வேதாரண்யம் : நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் தஞ்சை தமிழ்ப் பல்கலை கண்காணிப்பாளர் ஜம்புலிங்கம் மற்றும் தமிழாசிரியர் கோவிந்தராஜன் ஆகியோர் அடங்கிய தொல்பொருள் ஆராய்ச்சித்துறையினர் ஆய்வு செய்தனர்.
இதில், பஞ்ச நதிக்குளம் மேற்கு கிராமத்தில் உள்ள முள்ளியாற்றில் பொதுமக்கள் துணி துவைக்க பயன்படுத்திய ஒரு கருங்கல்லை புரட்டிப்பார்த்தனர். அக்கல்லின் பின்புறம் சிலை இருப்பது தெரியவந்தது. இது 11ம் நூற்றாண்டைச் சேர்ந்த சமணர் சிலை என்பதும், அச்சிலை தியான கோலத்தில் இருப்பதும் தெரியவந்தது. அச்சிலையின் தலைப்பகுதி இன்றி உடல் பகுதி மட்டும் காணப்பட்டது.
இக்கருங்கல் சிலை உயரம் 57 செ.மீ., அகலம் 47 செ.மீ., உடையதாக இருந்தது. வலது பக்கத்தில் சிம்மம் உள்ளது. இதைத்தொடர்ந்து, வாய்மேடு அருகே உள்ள ராஜாங்கட்டளை பகுதியில் உள்ள கல்தூண் கல்வெட்டு குறித்தும் ஆய்வு செய்தனர். 6 அடி உயரம், ஒன்றரை அடி உயரம் உள்ள இக்கல்வெட்டு விஜயநகர மன்னர் காலத்தைச் சேர்ந்தது என தெரியவந்தது.
நாகை மாவட்டத்தில் இதற்கு முன் வெளிப்பாளையம், புளியங்குடி ஆகிய இடங்களில் சமணர் சிலை கண்டெடுக்கப்பட்டது. இதன் மூலம் இப்பகுதியில் சமண சமயம் வளர்ச்சி அடைந்திருந்ததை காண முடிந்தது.
இதுபோல, வேதாரண்யம் அடுத்த புஷ்பவனத்தில் சில ஆண்டுக்கு முன் 5 அடி உயரமுள்ள புத்தர் சிலை கண்டெடுக்கப்பட்டது. இடும்பவனம் அருகே உள்ள கரையன்காட்டில் இருந்த புத்தர் சிலை ஒன்று மூன்று ஆண்டுக்கு முன் காணாமல் போனது.இவற்றை வைத்துப்பார்த்தால் நாகை மாவட்டப்பகுதியில் சமண சமயத்துடன், பவுத்த சமயமும் வளர்ச்சி அடைந்திருந்தது தெரிய வருகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE