சென்னை : நிதி நிலைக்கு ஏற்ப, 36 நகராட்சிகள் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. தமிழ்நாடு நகராட்சிகள் விதிப்படி, நகராட்சிகள் தரம் பிரிக்கப்பட்டுள்ளன. இதன்படி, 10 கோடி ரூபாய்க்கு மேல் ஆண்டு வருமானம் கொண்ட நகராட்சிகள், சிறப்பு நிலை என்றும், ஆறு கோடி முதல் 10 கோடி ரூபாய் வரை வருமானம் கொண்ட நகராட்சிகள், தேர்வு நிலை என்றும், நான்கு கோடி முதல் ஆறு கோடி ரூபாய் வரை வருமானம் கொண்டவை, முதல் நிலை நகராட்சிகள் என்றும், நான்கு கோடி ரூபாய்க்கு குறைவான வருமானம் கொண்டவை, இரண்டாம் நிலை நகராட்சிகள் என்றும் தரம் பிரிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், தற்போதுள்ள 49 மூன்றாம் நிலை நகராட்சிகளில், 36 நகராட்சிகள் தங்களை தரம் உயர்த்துமாறு கோரி, தீர்மானங்களை அனுப்பியிருந்தன. 2006 முதல் 2008-09ம் ஆண்டு வரையிலான தங்களது வருமான, செலவு கணக்குகளையும், நகராட்சி நிர்வாக இயக்குனருக்கு இவை அனுப்பி வைத்திருந்தன. இதை பரிசீலித்த அரசு, 36 நகராட்சிகளை தரம் உயர்த்த முடிவு செய்து உத்தரவிட்டுள்ளது. நகராட்சி நிர்வாக முதன்மைச் செயலர் அசோக் வரதன் ஷெட்டி இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார். இதன்படி, மறைமலைநகர், குறிச்சி மூன்றாம் நிலை நகராட்சிகள், சிறப்பு நிலை நகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன.
பம்மல், திருவேற்காடு, இனாம்கரூர், கவுண்டம்பாளையம், குனியமுத்தூர், வால்பாறை ஆகியவை, தேர்வு நிலை நகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன. மூன்றாம் நிலை நகராட்சிகளான பூந்தமல்லி, கள்ளக்குறிச்சி, தாந்தோணி, அவனியாபுரம், திருப்பரங்குன்றம், பல்லடம், திருத்தங்கல் ஆகியவை முதல் நிலை நகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன. அனகாபுத்துர், திருத்தணி, ஜோலார்பேட்டை, பேர்ணாம்பட்டு, நரசிங்கபுரம், பள்ளிபாளையம், வேதாரண்யம், துவாக்குடி, ஜெயம்கொண்டம், அரியலூர், ஆனையூர், கூடலூர், கீழக்கரை, ராமேஸ்வரம், புஞ்சை புளியம்பட்டி, வெள்ளகோவில், டி.கூடலூர், நெல்லியாளம், அம்பாசமுத்திரம், விக்ரமசிங்கபுரம், காயல்பட்டினம் ஆகிய 21 மூன்றாம் நிலை நகராட்சிகள், இரண்டாம் நிலை நகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE