"நகரங்களில் பயணிக்கும் போது மூச்சு திணறுகிறது'

Added : பிப் 09, 2013 | |
Advertisement
எழுத்தாளர் நாஞ்சில் நாடன், சாகித்ய அகடமி, இயல் உட்பட பல்வேறு விருதுகளை பெற்றவர். கிராமத்து நேசத்தை நெஞ்சில் சுமந்துள்ள நகரத்துவாசி. 65 வயதானவர். 25 ஆண்டுகள் கிராமத்திலும், 40 ஆண்டுகள் நகரத்திலும் வாழ்க்கை அனுபவம் பெற்றவர். சமீபத்தில் சென்னை வந்திருந்த, அவருடன் நகர வாழ்க்கையின் நெருக்கடி மற்றும் கிராம வாழ்முறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் பற்றி உரையாடியதில்
 "நகரங்களில் பயணிக்கும் போது மூச்சு திணறுகிறது'

எழுத்தாளர் நாஞ்சில் நாடன், சாகித்ய அகடமி, இயல் உட்பட பல்வேறு விருதுகளை பெற்றவர். கிராமத்து நேசத்தை நெஞ்சில் சுமந்துள்ள நகரத்துவாசி. 65 வயதானவர். 25 ஆண்டுகள் கிராமத்திலும், 40 ஆண்டுகள் நகரத்திலும் வாழ்க்கை அனுபவம் பெற்றவர். சமீபத்தில் சென்னை வந்திருந்த, அவருடன் நகர வாழ்க்கையின் நெருக்கடி மற்றும்
கிராம வாழ்முறையில் ஏற்பட்டுள்ள

மாற்றங்கள் பற்றி உரையாடியதில் இருந்து...

மகிழ்ச்சியான வாழ்வை தந்ததுகிராமமா, நகரமா?

சந்தேகமே இல்லாமல் கிராமம் தான். இன்று வரை, என் வாழ்க்கை நிகழ்வுகளை, மூன்று கால அளவில் பிரித்துக் கொண்டால், முதலில் நான் வாழ்ந்தது கிராமத்தில்தான். சுற்றுப்புறத்தை தெரிந்து வைத்துக்கொண்டு, அதற்கு இயைந்து வாழ்வது தான் கிராமத்து வாழ்க்கை.இந்தியா முழுவதும் நீண்ட பயணங்கள் செய்திருக்கிறேன். ஆனாலும், எனக்கு நிறைவை தருவது கிராமங்கள் தான். நகரத்துக்குள், நான் திகைத்து போய் விடுகிறேன். சென்னை போன்ற நகரங்களுக்குள் வரும் போது, என் மூச்சு முட்டுகிறது.நகரவாசிகள் கையிலும், பையிலும் பணம் இருக்கிறது. ஆனால், கிராமவாசிகள் வெளிப்படையானவர்கள். ஒரு கிராமத்து பெண் ஆவேசத்துடன், ஒரு வீட்டின் முன் சண்டை போடுவதை பார்க்கலாம். அதே வீட்டில் ஒருவருக்கு சுகவீனம் ஏற்பட்டால், மறுநாள் அதே பெண் வந்து மிகவும் உதவிகரமாக இருப்பதை காண முடியும். நகரம் பாசாங்கு நிறைந்தது.
வாழ்வின் நீண்ட பகுதியை நகரத்தில்

கழித்திருக்கிறீர்கள். நகர நெருக்கடிகளை எப்படி கடந்து சென்றீர்கள்?

இயல்பில் நான் மனிதர்களை நேசிப்பவன். நகரத்தில் என்னோடு பயணிக்கிற ஒருவனுடன் எளிமையாக பேச்சை துவக்கி நட்பு பாராட்டிவிட முடியும். அதை, சக பயணி தொடர்கிறானா என்பதுதான் கேள்வி. விமானத்தில் நீண்ட பயணங்களின் போதோ, ரயில் பயணத்தின் போதோ, பக்கத்தில் அமர்ந்து கொண்டு, ஒரு வார்த்தை கூட பேசாமல் பயணத்தை முடித்து செல்பவர்களை பார்க்க முடிகிறது.அப்போது, நான் மும்பை நகரத்தில் வாழ்ந்தாலும், விற்பனை பிரதிநிதியாக தொழில் செய்ததால், கிராமப்புறங்களிலே அதிகமும் பயணிக்க வேண்டியிருந்தது. இதனால், அங்கும் கிராமம் சார்ந்த அனுபவம் உண்டு.

மும்பை நகரின் சிறப்பு எது?

பல்வேறு அழிவுகளில் இருந்து, அந்த நகரம் மீண்டும் எழுந்துள்ளது. ஒரு மழை நாளில் ரயில்கள் முடங்கிப்போகும் போதோ, போக்குவரத்து முற்றாக முடங்கிக்கிடக்கும் போதோ, அந்த நகரத்து மனிதர்கள் எதையும் எதிர்கொள்வதற்கு தயாராவார்கள்.மழை அதிகமாக பெய்தால், ரயில் போக்குவரத்து முடங்கிவிடும். அப்போது, ஆயிரக்கணக்கான பயணிகள், ரயில் நிலையங்களிலே காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படும். அந்த நேரங்களில், வெளியில் எங்கும் செல்ல முடியாது. அப்போது, அந்த பகுதியில் வசிக்கும் நடைபாதை வாசிகள், பெரிய டிரம்களில் டீ தயாரித்து எடுத்து வந்து பரிமாறுவது; ரொட்டி, பிஸ்கெட்கள் வழங்குவது என, அரவணைக்கும் செயல்களை செய்வார்கள். இது அந்த நகரத்துக்கே உரிய தனிச்சிறப்பாக நான் பார்க்கிறேன். சென்னை மனிதர்கள் இப்படி ஒரு செயலை செய்வார்களா என்ற, கேள்வி எழுகிறது.

இப்போது வசிக்கும் நகரத்தை பற்றி?

நான் கோவையில் வசிக்கிறேன். இங்கு வெள்ளிக்கிழமைகளில் சாலையில் நடந்து போனால், ரோட்டில் தேங்காய்கள் உடைப்பதை பார்க்கலாம். என் கிராமத்து கோவில்களிலும் தேங்காய்கள் உடைப்பார்கள். ஒரு தேங்காய் உடைக்கப்போவதை பார்த்தால், அதன் சில்லுகளை பொறுக்க பலர் காத்திருப்பார்கள். ஆனால், கோவையில் அப்படி ஒரு நிலையை பார்க்க முடியாது. அங்கு நடுரோட்டில் உடைபடும் தேங்காய், கார் டயர்களில் நொறுங்கி, மூன்று நொடிக்குள் வீணாகிவிடும். வீணாகிவிட்டால், அதை எடுத்து செல்ல முடியாது. இதை பொருள் சார்ந்த ஆர்வத்தில் சொல்லவில்லை. வீணாகிறதே என்ற ஆதங்கத்தில் சொல்கிறேன்.

கிராமத்து சிந்தனையை நீங்கள் எப்படி வகைப்படுத்துகிறீர்கள்?

நகரில் தினமும், பல ஆயிரம் தேங்காய்களை நடுரோட்டில் உடைத்து வீணடிக்கின்றனர். அவை ஒரு ஜீவனுக்கும் பயன்படாமல், சாலையில் நசுங்கி வீணாகின்றன. இதை தர்க்க ரீதியாக பார்க்கிறது கிராமத்து மனசு. நான் கிராமத்தில் வளர்ந்ததால், இதில் பயன் சார்ந்த கேள்விகளை எழுப்புகிறேன்.இதேபோல் தான், தினமும் ஆம்னி பஸ்களின் சக்கரங்களுக்கு அடியில் ஆயிரம் ஆயிரம் எலுமிச்சை பழங்களை நசுக்கி வீணடிக்கின்றனர். யாருக்கும் பயன் இன்றி உணவுப்பொருட்கள் வீணாவதை மனம் ஏற்க மறுக்கிறது. கிராமத்து சிந்தனையில் மட்டுமே, பொருட்கள் வீணாவதை பற்றி யோசிக்க முடிகிறது. நகரத்து மனம் அதை கண்டு கொள்வதில்லை. பத்தோடு ஒன்று என்று, விட்டு விடுகிறது. எவ்வளவோ போகிறது, நமக்கு இதில் என்ன? என்று முடங்கி விடுகிறது.

கிராம மனநிலை மாறி உள்ளதா?

மாறித்தான் வருகிறது. நகரங்களில் இருந்து கிராமங்கள் கற்றுக்கொள்ள எவ்வளவோ உள்ளன. கல்வி, மருத்துவம் என்று, பல விஷயங்கள் இருந்தாலும், ஆடம்பரமான தேவையற்ற விஷயங்கள்தான் கிராமத்தை சேர்கின்றன. பாரம்பரிய உணவு வகைகள் நிறைந்திருந்த கிராமங்கள், துரித உணவு மயமாகி வருகின்றன. எளிமையான வாழ்க்கை முறை, பகட்டாக மாறி வருகிறது. இது போன்ற செயல்கள் பெரிய கேள்விகளை எழுப்புகின்றன.

சிந்தனையில் ஏற்பட்டுள்ள தடுமாற்றமாக இதை கூறலாமா?

அப்படித்தான் பார்க்க வேண்டி உள்ளது. 50 ஆண்டுகளுக்கு முன் கிராமங்களில் கொசுக்கள் இல்லை. நகரங்களில் குப்பை குவிகிறது. அதை முறைப்படுத்த நிகர நிர்வாகங்களுக்கு அக்கறை இல்லை. இதனால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.கிராமங்களில் முதியவர்கள் இருந்தார்கள். அவர்களின் அனுபவம் இருந்தது. உடலுக்கு சிறிய பிரச்னை ஏற்பட்டாலும், பதற்றம் அடையாத வகையில் முதியவர்களின் அறிவுரை இருந்தது. அவர்களிடம் இயற்கையோடு இணைந்த செலவில்லா மருத்துவ முறைகளும் இருந்தன.
இப்போது அப்படி அல்ல, லேசான காய்ச்சலுக்கு கூட பதற்றம் அடையும் நிலை உள்ளது. உடனடியாக மருத்துவரை பார்த்து, அதற்கு குறிப்பிட்ட மருந்துகளை எடுத்துக்கொள்ளும் பழக்கம் உள்ளது.உடலுக்கான ஓய்வை கொடுத்து, அதை சரி செய்ய வேண்டும் என்ற நிலை இல்லை. இதனால் மருத்துவம் வியாபாரமாகி வருகிறது. நகரங்களைப்போல் கிராமங்களும் மாறி வருகின்றன. இதனால், பாரம்பரிய மருத்துவ அறிவு பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது. இது அழிவை நோக்கித்தான் செல்லும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X