சென்னை: காதலிக்க மறுத்ததால், "ஆசிட்' வீச்சுக்கு ஆளாகி, மூன்று மாதங்களாக உயிருக்கு போராடி வந்த, பொறியாளர் வினோதினி, நேற்று, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். தன் ஒரே மகளின் மரணத்திற்கு காரணமானவன் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என, வினோதினியின் தந்தை கண்ணீர் மல்க கூறினார்.
காரைக்கால், எம்.எம்.ஜி., நகர், இன்ஜினியர் கார்டனைச் சேர்ந்தவர் ஜெயபாலன். தனியார் பள்ளி ஒன்றில் பாதுகாவலராக பணிபுரிந்து வரும் இவரது மகள் வினோதினி, 23. பி.டெக்., பட்டதாரியான இவர், சென்னை, சைதாப்பேட்டையில், ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.கடந்த ஆண்டு, நவம்பரில், தீபாவளி பண்டிகைக்கு, வினோதினி, காரைக்கால் சென்றார். தன் குடும்பத்தினருடன் தீபாவளியை கொண்டாடிய பின், நவ., 14ம் இரவு, சென்னை திரும்ப தயாரானார். வீட்டில் இருந்து பஸ் நிலையம் செல்லும் வழியில், வினோதினிக்கும், அவரை ஒருதலைப்பட்சமாக காதலித்து வந்த, காரைக்காலை அடுத்த திருவேட்டக்குடியைச் சேர்ந்த, ஜல்லி கலவை மிஷின் ஆபரேட்டர் சுரேஷிற்கும், 27, வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதில் ஆத்திரமடைந்த சுரேஷ், வினோதினியின் முகத்தில், "ஆசிட்' ஊற்றினார்.
இதில், படுகாயமடைந்த வினோதினி, மேல்சிகிச்சைக்காக, நவ., 16ம் தேதி, சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு, "ஆசிட்' வீச்சில், அவரின் இரு கண்களும் பார்க்கும் திறனை இழந்துவிட்டதை மருத்துவர்கள் உறுதி செய்தனர். இரு கண்களையும் பறிகொடுத்த நிலையில், முகம், தோள்பட்டை உள்ளிட்ட இடங்களில் ஏற்பட்ட காயத்தை ஆற்ற, வினோதினிக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில், டிச., 6ம் தேதி, அதே பகுதியில் உள்ள, ஒரு தனியார் மருத்துவமனையில், வினோதினி அனுமதிக்கப்பட்டார்.அங்கு தொடர் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், திடீரென, கடந்த மாதம், 28ம் தேதி, சென்னை, ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு. வினோதினி மாற்றப்பட்டார். தன் மகளின் வேண்டுகோளுக்கு இணங்கி, வினோதினியின் பெற்றோர், மறுநாளே அவரை, ஏற்கனவே சிகிச்சை பெற்று வந்த தனியார் மருத்துவமனையில் மீண்டும் சேர்த்தனர்.
கடந்த, 10ம் தேதி இரவு, வினோதினிக்கு கடுமையான மூச்சுத் திணறல் ஏற்பட்டது. தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த வினோதினி, நேற்று காலை 9:10 மணிக்கு, சிகிச்சை பலனின்றி இறந்தார். வினோதினி இறந்ததையடுத்து, சுரேஷ் மீதான கொலை முயற்சி வழக்கு, கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தனியார் மருத்துவமனையின் தலைமை மருத்துவர் ஜெயபிரகாஷ் கூறுகையில், "வினோதினியின், முகம், தோள்பட்டைகளில் இருந்த ஆறாத காயங்களால், அவரின் ரத்தத்தில் அமிலத்தன்மை அதிகரித்தது. இதன் விளைவாக, மூச்சுத் திணறல் ஏற்பட்டு, வினோதினி இறந்துள்ளார்' என்றார்.
வினோதினியின் தந்தை ஜெயபாலன் கூறுகையில், "வினோதினியை, சுரேஷ் காதலிக்கும் விஷயம் தெரிய வந்ததும், அவருடன் எனக்கு இருந்த, தொழில்ரீதியான நட்பை துண்டித்துவிட்டேன். என் ஒரே மகள் சித்தரவதைப்பட்டு இறந்ததற்கு காரணமான சுரேஷிற்கு, கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்' என்றார்.
வினோதினியின் உறவினர் ரமேஷ் கூறியதாவது: உயர் சிகிச்சைக்காக, வினோதினியை, டில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றோம். அதற்கு அரசு மருத்துவர் ஒருவரின் பரிந்துரை கடிதம் பெற வேண்டி இருந்ததால், வினோதினியை, கடந்த மாதம், 28ம் தேதி, ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தோம்.அங்கு அவளுக்கு, மயக்க மருந்து அளிக்காமலேயே, தீக்காயத்திற்கு சிகிச்சை அளித்தனர். வலி தாங்காமல் துடித்த வினோதினியை, அவளின் விருப்பப்படி, மறுநாளே, மீண்டும், அதே, தனியார் மருத்துவமனையில் அனுமதித்தோம். கடைசி நேரத்தில் மருத்துவர்கள் கவனக் குறைவாக செயல்பட்டதால், வினோதினி உயிர் இழக்க நேரிட்டது. அவளின் பூர்வீகமான, நாகை மாவட்டம், திருக்கடையூரில், வினோதினியின் உடலை அடக்கம் செய்ய உள்ளோம்.
"தனக்கு நேர்ந்த இக்கொடுமை, வேறு எந்த பெண்ணுக்கும் நேரக் கூடாது. தன்னை இந்த நிலைக்கு ஆளாக்கி, குடும்பத்தினரின் மனவேதனைக்கு காரணமானவனை, கடுமையாக தண்டிக்க வேண்டும்' என, வினோதினி கூறி வந்தாள். எங்களின் விருப்பமும் அது தான். எங்கள் விருப்பத்தை, அரசு நிறைவேற்றும் என, நம்புகிறோம்.இவ்வாறு ரமேஷ் கூறினார்.
வர்மா கமிஷன் பரிந்துரைப்படி நடவடிக்கை:
வினோதினி உயிரிழந்த தகவல் அறிந்து, மருத்துவமனைக்கு வந்த, மா.கம்யூ., மாநிலச் செயலர் ஜி.ராமகிருஷ்ணன், உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார்.நிருபர்களிடம் அவர் கூறுகையில், ""டில்லியில், பாலியல் கொடுமைக்கு ஆளாகிய, மருத்துவக் கல்லூரி மாணவியைப் போன்று, உயிருக்கு போராடிய வினோதினி, இறந்துவிட்டார். இக்கோர செயலுக்கு காரணமானவனுக்கு, கடுமையான தண்டனை கிடைக்க, புதுச்சேரி அரசு, நடவடிக்கை எடுக்க வேண்டும். பெண்களை வன்கொடுமைக்கு ஆளாக்குவோரை, மத்திய, மாநில அரசுகள், வர்மா கமிஷனின் பரிந்துரைப்படி கடுமையாக தண்டிக்க வேண்டும்,'' என்றார்.
"ஆசிட்' விற்பனையில் கட்டுப்பாடு வருமா?கடந்த, 2002ம் ஆண்டு முதல், 2010ம் ஆண்டு வரை, இந்திய அளவில், பல்வேறு காரணங்களுக்காக, 153, "ஆசிட்' வீச்சு சம்பவங்கள் நடந்துள்ளன. இவற்றில், அதிகபட்சமாக, 2010ம் ஆண்டு, 27, "ஆசிட்' வீச்சு சம்பவங்கள் பதிவாகி உள்ளதாக, தன்னார்வ நிறுவனத்தின் ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற கொடூர செயல்களை செய்வோரை, கடுமையாக தண்டிக்க வேண்டும் என்ற கோரிக்கை ஒருபுறம் இருக்க, வெளிச்சந்தையில், "ஆசிட்' விற்பனையை முறைப்படுத்த, அரசு, அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை, பொதுமக்கள் மத்தியில் பரவலாக எழுந்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE