன்' என்று, தம் சமுதாயத்திற்கு பல முறை போதித்து வந்தார். (அல்குர் ஆன் - 6:78, 79) இப்ராஹிம் நபிக்கு, சாரா மற்றும் ஹாஜிரா என, இரண்டு மனைவியர் இருந்தனர். அவருக்கு நீண்ட நாள் வரை குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்தது. அவருக்கு, 85 வயது ஆன போது, ஹாஜிரா மூலம் ஒரு பிள்ளை பிறந்தது. அவர் பெயர், இஸ்மாயில் நபி. சில ஆண்டுகள் கழித்து, சாரா மூலமாக ஒரு பிள்ளை பிறந்தது. அவர் பெயர் இஸ்ஹாக் நபி.
ஒரு முறை, இப்ராஹிம் நபி (அலை) உடைய கனவில், இறைவன் தோன்றி, "உம்முடைய மகன், இஸ்மாயிலை, என் பெயரால் அறுத்து, பலி இடு' என்று கட்டளையிட்டான். இறைத் தூதருக்கு வரும் கனவுகள் வெறும் கனவுகள் அல்ல; அவை கடவுளின் கடிதங்கள். இறைவனின் கட்டளையை நிறைவேற்ற, இப்ராஹிம் நபி (அலை), தன் கனவைப் பற்றி, மகன் இஸ்மாயிலிடம் கூறுகிறார். அதற்கு அந்த பிள்ளை, "தங்களுக்கு அல்லாஹ் என்ன கட்டளையிட்டாரோ, அதை நிறைவேற்றுங்கள். நான் நிச்சயமாக பொறுமையோடு இருப்பேன்' என, கூறினார். என்ன ஒரு நம்பிக்கை பாருங்கள்! பிறகு, இப்ராஹிம் நபி (அலை) தன் மகன் இஸ்மாயிலை அழைத்துக் கொண்டு, மினா எனும் மலையடிவாரத்திற்குச் சென்றார். பிள்ளைப் பாசம் தடுக்காமல் இருக்க, தன் கண்களை, துணியால் கட்டி மகன் கழுத்தில் கூரிய கத்தியை வைத்து, "அல்லாஹ் மிகப் பெரியவன்' எனக் கூறியதும், மகன் இருந்த இடத்தில் ஒரு கொழுத்த ஆடும், மகன் விலகியிருந்த காட்சியையும் காண்கிறார்.


"எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே... அனைத்தின் மீது ஆற்றல் கொண்டவன் அவனே... அவனை தவிர வணக்கத்துக்கு உரியவன் வேறில்லை. நீயே என் அதிபதி...' என்று தன்னை சோதித்த இறைவனுக்கு, நன்றி செலுத்தினார். இதன் நினைவாகவே, இறுதி நபி முஹம்மத் (ஸல்), "இந்நாளில் நீங்கள் அனைவரும் அந்த தியாகத்தை நினைவில் கொள்ள, உங்களில் வசதியுள்ளவர், ஓர் ஆட்டை குர்பானி கொடுத்து, அதன் கறியை, ஏழைகளுக்கு கொடுத்து கொண்டாடுங்கள்...' என்று சொன்னார். இப்ராஹிம் நபி (அலை)யுடைய வாழ்க்கை மட்டுமின்றி, ஆதம் (அலை) நபி துவங்கி, முஹம்மத் நபி (ஸல்) வரை, ஒவ்வொரு நபியுடைய வாழ்க்கையும், எல்லையற்ற தியாகத்தை கொண்டது. தாங்கள் பிறந்த மண்ணிலிருந்து, அவர்கள் வியர்வை, கண்ணீர், தங்கள் குடும்பம், மனைவி, பிள்ளைகள், வியாபாரத்தைவிட மேலான, இறைவனின் சத்தியத்தை, நேர்வழியை மக்களுக்கு சேர்த்து, எல்லையற்ற தியாகங்களை செய்தனர்.
அந்த தன்னலமற்ற தியாகங்களை நினைவு கூரும் நாளாக, இன்றைய தியாகத் திருநாள் மலரட்டும். இறைவனுடைய படைப்பிலேயே, மிகச் சிறந்த படைப்பு மனிதன் தான். அவனால், படைக்கப்பட்ட இன்னொரு மனிதனை, நாம் பரிகாசம் செய்வது, இறைவனையே நாம் பரிகாசம் செய்வது போலாகும். நம் மனதில் மறைந்திருக்கும் கேடுகளை, ஆடுகளுடன் சேர்த்து, இந்த பக்ரீத்தில் தியாகம் செய்வோம்.


நம் மனதில் மறைந்து கிடக்கும், "நானே மேலானவன்' என்ற மமதையை, மாடுகளுடன் சேர்ந்து, இந்த பக்ரீத்தில் தியாகம் செய்வோம். செல்வம், ஆடம்பரம், அகம்பாவம் இவற்றின் ஆணவக் கூடுகளை, ஒட்டகங்களுடன் சேர்ந்து, இந்த பக்ரீத்தில் தியாகம் செய்வோம். இந்த தியாகத் திருநாளில், எல்லாரும் இறைவனிடம் கையேந்துவோம். இவ்வுலகை படைத்து பரிபாலிப்பவனே... அளவற்ற அருள் பொழிபவனே... நிறைந்த அன்புடையோனே... தீர்ப்பு நாளின் அதிபதியே... உலக மக்கள் அனைவருக்கும் நேர்வழி காட்டுவாயாக... ஆமீன்! அன்பு, பாசம், சகோதரத்துவம் ஓங்கச் செய்து, உலகமெங்கும் அமைதி, சமாதானம், மனித நேயம், மதநல்லிணக்கம் ஏற்படுத்த செய்வாயாக... ஆமீன்! நன்றியும், கருணையும், நட்பும், உதவும் மனோபாவமும் நம் மனங்களில் சுரக்கச் செய்வாயாக... ஆமீன்!

பிராயச்சித்தம்!: - அப்சல்
""அந்த, "டிவி'யை ஆப் பண்ணுங்க...'' என்றார், ஹஸன்பாய் இருமிக் கொண்டே.
மசூதி சென்று தொழ, உடல்நிலை ஒத்துழைக்காததால், வீட்டிலேயே, "வஸி' செய்து தொழுது வந்தார்;
"ஜிஹர்' தொழுகையையும் அப்படியே செய்தார்.
வாசலில், காலிங்பெல் சத்தம் கேட்டது. மகள் சமீனா, ஓடிச் சென்று கதவை திறந்தாள். புதிய ஆளை பார்த்ததும், மறைந்து கொண்டாள்.
ஹஸன்பாய் தொழுகையை முடித்து, வாசலில் நின்றிருந்த இளைஞனிடம் பேசினார்.
""நான் உங்க மகன் காலித்துடன், ஒரே அலுவலகத்தில் வேலை பார்த்தவன்...''
""உள்ளே வாங்க...''
வீட்டிற்கு வந்து அமர்ந்தான் அந்த இளைஞன்.
""உங்க பெயர்?'' என்று இருமினார் ஹஸன்பாய்.
""சுரேஷ் வாட்கர்...''
அவனை வெறித்து பார்த்தார் ஹஸன்பாய்.
பூனாவில், மிகப் பெரிய நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தான் காலித். எம்.பி.ஏ., படித்தவன்; பை நிறைய சம்பாதித்தான்.
""சமீனாவுக்கு, இன்னும் பத்து நாளில் திருமணம். இனி அது நடக்குமா என்று தெரியலே... ஒரு பயங்கரவாதியோட வீட்டில் சம்மந்தம் வெச்சுக்க அவங்களுக்கு இஷ்டமில்லையாம்...'' ஹஸன்பாயின் குரலில் வருத்தம் தெரிந்தது.
""உங்கள் மகன் பயங்கரவாதி கிடையாது...''
""அது எனக்கு தெரியும். ஒரு முஸ்லிம், பயங்கரவாதியாக இருக்க முடியாது; ஒருவேளை பயங்கரவாதியாக இருந்தால், அவன் முஸ்லிம் கிடையாது. இரண்டில் ஒன்றைத் தான் தேர்வு செய்ய முடியும்...''
""அப்பா... உங்க மகன் அப்பாவி என்பதற்கு, என்னிடம் ஆதாரம் இருக்கிறது. அதை, மணமகன் வீட்டில் காட்டலாம். சமீனா திருமணம் நிச்சயம் நல்லபடி நடக்கும். அண்ணன் ஸ்தானத்தில், நான் இருந்து நடத்திக் காட்டுறேன்...'' என்றான், சுரேஷ் வாட்கர்.
ஹஸன்பாய் புன்னகைத்தார்.
""முதல்முறையா எங்க வீட்டிற்கு வந்திருக்கீங்க... உங்களுக்கு காபி எதுவும் கொடுக்காமல் பேசிட்டிருக்கேன்... ஸாரி...''
""இப்பத் தான் டீ சாப்பிட்டு வந்தேன். பக்கத்தில் ஒரு லாட்ஜில் ரூம் எடுத்திருக்கேன். இனி அடிக்கடி வருவேன். ஒரு வேலையாக இங்கு வந்திருக்கேன். அது முடியறவரை இங்கிருந்து போக மாட்டேன்...''
""நல்லது. இப்ப, மதிய உணவு சாப்பிட்டுத் தான் போகணும்...'' ஹஸன் பாயின் உபசரிப்பிற்கு சம்மதித்தான் சுரேஷ் வாட்கர்.
ஆமினா தட்டுத் தடுமாறி எழுந்து வந்தாள். அவளது காலில் விழுந்து ஆசி வாங்கிய சுரேஷ் வாட்கரின் தலையில் தடவிக் கொடுத்தாள்.
""என் மகன் காலித் நல்லவனா?''
""ஆமாம்மா...''
""அப்ப ஏன்... "டிவி'யில் அவனை கெட்டவன்னு சொன்னாங்க...''
அந்த தாயின் நியாயமான கேள்விக்கு, அவனிடம் பதில் இல்லை.
அன்று மாலையே சுரேஷ் வாட்கர், காலித்தின் தம்பி ஆரிபுடன், சமீனாவுக்கு நிச்சயிக்கப்பட்ட மணமகன் வீட்டிற்கு சென்றான்; பெரியவர்களிடம் பேசினான்.
மும்பை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இருந்து, தன் செல்வாக்கை பயன்படுத்தி வாங்கிய
தகவல்களை, ஆதாரப் பூர்வமாக காட்டினான்.
""நான் அப்பவே நினைச்சேன்... காலித் அப்பாவி... ஊர்க்காரங்க தான், ஒரு மாதிரியாக பேசினாங்க. அதனால் தான் தயங்கினோம். இனி எவன், எது சொன்னாலும், நாங்கள் பின்வாங்க மாட்டோம். சமீனா தான், எங்கள் வீட்டு மருமகள்... திருமண ஏற்பாட்டை தொடங்குங்க...'' என்றார், மணமகனுடைய அப்பா; மணமகன் சிராஜ் முகத்தில், சந்தோஷ மின்னல்.
இந்த விஷயத்தை, வீட்டில் வந்து ஆரிப் சொல்லவும், வெட்கத்தில் உள்ளே ஓடிய சமீனா, சந்தோஷத்தில் அழுது விட்டாள்.
""உனக்கு கோடி நன்றி அல்லாஹ்... என் கண்ணீருக்கும், பிரார்த்தனைக்கும், நீ மவுனமாய் பதில் சொல்லி விட்டாய்... எனக்கு அண்ணன் இல்லையே என்று ஏங்கினேன். அந்த குறையையும் போக்கி
விட்டாய்!''
ஹஸன்பாய் மனசுக்குள் மகிழ்ந்தாலும், முகத்தில் ஏதோ சஞ்சலம் இருந்தது.
""நீங்க கவலைப்படுவது புரிகிறது அப்பா... கல்யாண செலவுக்கு கடன் ஏதும் வாங்க வேண்டாம்ன்னு, சுரேஷ் அண்ணா சொல்லிட்டார்... எல்லா செலவுகளையும், அவரே செய்வாராம்... நான் சம்பாதிச்சு, திருப்பிக் கொடுத்தால் போதுமாம்...'' நெகிழ்ந்தான் ஆரிப்.
சொன்ன மாதிரியே, சமீனாவின் திருமணத்தை சிறப்பாக நடத்தி காட்டினான் சுரேஷ் வாட்கர். அந்த முஹல்லாவே, வியப்பில் ஆழ்ந்தது.
சமீனா அழுதபடியே, ""அண்ணா போய்ட்டு
வருகிறேன்,'' என்று விடை பெற்ற போது, அவனுக்கும் கண்கள் கலங்கின.
அவளுக்கு பதில் சொல்ல முடியாமல் முகத்தை திருப்பிக் கொண்டான்.
""அழுறீங்களா மாமா...'' என்று கேட்டாள் ரூபி.
பக்கத்து வீட்டு சிறுமி. மூன்றாம் வகுப்பு படிக்கிறாள்.
அவளது இரட்டை சடையும், ஒற்றை ரோஜாவும், சுரேஷ் வாட்கருக்கு ரொம்ப பிடிக்கும். கண்களை துடைத்து, அவளை தூக்கிக் கொண்டான். அவள்,
தன் கைகளை அவனுக்கு காட்டினாள்.
""மருதாணி நல்லா இருக்கா மாமா...?''
அவள் பேசியது, கஸல் கேட்பதைப் போல, இனிமையாக இருந்தது.
""ரொம்ப நல்லா இருக்கு. யார் வைத்தது?''
""சமீனா ஆன்ட்டி தான். இனி, எனக்கு யார்
மருதாணி வைப்பாங்க...''
""நான் வைக்கிறேன்.''
""பொய்...'' என்ற குரல் கேட்டுத் திரும்பினான். அங்கே திலாவர் நின்றிருந்தான்.
மனநிலை சரியில்லாதவன், அந்த தெருவில் சுற்றிக் கொண்டு இருப்பான். எல்லா வீடுகளிலும் உரிமையுடன் நுழைந்து சாப்பிடுவான். இரவில் மசூதியில் தூங்கி விடுவான்.
""உனக்கு மருதாணி இடவராது மாமு...'' என்றபடி ஓடி விட்டான் திலாவர். அவனை துரத்தினாள் ரூபி. அதை பார்த்து சிரித்தபடி நின்றான் சுரேஷ் வாட்கர். அவர்களை பார்க்காமல், ஒரு நாளும் இருக்க முடியாத நிலைக்கு சென்று விட்டான் சுரேஷ் வாட்கர். ஒருவேளை அவன் பார்க்க மறந்தாலும், அவன் இருந்த அறைக்கு, அவர்கள் அவனைத் தேடி வந்து விடுவர். அப்படி ஒரு அன்பு.
ஹஸன்பாய் வீட்டு மொட்டை மாடியில், ஒரு ரோஜா செடி இருந்தது. காலித் வைத்த செடியாம்!
தினமும் காலையில், "பஜர்' தொழுத பிறகு, மொட்டை மாடிக்கு சென்று, அந்த செடியை தடவியபடி, காலித்துடன் பேசுவது அம்மா வழக்கம். இப்போது, காலித்துடன் பேசுவதும் நின்று விட்டது; ஆமீனாவும், மொட்டை மாடிக்கு வருவது நின்று விட்டது.
தினமும் மொட்டை மாடிக்கு வரும் ரூபி, ஒரு ரோஜாவை பறித்து ஓட, அதை பார்த்து துரத்துவான் திலாவர்.
"ஏய் ரோஜாவை ஏன் பறிச்ச... காலித் திட்டுவான். செடியை பத்திரமா பாத்துக்க, என்கிட்ட சொல்லி இருக்கான். நான் தினமும் பூக்களை எண்ணி வைக்கிறேன். ஆனா, அது குறைஞ்சுகிட்டே போகுது. அதை கொடுத்துட்டு போ... செடியில ஒட்ட வைக்கணும்' என்று, திலாவர் கத்தியபடியே ரூபியைத் துரத்த, அவள் ஒரு பறவையைப் போல பறந்து விடுவாள்.
லாட்ஜில் தங்கியிருக்கும் சுரேஷûக்கும், இந்த காட்சி, பரிச்சயமாகி விட்டது.
சமீனாவுக்கு திருமணமாகி, ஒரு வாரம் ஆகியது. அம்மாவிற்கு கண் ஆபரேஷன் செய்ய, தனியார் மருத்துவமனையில் சேர்த்திருந்தான் சுரேஷ் வாட்கர். கண் ஆபரேஷன் நடக்கும் போது, அருகே இருந்து பார்த்துக் கொண்டான்.
""அமைதியாய் படுங்க. இன்னும், 10 நாளில் நீங்க நல்லா, "டிவி' சீரியல் பார்க்கலாம்.''
""அதெல்லாம் வேண்டாம். நான்
உன்னைத் தான் முதலில் பார்க்கணும்.''
சுரேஷால் பதில் சொல்ல முடியாமல், மவுனமாக வெளியேறினான்.
வீட்டில் தனியாக இருந்த ஹஸன்பாயிடம் வந்தான் சுரேஷ் வாட்கர்.
""அப்பா... நான் வந்த வேலை முடிந்தது. மும்பைக்கு திரும்பி போகணும். உங்ககிட்ட சொல்லிட்டு போக வந்தேன்.''
""இன்னும் கொஞ்ச நாள் தங்கலாமே...''
""எனக்கும் ஆசை தான். ஆனால், அவசர வேலை இருக்கு அப்பா. ஒரு விஷயம்.''
""சொல்லுப்பா...''
""அதை சொல்லாம போக முடியல. அதை சொல்லவும் முடியல.''
""நானே சொல்லவா?'' என்றார் ஹஸன்பாய்.
சுரேஷ் வாட்கர், புரியாமல் பார்த்தான்.
""உன் பெயர், சுரேஷ் வாட்கர் கிடையாது. உன்னுடைய உண்மையான பெயர், சுனில் தேஷ்முக். நீ ஒரு போலீஸ் அதிகாரி. என் மகன் காலித்தை சுட்டுக் கொன்றது நீ தான். இதைத் தானே நீ சொல்ல
வந்தாய்,'' என்றார் ஹஸன் பாய் அமைதியாக.
அதிர்ந்து போய் பார்த்தான் சுனில்.
""இது எல்லாம் உங்களுக்கு எப்படித் தெரியும்?''
""நீ முதல் முறையா வீட்டுக்கு வந்த போதே, நான் புரிஞ்சுக்கிட்டேன். எனக்கு இருந்த ஆத்திரத்தில, அப்பவே உன்னை அடிச்சு துரத்தியிருப்பேன்... ஆனால்,
நீ செய்த தவறு, அதனால் சரியாகி விடுமா?''
""அப்பவும் நீங்க...''
""நீ எதற்காக வந்திருக்கிறாய் என்று பார்த்தேன். பாவ மன்னிப்பு கேட்கவோ, பிராயசித்தம் செய்யவோ
நீ வந்திருக்கலாம். என் உறவினர்கள் மத்தியில் இந்த முஹல்லாவில், என் மகன் காலித் பயங்கரவாதி
கிடையாது என்று இன்றைக்கு தெரிஞ்சிடுச்சு... நாளைக்கு உலகத்திற்கும் தெரிஞ்சிடும்.''
""அப்பா என்னை மன்னிச்சிடுங்க.''
""உன்னை நான் மன்னிக்காம போனால்,
துப்பாக்கி, தோட்டா எதுவுமில்லாமல், நான் உன்னை சுட்டதற்கு சமம். உனக்கும், எனக்கும் வித்தியாசம் வேணாமா?''
சுனில் தேஷ்முக், கதறி அழுதான். அவன் மீது படிந்த கறையை, அந்த கண்ணீர் துடைக்குமா?
""சுனில், இனி நீ இங்கே இருப்பது ஆபத்து. எப்ப வேணுமானாலும் ஜனங்களுக்கு உண்மை தெரிஞ்சிடும். அப்புறம் அவர்களை தடுக்க முடியாது.''
அதைக் கேட்டு நிலை குலைந்தான் சுனில் தேஷ்முக்.
ஒரு நிரபராதியை, தான் கொன்றதன் விளைவாக, இத்தனை அப்பாவிகள் ஆயுதம் ஏந்துவதா? தன்னுடைய தவறான செயலின் விளைவு, கண் முன் நிற்பதை கண்டு தலைகுனிந்தான். வெளியே புறப்பட போன சுனில் தேஷ்முக்கை, ""மகனே...'' என்று அழைத்து, நெஞ்சோடு ஆரத் தழுவினார் ஹஸன்பாய்.
""என்னை மன்னிச்சிடுங்கப்பா நான் பாவி...''
""ஒரு மகனை நான் பறிகொடுத்துட்டேன். இப்போ இன்னொருத்தனையும் பறிகொடுக்க விரும்பல. உனக்கு என்ன தண்டனை கொடுத்தாலும், என் பையன் எனக்கு திரும்ப கிடைக்க மாட்டான். இதுபோல, எத்தனை பெற்றோர் தங்கள் பிள்ளையை இழந்து தவிக்கின்றனரோ... எத்தனை குடும்பங்கள் வீண் பழியை சுமந்து கிடக்குதோ, அதை மட்டும் அடுத்த முறை துப்பாக்கியை எடுக்கும் போது, ஒரு நிமிடம் யோசித்து பார்.''
கதவுக்கு வெளியே அவர்கள் பேசியதை, ஒரு உருவம் மறைந்திருந்து கேட்டது. நிழலைப் பார்த்து, அது யாரென தெரிந்து கொண்டான் சுனில் தேஷ்முக்.
சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷனை நோக்கி, ஆட்டோவில் சென்று கொண்டிருந்தான் சுனில் தேஷ்முக். அவனால் இன்னும் அந்த நாளை மறக்க முடியவில்லை. மும்பை போலீஸ் துறையில் பணியாற்றிக் கொண்டிருந்தார். புனேயில் ஒரு பயங்கரவாதி இருப்பதாக தகவல் கிடைக்க, தன்னுடைய குழுவுடன் அங்கே சென்றான். அவர்கள் தேடி வந்த காலித், ஒரு அப்பாவி. ஓட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்தவனை சுற்றி வளைத்தனர். அந்த நேரம் பார்த்து, காலிதின் பேன்ட் பாக்கெட்டிலிருந்த மொபைல் அழைக்க, அதை எடுக்க அவன் கையை பேன்ட் பாக்கெட்டுக்குள் விட, "சார்... ஆயுதம் எடுக்கிறான் உஷார்...'
ஒரு நிமிடம் தான். சுனில் தேஷ்முக்கின் துப்பாக்கியிலிருந்து புறப்பட்ட தோட்டா, காலிதின் நெஞ்சை துளைத்தது. அவன் அப்படியே சரிந்து விழுந்தான். அவன் அருகே சென்று ஆராய்ந்த போது, அவன் எடுக்க இருந்தது ஆயுதம் இல்லை, வெறும் மொபைல் போன் தான் என்று தெரிந்து, துடித்துப் போனான் சுனில் தேஷ்முக்.
அதன்பிறகு விசாரித்ததில், காலித் நல்ல பையன் என்றும், அலுவலக பணி பொறாமையில், அவனைப் பற்றி தவறாக யாரோ தகவல் தந்துள்ளனர் என்றும் தெரிந்தது. ஒரு மனிதனுடைய ரத்தம், இங்கே
தண்ணீரை விட மலிவாகி விட்டது.
உயர் அதிகாரியிடம், தன் ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்தான் சுனில் தேஷ்முக்.
"இதற்கெல்லாம் வருத்தப்படலாமா? அது ஒரு விபத்து...'
"அது ஒரு கொலை சார்...'
"மறந்திடு...'
"சுலபமில்லை... நாம கொலை செய்தால் மட்டும் பதக்கமும், பதவி உயர்வும் ஏன் சார் கொடுக்கிறாங்க. நமக்கு ஏன் தண்டனை தருவதில்லை...'
"வாட் ரப்பிஷ். இந்த வேலைய விட்டு என்ன
செய்யப் போகிறாய்?'
"நான் செய்த பாவத்திற்கு பிராயச்சித்தம் செய்யப் போகிறேன்...'
சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன் அருகே, ஆட்டோ நின்றது. ரயிலைத் தேடி சுனில் தேஷ்முக் சென்ற போது, யாரோ பின் தொடர்வதை உணர்ந்து, திரும்பிப் பார்த்தான்... அன்று, ஹஸன்பாயுடன் பேசிக் கொண்டிருந்ததை, ஒட்டுக் கேட்டவன் இவனே!
""திலாவர் நீயா?''
""ஆமாம். ரூபியும் வந்திருக்கிறாள். நீ, நம்மிடம் சொல்லாம போகலாமா?''
""சாரி... கையில் மறைச்சு வச்சிருக்கியே... என்ன அது?''
பேப்பரால் மூடப்பட்டிருந்ததை, திலாவர் திறந்தான். தொட்டியுடன், ரோஜா செடி!
ரூபியும் ஓடி வந்தாள்.
""மாமா...'' அவளை தூக்கி முத்தமிட்டான்.
""ஏன் மாமா எங்களை விட்டுட்டு போறே?''
""திரும்ப வருவேன். ரோஜா செடி எனக்கா... நான் அதை பத்திரமா பார்த்துக்கவா?''
""அது உன்னை பத்திரமா பார்த்துக் கொள்ளும்.''
ரயில் புறப்பட்டது, திலாவரும், ரூபியும் கை அசைத்தனர். அந்த ரோஜா செடியை நெஞ்சோடு அணைத்த சுனில் தேஷ்முக்கால், அழுகையை மட்டும் கட்டுப்படுத்த முடியவில்ல


Advertisement
வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajagopal - Chennai  ( Posted via: Dinamalar Android App )
27-அக்-201207:29:47 IST Report Abuse
Rajagopal Thanks to all
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X