பியூனஸ் அயர்ஸ்: தென் அமெரிக்காவின், "மாயன்' காலண்டரில் நம்பிக்கையுள்ள மக்கள், கூட்டாக தற்கொலை செய்ய திட்டமிட்டு உள்ளதால், அர்ஜென்டினா நாட்டு போலீசார், உயர்ந்த மலைகளுக்கு செல்லும் வழியை அடைத்துள்ளனர்.மெக்சிகோ நாட்டை பூர்வீகமாக கொண்ட "மாயன்' இனத்தினர், 5,126 ஆண்டுகளை கொண்ட காலண்டரை தயாரித்து பயன்படுத்தி வந்தனர். இந்த காலண்டர், கி.மு.3114ல் துவங்கி, இன்றுடன் முடிகிறது.மாயன் காலண்டர், ஒரு லட்சத்து, 44 ஆயிரம் நாட்களை கொண்டது. அதன் பின், இந்த காலண்டர் மறு சுழற்சிக்கு உட்பட்டது. இன்றுடன் இந்த காலண்டர் முடிவடைவதால், உலகம் இன்று அழிந்து விடும் என, சிலரால் வதந்தி பரப்பப்படுகிறது.
நாசா விண்வெளி மறுப்பு:அமெரிக்காவின் "நாசா' விண்வெளி ஆய்வு மையம் இதை மறுத்துள்ளது. எரிமலை சீற்றம், சூரிய காந்த புயல், கோள்களின் மோதல், விண்கற்களின் தாக்குதல், சுனாமி உள்ளிட்ட பல காரணங்களால், உலகம் அழிவதற்கான வாய்ப்புகள் உள்ளன.ஆனால், மேற்கண்ட சம்பவங்கள் ஒரே நேரத்தில் நிகழ்ந்தால் தான் உலகம் அழியும். இப்போதைக்கு இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதற்கு வாய்ப்பில்லை. எனவே, இன்று உலகம் அழியும் என்பது கட்டுக்கதை என, நாசா விஞ்ஞானிகள் தெளிவுப்படுத்தி உள்ளனர்.தென் அமெரிக்க நாட்டவர்கள், இந்த காலண்டரை அதிகம் நம்புகின்றனர். மாயன் காலண்டர் இன்றுடன் முடிவடைவதை, சிலர் விழாவாக கொண்டாடுகின்றனர்.சீனாவில் உள்ள ஒரு மத அமைப்பினர், உலகம் அழிவதற்குள் சொத்துக்களை எல்லாம் எங்களிடம் ஒப்படைத்து விடுங்கள்' என, பிரசாரம் செய்து வருகின்றனர். இந்த அமைப்பை சேர்ந்த, 1,000 பேரை, சீன அரசு கைது செய்துள்ளது.மாயன் காலண்டரை பின்பற்றும் சிலர், உலகம் அழிவதற்குள் ஒட்டு மொத்தமாக இறந்துவிட திட்டமிட்டுள்ளனர்.
இது தொடர்பாக இணைய தளங்களில் சிலர் அழைப்பு விடுத்துள்ளனர். "பேஸ்புக்' இணைய தளத்தில், இதற்கான விளம்பரங்கள் வெளியாகியுள்ளதால், இதை ஏற்று, 150 பேர் கூட்டாக தற்கொலை செய்து கொள்ள பதில் அனுப்பியுள்ளனர்.அர்ஜென்டினாவில், "மாயன்' கோவில்கள் உள்ளன. உயர்ந்த மலை மீது அமைந்துள்ள கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் சிலர், கூட்டாக தற்கொலை செய்து கொள்ளும் அபாயம் உள்ளது. இதனால், உயர்ந்த மலை பகுதிகளுக்கு செல்லும் வழிகளை, அர்ஜென்டினா போலீசார் அடைத்துள்ளனர்.இன்னும் சில நாடுகளில், உலகம் அழிந்தால், அதிலிருந்து பாதுகாத்து கொள்ள, பூமிக்கு அடியில் பதுங்கு அரண்களை வடிவமைத்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE