புதுடில்லி; காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவத்தில், கருட சேவையின் போது மணவாள மாமுனிகளுக்கு சடாரி மரியாதை செய்ய வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்த அப்பீல் மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது. சின்ன காஞ்சிபுரத்தில் வரதராஜ பெருமாள் கோவில் (தேவராஜ சுவாமி கோவில்) உள்ளது. இங்கு ஆழ்வார்களுக்கும், ஆச்சாரியார்களுக்கும் சிலைகள் உள்ளன. தென்கலைப் பிரிவைச் சேர்ந்த மணவாள மாமுனிகள் சிலையும் உள்ளது.
கடந்த 1991ம் ஆண்டு இந்து அறநிலையத் துறை கமிஷனர் பிறப்பித்த உத்தரவில், "பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளில் கருடசேவையின் போது, கோவில் பிரகாரத்தில் உள்ள மணவாள மாமுனிகள் சிலை முன், தேவராஜ சுவாமி வரும் போது, மணவாள மாமுனிகள் சிலைக்கு சடாரி மரியாதை செய்ய வேண்டும்' என கூறப்பட்டுள்ளது. இந்த உத்தரவை எதிர்த்து காஞ்சிபுரம் கோர்ட்டில் சீனிவாசராகவன் என்பவர் வழக்கு தொடுத்தார். "மணவாள மாமுனிகளுக்கு சடாரி மரியாதை செய்வது பாரம்பரியமானது அல்ல. அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்' என மனுவில் கூறப்பட்டது. இந்த வழக்கை, 1997ம் ஆண்டு காஞ்சிபுரம் கோர்ட் தள்ளுபடி செய்தது.
இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் சீனிவாசராகவன் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி தமிழ்வாணன், "தென்கலை ஆச்சாரியரான மணவாள மாமுனிகளுக்கு மரியாதை செய்வது பாரம்பரியத்துக்கு எதிராக ஆகாது. சாதாரண மக்களுக்கே சடாரி மரியாதை செய்யும் போது, தென்கலை பிரிவின் தலைவரான மணவாள மாமுனிகளுக்கு சடாரி மரியாதை செய்வதில் தவறில்லை. "எனவே, கருட சேவையின் போது ஆழ்வார் பிரகாரத்தில் அமைந்துள்ள மணவாள மாமுனிகளுக்கு சடாரி மரியாதை செய்வது சட்ட விரோதமானதோ, வைணவ பாரம்பரியத்துக்கு எதிரானதோ அல்ல. காஞ்சிபுரம் கோர்ட் பிறப்பித்த உத்தரவை உறுதி செய்கிறேன். அப்பீல் மனுவை தள்ளுபடி செய்கிறேன்' என உத்தரவிட்டார். ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் சீனிவாசராகவன் அப்பீல் மனுவை தாக்கல் செய்தார். இதை நீதிபதிகள் ரவீந்திரன், ராதாகிருஷ்ணன் அடங்கிய, "டிவிஷன் பெஞ்ச்' விசாரித்தது. அப்பீல் மனுவை தள்ளுபடி செய்து, "டிவிஷன் பெஞ்ச்' உத்தரவிட்டது. தேவராஜ சுவாமி கோவிலில் பகல்பத்து விழாவின் போது, ரேவதி நட்சத்திரம் வரும் நாளன்று மணவாள மாமுனிகள் விக்ரகத்தை ஊர்வலமாக ரங்கநாத பெருமாள் கோவிலில் இருந்து எடுத்துச் சென்று மீண்டும் அங்கேயே கொண்டு வருவது குறித்து இந்து அறநிலையத் துறை கமிஷனர் ஒரு உத்தரவை பிறப்பித்தார். இதை எதிர்த்து வடகலை ஸ்ரீ வைஷ்ணவ சம்பிரதாய சபாவின் செயலர், ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
இம்மனுவை விசாரித்த நீதிபதி டி.ராஜா பிறப்பித்த உத்தரவு: காஞ்சிபுரம் தேவராஜ கோவிலில் வடகலை, தென்கலை பிரிவினருக்கு இடையில் பல ஆண்டுகளாக தொடர்ந்து சண்டை நடந்து வருகிறது. ரங்கநாதரை தரிசிக்கும் இந்த இரு பிரிவினர் மத்தியில் ஆரோக்கியமான மத நல்லிணக்கத்தை பிரதிபலிப்பதாக இது இல்லை. ஒருவன் எந்த மதத்தைச் சேர்ந்தவனாக இருந்தாலும் அவனை மனிதனாக பார்ப்பவன் தான் உண்மையான பக்தன். கடவுளை எங்கும் காண்பதன் மூலம் கோபம், வெறுப்பு இவற்றில் இருந்து அந்த உண்மையான பக்தன் மீள வேண்டும். பகல்பத்து விழாவின் போது மணவாள மாமுனிகளின் விக்ரகத்தை ஊர்வலமாக எடுத்துச் சென்று மீண்டும் அதே இடத்துக்கு மாலையில் கொண்டு வருவதன் மூலம், ரங்கநாதரை வழிபடும் இரண்டு பிரிவினருக்கு இடையில் சமூக நல்லிணக்கத்தை வளர்க்கும் விதமாக, இந்து அறநிலையத் துறை கமிஷனர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். இதில் குறை காண முடியாது. மேலும், 50 ஆண்டுகளாக இந்த நடைமுறை அமலில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை கோர்ட்டால் நிறுத்த முடியாது. எனவே, இந்து அறநிலையத் துறை கமிஷனர் பிறப்பித்த உத்தரவில் குறுக்கிட எந்த காரணமும் இல்லை. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதி டி.ராஜா உத்தரவிட்டுள்ளார்.
Advertisement