தொடர்ந்து 4வது முறையாக காங்., கட்சித்தலைவரானார் சோனியா

Updated : செப் 04, 2010 | Added : செப் 02, 2010 | கருத்துகள் (39)
Share
Advertisement

காங்கிரஸ் தலைவராக, நான்காவது முறையாக சோனியா இன்று முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட உள் ளார். இவரை தலைவராக்கும்படி முன்மொழிந்து பிரதமர் மன்மோகன் சிங், அமைச்சர்கள் பிரணாப், சிதம்பரம், காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுல் மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் கையெழுத்திட்டு வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.


கட்சியின் புதிய தலைவராக சோனியா பொறுப்பேற்ற பின், அகில இந்திய காங்கிரஸ் கட்சி மாநாடு விரைவில் நடத்தப்படும் என, தகவல்கள் தெரிவிக்கின்றன. அகில இந்திய காங்கிரஸ் தலைவராக தற்போது சோனியா உள்ளார். கடந்த 1998ம் ஆண்டு சீதாராம் கேசரியை மாற்றிவிட்டு, தலைவர் பொறுப்பை ஏற்றார். அது முதல் அவரே கட்சியின் தலைவராக தொடர்கிறார். இடையில், 2000ம் ஆண்டில் மட்டும் கட்சித் தலைவர் தேர்தலில் சோனியாவை எதிர்த்து, ஜிதேந்திர பிரசாத் போட்டியிட்டார். முன்னாள் பிரதமர் நரசிம்மராவின் தீவிர ஆதரவாளரான இவர், உத்தர பிரதேசத்தை சேர்ந்தவர். சோனியாவை எதிர்த்து போட்டியிட்ட அந்த தேர்தலில் படுதோல்வியடைந்தார்.


இந்நிலையில், காங்கிரஸ் கட்சி அமைப்பு தேர்தல்கள் அகில இந்திய அளவில், பல மாநிலங்களில் நடைபெற்று முடிந்து விட்டன. தமிழகம் போன்ற ஒருசில மாநிலங்களில் கட்சித் தலைவர் தேர்தல் நடைபெறவில்லை என்றாலும், அகில இந்திய கட்சித் தலைவர் தேர்தல் தற்போது மும்முரமாக உள்ளது. அதன்படி, தலைவர் பதவிக்கு போட்டியிடுபவர்கள் நேற்று மாலைக்குள் மனு தாக்கல் செய்ய வேண்டும். ஆனால், நேற்று மாலை வரை சோனியாவை தவிர வேறு யாரும் மனு தாக்கல் செய்யவில்லை.


நேற்று காலையில் சோனியாவை தலைவர் பதவிக்கு வலியுறுத்தி நாற்பது பகுதிகளாக அடங்கிய மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. முதல் செட் மனுவை, பிரதமர் மன்மோகன் சிங் தாக்கல் செய்தார். அதில், அமைச்சர்கள் பிரணாப் முகர்ஜி, சிதம்பரம் உள்ளிட்ட தலைவர்கள் கையெழுத்திட்டிருந்தனர். இரண்டாவது செட் மனுவை, மோதிலால் ஓரா தாக்கல் செய்தார். அதில் ராகுல், ஜனார்த்தன திவேதி, அகமது படேல், முகுல் வாஸ்னிக், நாராயணசாமி உள்ளிட்டவர்கள் கையெழுத்திட்டிருந்தனர். தமிழக காங்கிரஸ் சார்பில் தங்கபாலுவும், புதுச்சேரி சார்பில் முதல்வர் வைத்திலிங்கம் மற்றும் சுப்ரமணியம் உள்ளிட்டோரும் மனு தாக்கல் செய்தனர்.


இந்த மனு தாக்கல் வைபவம், அகில இந்திய காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நேற்று மதியம் 12 மணி முதல் 1 மணி வரை நடைபெற்றது. கட்சியின் தேர்தல் அதிகாரியாக மூத்த தலைவர் ஆஸ்கர் பெர்னாண்டஸ் இருப்பதால், அவரிடம் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. மொத்தமுள்ள எட்டாயிரம் அகில இந்திய காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் எல்லாரும் சேர்ந்து, காங்கிரஸ் தலைவரை தேர்ந்தெடுப்பார்கள். அந்த வகையில் தற்போது சோனியாவை எதிர்த்து யாரும் மனு தாக்கல் செய்யாததால், காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவராக அவர் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவது உறுதியாகியுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.


தலைவர் தேர்தல் முடிந்தவுடன், அகில இந்திய காங்கிரஸ் கட்சி மாநாடு நடத்தப்படுவது வழக்கம். கடந்த முறை ஐதராபாத்தில் நடைபெற்றது. இம்முறை வடமாநிலம் ஒன்றில் மாநாடு நடைபெற வாய்ப்புள்ளது. அந்த மாநாட்டில் முறைப்படி, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக நான்காவது முறையாக சோனியா பதவியேற்றுக் கொள்வார்.


சோனியாவுக்கு பா.ஜ., யோசனை: "பிரதமர் பதவியை தியாகம் செய்தது போல, கட்சித் தலைவர் பதவியையும் சோனியா வேறு ஒருவருக்கு விட்டுத் தர வேண்டும்' என, பாரதிய ஜனதா கட்சி யோசனை தெரிவித்துள்ளது. பா.ஜ., தலைமை தகவல் தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் இதுதொடர்பாக கூறியதாவது: சோனியா நான்காவது முறையாக கட்சித் தலைவராகிறார். அவரை எதிர்த்து யாரும் போட்டியிடவில்லை. காங்கிரஸ் ஜனநாயக ரீதியாக செயல்படும் கட்சி எனில், அதற்குரிய சட்ட விதிகளின்படி செயல்பட வேண்டும். காங்கிரஸ் கட்சியில் வட்ட, மாவட்ட மற்றும் மாநில தலைவர்களாக இருப்பவர்கள் இரண்டு முறைக்கு மேல் அந்தப் பதவிக்கு வர முடியாது. அந்த விதிமுறை தேசிய தலைவர் பதவிக்கும் பொருந்தும் என, அறிவிக்க வேண்டும். "பிரதமர் பதவியை தியாகம் செய்தவர்' என, சோனியாவை காங்கிரஸ் தலைவர்கள் எல்லாரும், எப்போதும் புகழ்ந்து கொண்டிருக்கின்றனர். அதேபோல், கட்சித் தலைவர் பதவியையும், நேரு, இந்திரா குடும்பத்தைச் சாராத வேறு ஒருவருக்கு சோனியா விட்டுத்தர வேண்டும். காங்கிரஸ் கட்சியில் தலைவர் பதவிக்கு பொருத்தமானவர்கள் நிறைய பேர் உள்ளனர். இவ்வாறு ரவிசங்கர் பிரசாத் கூறினார்.


கருணாநிதி வாழ்த்து: காங்கிரஸ் தலைவராக நான்காவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட சோனியாவுக்கு, முதல்வர் கருணாநிதி வாழ்த்து தெரிவித்துள்ளார். முதல்வர் கருணாநிதி அனுப்பிய வாழ்த்துச் செய்தி: காங்கிரஸ் கட்சியின் தலைவராக தொடர்ந்து நான்காவது முறையாக, ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். நான்காவது முறையாக தேர்வானதன் மூலம் காங்கிரஸ் கட்சி வரலாற்றில் புதிய சாதனையை ஏற்படுத்தியுள்ளீர்கள். சுதந்திர போராட்டத்தை முன்நின்று நடத்தி, இதுவரை இல்லாத அளவுக்கு, எதனோடும் ஒப்பிட முடியாத அளவுக்கு காங்கிரஸ் செயல்பட்டுள்ளது என்பதை இந்நாட்டு மக்கள் நன்கறிவர். தாங்கள் தலைவராக இருக்கும் நிலையில், மக்களிடையே காங்கிரஸ் கட்சியின் மீதான பற்று வளர்ந்து வருகிறது. இந்த மகிழ்ச்சிகரமான நேரத்தில், தமிழக மக்கள் சார்பில் தங்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். இவ்வாறு கருணாநிதி தெரிவித்துள்ளார்.


                                                                                                    - நமது டில்லி நிருபர் -


Advertisement
வாசகர் கருத்து (39)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
FSDF - iNDIA,இந்தியா
06-செப்-201017:10:54 IST Report Abuse
FSDF காலம் காலமாக அந்நியர்களுக்கு அடிமைபட்டுகிடந்த செக்குலரிச வாதிகள் என்றும் திருந்த மாட்டார்கள்.
Rate this:
Cancel
MMDR - Chennai,இந்தியா
06-செப்-201016:13:04 IST Report Abuse
MMDR விடுதலைக்காக போராட அன்று காங்கிரசை ஆரம்பித்ததிலும் அந்நியர் உண்டு, இன்றைய அந்நிய நாடு பாகிஸ்தான் அன்று நம் நாடு. சோனியா அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருத்தப்படும் நண்பர்களே மண்ணின் மைந்தர் ராஜீவ் காந்தி திருமணம் செய்தவரை எப்படி நடத்தவேண்டும் என்று விரும்புகிறிர்கள். சோனியா அவர்கள் நம் இந்திய கலாச்சாரத்தை மீறி எதுவும் நடந்து நம் மக்களுக்கு தலை குனிவை எற்படுத்திவிட்டரா? பாரதிய ஜனதா கட்சியே இந்த சுருதியை குறைத்துக் கொண்டார்கள் . அவர் அரசியலில் நுழையும்போதே எதிர் கட்சி வரிசையில் இருந்து தனது கடமையை செய்தார். நம் இந்தியர்கள் வெளிநாடுகளில் பொறுப்புள்ள பதவிகளில் இல்லையா? நண்பர்களே மும்பை வாசிகள் பீகார் மக்களை எங்கள் மாநிலத்திற்கு வாராதே என்று சொன்னது எந்த தேச உணர்வில் சேர்ப்பீர்கள்? நம் நாட்டு தலைவர்கள் சுவிஸ் வங்கியில் கோடி கோடியாக வைத்துள்ளார்கள். கொலைகாரனுக்கு, ரவுடிக்கும் நாம்தான் MLA சீட் கொடுத்து ஓட்டும் போடுகிறோம். நம்மை அடிமைபடுத்தியது அந்நியன் என்றாலும் ஆரம்பத்தில் ஏதோ ஒரு வகையில் அந்த அந்நிய தேசத்தவன் செய்த(பிரிட்டிஷ்க்காரன்) சீர்திருத்தத்தினால்தான் இன்று எல்லா நாடுகளும் நம் நாட்டை வியந்து பார்க்கின்றன.
Rate this:
Cancel
ஹரிஹரன் - பிண்டுலுmalaysia,இந்தியா
05-செப்-201013:59:45 IST Report Abuse
ஹரிஹரன் ஒரு லாபமும் இல்லை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X