பெங்களூரு:முடி வெட்ட பார்பர் ஷாப் சென்று, சவர தொழிலாளியின் மகனை காப்பாற்றும் முயற்சியில் இறங்கியுள்ள, இளைஞர்களின் நல்ல எண்ணத்தை பலரும் பாராட்டுகின்றனர்.
பெங்களூரு நகரின், பெல்லாண்டர் பகுதியில், "பார்பர் ஷாப்' நடத்தி வருபவர், ரஷீத் ஆலம், 30. இவரின் கடைக்கு, பன்னாட்டு கம்ப்யூட்டர் நிறுவனம் ஒன்றில் பணியாற்றும், ரஷீத் கான், 22, முடிவெட்டி கொள்ள, அவ்வப்போது செல்வது வழக்கம்.அதுபோன்றே, ரஷீத் கானின் நண்பர், நிலாப் என்ற, கை நிறைய சம்பாதிக்கும், தகவல் தொழில்நுட்ப துறை இளைஞரும், அந்த கடைக்கு செல்வது உண்டு.
ஒரு நாள், கடையில் முடிவெட்டி கொண்டிருந்த ரஷீத் ஆலம், சோகமாக காணப்பட்டார். முடி வெட்ட சென்ற நிலாப் மற்றும் ரஷீத் கான், "ஏன் சோகமாக இருக்கிறீர்கள்' என, கேட்டுள்ளனர். பார்பர் ஷாப் உரிமையாளர் தெரிவித்த தகவல், அந்த இளம் உள்ளங்களை கரைத்தது.
"என் மகன் சிசானுக்கு, ரத்த புற்றுநோய் உள்ளது. 6 வயதே ஆகும் அவனுக்கு இது வரை கையில் இருந்த பணத்தை எல்லாம் செலவழித்து, சிகிச்சை அளித்தோம். பணம் அனைத்தும் கரைந்து விட்டது; அடுத்து என்ன செய்வது என தெரியாமல் விழித்து கொண்டிருக்கிறேன்' என, கூறினார்.
ரஷீத் ஆலம் சோக கதையை கேட்டு மனம் இரங்கிய அந்த இளைஞர்கள், சிறுவன் சிசானின் மருத்துவ சான்றுகளை வாங்கி பார்த்தனர்.
"நிரந்தர நிவாரணத்திற்கு வழியே இல்லை; 20 லட்ச ரூபாய் செலவழித்தால், எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை அளித்தால், குணம் கிடைக்க வாய்ப்பு உண்டு' என, மருத்துவர்கள் கூறியிருந்தனர்.உடனே, நண்பர்கள் இருவரும், "பேஸ்புக்' இணையதளம் மூலம், "சேவ் சிசான்' என்ற பெயரில் ஒரு பக்கத்தை துவக்கி, அதில், சிறுவன் சிசானின் நோய், சிகிச்சை, அதற்கான செலவு என அனைத்து தகவல்களையும் சேர்த்து, நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்களுக்கு அனுப்பி வைத்து, நிதியுதவி செய்யுமாறு கேட்டு கொண்டனர்.இணைய பக்கத்தை துவக்கிய முதல் நாளில் மட்டும், 40 ஆயிரம் ரூபாய் சேர்ந்ததால், நம்பிக்கை அடைந்த அந்த இளைஞர்கள், தொடர்ந்து பலருக்கும், அனுப்பி, உதவி செய்யுமாறு கேட்டு கொண்டுள்ளனர்.
"பேஸ்புக்' இணைய பக்கத்தில், சிசானின் தந்தை ரஷீத் ஆலம் வங்கி, கணக்கு எண் விவரங்களை அளித்துள்ளதால், நாள் தோறும், குறைந்தபட்சம், சில ஆயிரம் ரூபாயாவது சேர்ந்து வருகிறது.
"சில மாதங்களில், பணத்தை சேர்த்து, மகனுக்கு, எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை அளித்து விட முடியும்' என்ற, நம்பிக்கை அடைந்துள்ள பார்பர் ரஷீத் ஆலம், தன் வாடிக்கையாளர்கள் ரஷீத் கான் மற்றும் நிலாப்பிற்கு நன்றி தெரிவிக்கிறார். இந்த உன்னத முயற்சியில் இறங்கியுள்ள இளைஞர்களை பலரும் பாராட்டுகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE