கமுதி:ராமநாதபுரம், கமுதி அருகே விக்கிரபாண்டியபுரத்தைச் சேர்ந்த சிலையழகு என்பவர், துபாய்க்கு சென்று, அங்கு இறந்தார். மாவட்ட நிர்வாகம், அமைச்சர், எம்.எல்.ஏ., உதவாத நிலையில், கிராமத்தினர் வழங்கிய 50 ஆயிரம் ரூபாய் மூலம், அவரது உடல் சொந்த ஊர் வந்தது.விக்கிரபாண்டியபுரத்தை சேர்ந்தவர் சிலையழகு. அ.தி.மு.க., பிரதிநிதியாக இருந்தார். ஆறு ஆண்டுகளுக்கு முன், துபாய்க்கு, கட்டுமான பணிக்குச் சென்றார். இந்நிலையில், அவர் மாரடைப்பால் இறந்து விட்டதாகவும், 50 ஆயிரம் ரூபாய் செலுத்தி, உடலை பெற்றுக்கொள்ளுமாறு, டிச.,14 ல், கட்டுமான ஏஜன்சியினர், சிலையழகு குடும்பத்தினரிடம் தகவல் தெரிவித்தனர். ஆனால், அவரது குடும்பத்தினர் பணமின்றி தவித்தனர்.
முதுகுளத்தூர் எம்.எல்.ஏ., முருகன் (அ.தி.மு.க.,), அமைச்சர் சுந்தரராஜை சந்தித்து, உதவுமாறு கிராமத்தினர் முறையிட்டனர்; உதவி கிடைக்கவில்லை. அந்த கிராமத்தினர், வீடு, வீடாக பணம் வசூலித்தனர். இதில் கிடைத்த 50 ஆயிரம் ரூபாயை, நிறுவனத்திற்கு அனுப்பினர். நேற்று காலை, சிலையழகு உடல் ஊர் வந்தது. கிராமத்தினர் செலவில் இறுதிச்சடங்கு செய்யப்பட்டது. சிலையழகிற்கு மனைவி காளிமுத்து, மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர்.
கிராமத்தினர் கூறுகையில், "அமைச்சர், எம்.எல்.ஏ., விடம் முறையிட்டபோது, ரேஷன் கார்டு நகலை மட்டும் பெற்றுக் கொண்டனர். "கலெக்டரிடம் பேசிக்கொள்கிறோம்' என்றனர். பின், இதுகுறித்து கேட்டபோது, "கொஞ்சம் வேலையாக இருக்கிறோம், பின்னர் பார்ப்போம்' என, கூறிவிட்டனர்' என்றனர்."முதல்வர் ஜெ., யின் உதவி கிடைக்குமா?' என, சிலையழகு குடும்பத்தினர் எதிர்பார்க்கின்றனர்.
முருகன் எம்.எல்.ஏ., கூறுகையில், ""முழு தகவல் தெரிவிக்கவில்லை. இருப்பினும், அழைத்து சென்று கலெக்டரிடம் மனு கொடுத்தோம். உடலை கொண்டு வரும் பணி நடந்து வரும் நிலையில், அவசர வேலையாக சென்னை சென்றுவிட்டேன்,'' என்றார்.அமைச்சர் கூறுகையில், ""நான் அந்த தொகுதி எம்.எல்.ஏ., இல்லை. விக்கிரபாண்டியபுரத்தில் இருந்து யாருமே என்னை சந்திக்கவில்லை,'' என்றார். கலெக்டர் நந்தகுமார் கூறுகையில், ""என்னிடம் மனு கொடுக்கவில்லை,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE