பொது செய்தி

தமிழ்நாடு

கப்பலை மீண்டும் கடலுக்குள் கொண்டு செல்ல முடியுமா? : சிங்கப்பூர் நிபுணர் குழு சென்னையில் நேரில் ஆய்வு

Updated : நவ 01, 2012 | Added : நவ 01, 2012 | கருத்துகள் (2)
Share
Advertisement
கப்பலை மீண்டும் கடலுக்குள் கொண்டு செல்ல முடியுமா? : சிங்கப்பூர் நிபுணர் குழு சென்னையில் நேரில் ஆய்வு

நீலம் புயல் சீற்றத்தால், சென்னையில் தரை தட்டிய கப்பலை மீட்க முடியுமா என, சிங்கப்பூரில் இருந்து வந்த நிபுணர் குழு ஆய்வு நடத்தி வருகிறது. ஆய்வுக்குப்பின், இரண்டு நாளில் மீட்பு முயற்சிகள் தொடங்கும் என, தெரிகிறது. கப்பலில் தவித்த ஊழியர்கள், ஹெலிகாப்டர்கள் மூலம் நேற்று பத்திரமாக மீட்கப்பட்டனர். அலையில் சிக்கிய ஐந்து ஊழியர்களை தேடும் பணி தொடர்கிறது.

"நீலம்' புயல் சீற்றம் காரணமாக, சென்னைத் துறைமுகத்திற்குள் இருந்த கப்பல்கள் நடுக்கடலுக்கு அனுப்பப்பட்டன. மும்பையிலிருந்து கச்சா எண்ணெய் ஏற்றி வந்த, "பிரதீபா காவேரி' என்ற கப்பலும் நடுக்கடல் நோக்கிச் சென்றது. திடீரென புயல் சீற்றத்தில் இழுத்துச் செல்லப்பட்டு, இந்த கப்பல், பெசன்ட் நகர் ஊரூர் குப்பம் அருகே, தரை தட்டி நின்றது. இந்த கப்பலில், மாலுமிகள் உட்பட, 37 பேர் இருந்தனர். ஆக்ரோஷ அலைகளைப் பார்த்து மிரண்டுபோன ஊழியர்கள், ஒரு படகில் தப்ப முயன்றனர். 22 பேர் படகில் வந்தபோது, திடீரென படகு கவிழ்ந்தது. ஊழியர்கள், கடல் அலையில் தத்தளித்தனர். அப்பகுதி மீனவர்கள் சென்று, தத்தளித்த, 16 பேரை பத்திரமாக மீட்டனர்.

தமிழகத்தைச் சேர்ந்த ஆனந்த் மோகன் என்பவர் அலையில் சிக்கி இறந்தார். மற்ற ஐந்து பேர் அலையில் இழுத்துச் செல்லப்பட்டனர். இவர்களைத் தேடும் பணி, கடலோர காவல் படை ஹெலிகாப்டர் மூலம் நடந்து வருகிறது.
மேலும், கப்பலில் சிக்கியிருந்த, 15 பேரை மீட்கும் முயற்சியில் கடலோர காவல் படையினர் நேற்று ஈடுபட்டனர். ஹெலிகாப்டர் உதவியுடன், 15 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். மீட்கப்பட்ட, 31 பேரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். துறைமுகத்திலிருந்து வெளியேறிய கப்பல், எரிபொருள் இல்லாமலும், இன்ஜின் பழுதாலும், அலையில் இழுத்துச் செல்லப்பட்டு, தரை தட்டியது தெரிய வந்துள்ளது.

சிங்கப்பூர் நிபுணர் குழு : தரைதட்டிய கப்பல், ஆழம் குறைந்த கரையோரப் பகுதியில் புதைந்துள்ளதால், மீட்பது பெரும் சவாலாக இருக்கும் என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து, சென்னைத்துறைமுக தலைவர் அதுல்யமிஸ்ரா கூறுகையில், ""கப்பலில், 360 டன் கச்சா எண்ணெய் உள்ளது. கப்பலில் ஏதேனும் பழுது ஏற்பட்டால், கசிந்து, கடல் மாசுபடும் அபாயம் உள்ளது. இதைக் கருத்தில் கொண்டு, துறைமுக நிர்வாகமே கப்பலை மீட்கும் முயற்சியில் இறங்கும்,'' என்றார். ஆனால், கப்பலை மீட்பது எளிதான விஷயம் இல்லை என்பதால், சிங்கப்பூரைச் சேர்ந்த பிரத்யேக மீட்பு நிறுவனத்தின் உதவி கோரப்பட்டுள்ளது. நேற்று பிற்பகலில், அந்த நிறுவனத்தைச் சேர்ந்த, ஏழு பேர் சென்னை வந்தனர். எந்த வகையில் கப்பலை மீட்கலாம் என்பது குறித்து, இந்தக்குழு ஆய்வு நடத்தி வருகிறது.

ஓரிரு நாளில் மீட்பு? : கப்பலின் கீழ் பகுதியில் தான், 360 டன் கச்சா எண்ணெய் உள்ளது. இவற்றை மேல் பகுதிக்கு கொண்டு வந்தால், கப்பலை மீட்க எளிதாக இருக்கும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது. நிபுணர் குழுவினர் ஆலோசனைப்படி, மீட்பு முயற்சிகள் ஓரிரு நாளில் தொடங்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த கப்பல் கடந்த செப்டம்பர் மாதம், கோல்கட்டா பஜ் பஜ் துறைமுகத்தில் இருந்து புறப்பட்டு கடந்த, 26ம் தேதி எண்ணெய் சரக்குடன், சென்னை துறைமுகத்திற்கு வந்து சேர்ந்தது. கப்பல் கேப்டன் கார்ல் பெர்னான்டஸ். கப்பல் நிறுவன அதிகாரிகள் மற்றும் பொறியாளர்கள், சிப்பந்திகள் என 37 பேர் கப்பலில் இருந்துள்ளனர்.
கடந்த 27ம் தேதி, சரக்கு இறக்கிவிட்டு துறைமுகத்தின் வெளியே நங்கூரம் பாய்ச்சி நிறுத்தப்பட்டுள்ளது. அதன் பிறகு சரக்கு இல்லாமல், நிறுவனத்தில் இருந்து எந்த தகவலும் கிடைக்காமல், கடலிலேயே காத்திருந்ததாக கூறப்படுகிறது.

பிரச்னைகளின் சிக்கிய கப்பல் : பிரதீபா காவேரி கப்பல், பல்வேறு சிக்கல்களில் சிக்கி தவித்துள்ளது. ஆயுட் காலம் முடிவடைந்துள்ளதாக, சமீபத்தில் இந்த கப்பல் விசாகப்பட்டிணம் அருகே அதிகாரிகளால் சிறைபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கப்பலில் பணிபுரிந்தவர்களுக்கு பல மாதங்களாக சம்பளம் தரப்படவில்லை. இது தொடர்பாக கப்பலில் பணியாற்றியவர்கள் பல்வேறு புகார்களை தெரிவித்துள்ளனர். கப்பல் சென்னை துறை முகத்தில் இருந்தபோது, 37 ஊழியர்களுக்கு போதிய உணவு, சுத்தமான குடிநீர் கூட கிடைக்கவில்லை. கடந்த இரண்டு நாட்களாக இரண்டு வேளை உணவு மட்டுமே வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கப்பலில் இருந்தவர்கள் : பிரதீபா காவேரி கப்பலின் கேப்டன் மும்பையை சேர்ந்த கார்ல் பெர்னான்டஸ், 46 . தலைமை அதிகாரி அஜ்மீரை சேர்ந்த சுராப்சிங், 29, இரண்டாம் நிலை அதிகாரி கேரளா, சேலக்காராவை சேர்ந்த கோபாலகிருஷ்ணன், 43, மூன்றாம் நிலை அதிகாரி புனேவை சேர்ந்த பீஷேவ்,29, இளநிலை அதிகாரி புனேவை சேர்ந்த ரூபக்குமார் மிஸ்ரா, 39, மற்றும், முசாபர்பூர் சேர்ந்த ராகுல்குமார், கேரளாவை சேர்ந்த சரத் அர்ச்சண்டகாத், மும்பை சேர்ந்த காமில்கர் ராஜ் ரமேஷ், பெல்காமை சேர்ந்த ஜட்தேவ் ருஷாப். முதன்மை பொறியாளர் ஜந்த்வாலாவை சேர்ந்த ஜீவன்பிரகாஷ், இரண்டாவது பொறியாளர் புதுச்சேரி, மரக்காணத்தை சேர்ந்த ஆனந்த் மோகன்தாஸ், மூன்றாவது பொறியாளராக திண்டுக்கல்லை சேர்ந்த நரேந்திரா, நான்காம் நிலை பொறியாளர்களான கான்பூரை சேர்ந்த நிதின்குமார் குப்தா, நலசோப்ராவை சேர்ந்த ஜெயந்த் பத்மாகர் நாக்கர், இளநிலை பொறியாளர்களான மனர்லோக்ஷாவை சேர்ந்த மனோஜ்குமார், அரக்கோணத்தை சேர்ந்த நிரஞ்சன் .

விழுப்புரம் இன்ஜினியர் பலி : இறந்த பொறியாளர், விழுப்புரம் மாவட்டம், வானூர் தாலுகா நெசல் கிராமத்தைச் சேர்ந்த மோகன்தாஸ்-விஜயா தம்பதியரின் மூத்த மகன் ஆனந்த், 31. தகவல் அறிந்த அவரது பெற்றோர் நேற்று சென்னைக்குச் சென்று மருத்துவனையில் உள்ள மகனின் உடலைப் பார்த்து கதறியழுதனர்.

உயிர் பலி நிகழ்ந்ததற்கு கேப்டன் காரணமா? : கப்பல் கேப்டன் கார்ல் பெர்னான்டஸ் புயல் உக்கிரம் அடைந்த நிøயில் கார்ல் பெர்னான்டஸ்,"கப்பல் நிலை மிகவும் மோசமாக உடையும் தருவாயில் உள்ளது. மேலும், பற்றி எரியும் அபாயம் உள்ளது' என, பீதியை கிளப்பியதாக கூறப்படுகிறது. இதனால், கப்பலில் இருந்தவர்கள் பயந்தனர். அவர்களில் , 22 பேரை முதல் கட்டமாக பாதுகாப்பு படகு மூலம் கடலில் இறக்கியுள்ளார்.
அப்போது, ஏற்பட்ட ராட்சத அலையால் படகு கவிந்து, ஒருவர் உயிரிழந்தார். ஐந்து பேர் மாயமாகியுள்ளனர்.
கப்பல் தரை தட்டி நின்றதால் ராட்சத புயலில் சிக்கி கப்பலே கவிழ்ந்து இருந்தாலும், மூழ்கியிருக்காது. அதிலிருந்த அனைவரும் உயிர் பிழைத்திருக்கலாம். இந்த முன்யோசனை கூட இல்லாமல் கப்பல் கேப்டன் அவசரப்பட்டதுதான் இந்த கோர விபத்திற்கு காரணம் என கூறப்படுகிறது.

மோகன்தாஸ் புயலில் சிக்கி பலியான ஆனந்தின் தந்தை: என் மகனுக்கு நிறுவனத்தின் சார்பில் கடந்த சில மாதங்களாக சம்பளம் கொடுக்கவில்லை. இதனால், தன்னை விடுவிக்கும் படி சம்பந்தப்பட்ட கப்பல் நிறுவன அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு கொடுத்தான். எனது சார்பிலும் கடந்த மாதம் 15ம் தேதி "ஷிப்பிங் மாஸ்டர்' க்கு கடிதம் எழுதினேன். ஆனாலும், அவர்கள் விடுவிக்கவில்லை. தற்போது, கடலுக்கு மகனை தாரை வார்த்து விட்டேன். புயலின்போது, கப்பல் கேப்டன்," புயலால் கப்பல் உடைந்து தீ பிடிக்கும் தருவாயில் உள்ளது. உடனே தப்பிச் செல்லுங்கள்' என பீதியை கிளப்பியுள்ளார். இதனால், அவசரத்தில் இறங்கி உயிரை மாய்த்துக் கொண்டான்.

- நமது நிருபர்-

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Erode kingcobra - erode,இந்தியா
02-நவ-201215:48:45 IST Report Abuse
Erode kingcobra என்ன சார் ஆயில் இறக்கி விட்டு அடுத்த உத்தரவுக்கு காத்திருப்பதாக ஒரு செய்தி ,உடனே ஆயில் கிழிருந்து மேல கொண்டுவந்தால் கப்பலை கடலுக்குள் கொண்டு செல்லலாம் என்று ஒரு செய்தி ,சட்டு புட்டுன்னு கப்பல காப்பது விடுங்க .ஏற்க னவே சம்பளம் இல்லாம கஷ்ட படறாங்க .
Rate this:
Cancel
என்னுயிர்தமிழகமே - hyderabad,இந்தியா
02-நவ-201205:35:01 IST Report Abuse
என்னுயிர்தமிழகமே வேதனையாக உள்ளது ஆனந்த் குடும்பத்தினரே, ஆழ்ந்த அனுதாபங்கள், இப்போ 360 டன் கச்சா எண்ணெய், என்ன பண்ண போகிறார்கள் என்று பாப்போம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X