திண்டுக்கல் : ""தோல்' நாவலுக்காக வழங்கப்பட்டுள்ள "சாகித்ய அகாடமி' விருது காலதாமதமாக வழங்கப்பட்டாலும், தொழிலாளர்களின் உணர்வுகளுக்கு அளிக்கப்பட்ட கவுரவமாக கருதி, மகிழ்வுடன் ஏற்றுக்கொள்கிறேன்,'' என, எழுத்தாளர் செல்வராஜ் தெரிவித்தார். திண்டுக்கல்லில் வக்கீலாக பணிபுரிபவர் செல்வராஜ், 74. முற்போக்கு சிந்தனை கொண்ட இவர் பல்வேறு சிறுகதைகள் மற்றும் நாவல்களை எழுதியுள்ளார். சிறுவயதில் கேரளாவில் உள்ள தேவிகுளம், பீர்மேடு தேயிலை தோட்டங்களில் பெற்றோருடன் தங்கியிருந்ததால் தொழிலாளர்களின் பிரச்னைகளை தெரிந்து வைத்திருந்தார். கல்லூரி படிப்பிற்காக திருநெல்வேலிக்கு சென்றபோது தொ.மு.சி.ரகுநாதன், தி.க., சிவசங்கரன், பேராசிரியர் வானமாமலையுடன் ஏற்பட்ட தொடர்பினால் இலக்கியங்களில் ஈடுபாடு ஏற்பட்டது. சாந்தி, ஜனசக்தி, சரஸ்வதி, செம்மலர், சிகரம் போன்ற பத்திரிக்கைகளில் பணியாற்றியதோடு, சிறுகதைகளையும் எழுதி வந்தார். திருநெல்வேலியில் விவசாயிகளின் போராட்டத்தை மையமாக கொண்டு "மலரும் சருகும்' என்ற நாவலை முதல்முறையாக எழுதினார். தொடர்ந்து, "தேநீர்', "மூலதனம்', "அக்னி குண்டம்' போன்ற நாவல்கள் இவரது படைப்பில் வெளிவந்தன. சாமி.சிதம்பரனார், ஜீவானந்தம் ஆகியோரின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக்கொண்டு, குறுநாவல்களை எழுதியுள்ளார். விருது: திண்டுக்கல்லில் தோல் பதனிடும் ஆலைத் தொழிலாளர்களுக்காக, தொழிற்சங்கத்தினர் உரிமைக் குரல் எழுப்பியதையும், இதனால் அவர்களின் குடும்பங்களில் ஏற்பட்ட பாதிப்புகளையும், இறுதியில் தொழிலாளர்கள் வெற்றி பெற்று உரிமைகளை மீட்டெடுத்ததையும் நேரில் பார்த்தார், செல்வராஜ். அதன் அடிப்படையில், 2010ல் வெளியான "தோல்' நாவலுக்கு, தற்போது மத்திய அரசின் "சாகித்ய அகாடமி' விருது வழங்கப்பட்டுள்ளது.
செல்வராஜ் கூறியதாவது: முற்போக்கு எழுத்தாளர்களை மத்திய, மாநில அரசுகள் கூர்ந்து கவனிக்கத்தொடங்கியுள்ளன. அவர்களின் நாவல்களுக்கும் இலக்கிய ரசனை உண்டு என்பதை உணரத்துவங்கியுள்ளனர். காலதாமதமாக இந்த விருது எனக்கு கிடைத்திருந்தாலும், ஏழை தொழிலாளர்களின் உணர்வுகளுக்கு அளிக்கப்பட்ட கவுரவமாக கருதி இதை மகிழ்வுடன் ஏற்கிறேன். இவ்வாறு செல்வராஜ் கூறினார்.
இவருக்கு பாரத புத்திரி என்ற மனைவியும், வேத ஞான லட்சுமி என்ற மகள், சித்தார்த்தன், சார்வடகன் பிரபு என்ற மகன்கள் உள்ளனர். தொடர்புக்கு: 90803 52320. யாருக்கு: இந்திய மொழிகளில், வெளியாகியுள்ள கதை, நாவல்களில் சிறந்த படைப்புகளை உருவாக்கிய எழுத்தாளர்களுக்கு, ஆண்டுதோறும் சாகித்ய அகடமி விருதுகள் வழங்கப்படுகின்றன.
இந்தாண்டு, 24 இந்திய மொழிகளில் இருந்து, கவிதை நூல்கள் 12, சிறுகதை 4 , நாவல்கள் 4 மற்றும் சுயசரிதை, விமர்சனம் பிரிவில் தலா ஒரு நூல்கள் தேர்வு பெற்றுள்ளன. தமிழில் சிறந்த நூலை தேர்வு செய்யும் குழுவில், பேராசிரியர் கே.வி. பாலசுப்ரமணியன், அப்துல் ரகுமான், சா.கந்தசாமி ஆகியோர், இடம் பெற்று இருந்தனர்.
விருது வென்ற தாமிரபரணி மைந்தர் : "சாகித்ய அகாடமி' துவக்கப்பட்டு, 1955ல், முதல் விருது பெற்றவர் ரா.பி.சேதுப்பிள்ளை; தமிழ் இன்பம் படைப்பிற்காக விருது பெற்றார். அவரை தொடர்ந்து வல்லிக்கண்ணன், தொ.மு.சி.ரகுநாதன், சு.சமுத்திரம், கி.ராஜநாராயணன், தோப்பில் முகமது மீரான், தி.க.சிவசங்கரன் என, நெல்லையை சேர்ந்தவர்கள் "சாகித்ய அகாடமி' பெற்றனர். இப்பட்டியலில் நெல்லை தென்கலம் கிராமத்தை சேர்ந்த செல்வராஜூம் இணைந்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE