| ராம ஜென்ம பூமியில் வரலாற்று ஆதாரங்கள்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

ராம ஜென்ம பூமியில் வரலாற்று ஆதாரங்கள்

Updated : செப் 06, 2010 | Added : செப் 04, 2010 | கருத்துகள் (71)

சென்னை : ""ராம ஜென்ம பூமியில் பல வரலாற்று ஆதாரங்கள் கிடைத்துள்ளன,'' என தொல்லியல் ஆய்வாளர் அருண்குமார் சர்மா பேசினார்.


இந்து தர்மார்த்த சமிதி அறக்கட்டளை சார்பில், ராம ஜென்ம பூமி குறித்த கருத்தரங்கு, சென்னை மயிலாப்பூரில் நடந்தது.  கருத்தரங்கில், மூத்த வக்கீல் ராஜகோபாலன் பேசியதாவது: தற்போது, நடைமுறையில் இருக்கும் பல சட்டங்கள், அன்றே ராமாயணத்தில் குறிப்பிடப்பட்டவை. பலதார மணம் முடிக்கும் பழக்கம் இருந்தும், ஒரு மணம் தான் சிறந்தது என்ற சமூக ஒழுக்க நெறிமுறை ராமாயண காலகட்டத்தில் பின்பற்றப்பட்டது. அரசியல் பார்வையில், மதச்சார்பற்ற கொள்கை வேறு கண்ணோட்டத்துடன் அணுகப்படுகிறது. ஆனால், மதச்சார்பற்ற கொள்கை என்பது எல்லா மதத்திற்கும் சம மரியாதை வழங்குவது தான்.ராம ஜென்ம பூமி குறித்து ஐந்து வழக்குகள் கோர்ட்டில் நிலுவையில் உள்ளன. இந்த பிரச்னை குறித்து, கோர்ட் விவாதத்தின் போது ராமர் பிறந்த இடமா, இதற்கு முன் கோவில் இருந்ததா என்பன போன்ற கேள்வி எழுந்ததையடுத்து, சுப்ரீம் கோர்ட் தொல்லியல் துறை ஆய்வு நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டது. அப்போது, வரலாற்று சான்றுகள் மூலம் உண்மை நிரூபிக்கப்பட்டால் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற நிபந்தனை வைக்கப்பட்டது.


தொல்லியல் ஆய்வில், வராகம் மற்றும் இந்து கோவில்களின் வரலாற்று தூண்கள் என பல புராதன சின்னங்கள் கிடைத்தன. சிறுபான்மை சமுதாயம், பெரும்பான்மை சமூகம் மீது ஆட்சி செலுத்துவது, இந்தியாவில்  மட்டும் தான் உள்ளது. இது வேறு எந்த நாடுகளிலும் இல்லை.ராம ஜென்ம பூமி குறித்து சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கில்,  இந்துக்களுக்கு வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.இவ்வாறு ராஜகோபாலன் பேசினார்.


தொல்லியல் ஆய்வாளர் அருண்குமார் சர்மா பேசும் போது,"" ராம ஜென்ம பூமி பிரச்னையில், சுப்ரீம் கோர்ட் உத்தரவின் படி, தொல்லியல் ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வில் பல வரலாற்று சின்னங்கள் கிடைத்துள்ளன. இந்த ஆய்வு பணிகள் அனைத்தும் வீடியோ படம் எடுக்கப்பட்டுள்ளது. முஸ்லிம்களுக்கு உருவ வழிபாடு முறை மீது நம்பிக்கை இல்லை. இந்து கோவில்களில் உள்ள தூண்கள் மற்றும் புராதன சின்னங்களை கொண்டு தான் மசூதி கட்டப்பட்டிருந்தது என்பதற்கு பல ஆதாரங்கள் ஆய்வில் கிடைத்துள்ளன.இவ்வாறு அருண்குமார் சர்மா பேசினார். கருத்தரங்கில், ஐகோர்ட் முன்னாள் நீதிபதி அருணாசலம், தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் இல. கணேசன், தமிழக பா.ஜ., தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்..


தொல்லியல் ஆய்வாளர் சத்தியமூர்த்தி பேசியதாவது: தொல்லியல் ஆய்வில், ஒரு விஷயத்தை முன் இருந்த விஷயங்கள் மற்றும் தற்போது உள்ள விஷயங்களுடன் தொடர்புபடுத்தியே விளக்கம் அளிக்கப்படுகிறது. இந்த ஆய்வில், உள்ளூர் இலக்கியம், சமஸ்கிருதம், பாலி உள்ளிட்ட மொழி, வேத அறிவு உள்ளிட்டவை அவசியம்.
தற்போதைய தொல்லியல் ஆய்வாளர்களுக்கு வேதங்களைப் பற்றிய அறிவு குறைவாக உள்ளது. முன் தொல்லியல் துறையில் சேர சமஸ்கிருதம், பாலி மற்றும் செம்மொழிகள் தெரிந்திருக்க வேண்டும். தற்போது அந்த விதிமுறை தளர்த்தப்பட்டுள்ளது.விஷ்ணு சம்கிதா என்ற பழமையான நூல், விஷ்ணுவை வழிபடும் முறைகள் குறித்து எடுத்துரைக்கிறது. விஷ்ணு சிலையின் ஒவ்வொரு பகுதியையும், விஷ்ணுவின் பல்வேறு அவதாரங்களாக வழிபடலாம் என விஷ்ணு சம்கிதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.


எனவே, விஷ்ணு சிலையை ராமராகவும் வழிபடலாம். இதற்கு உதாரணம் தற்போதும் உள்ளது. குருவாயூரில் விஷ்ணு சிலை, கிருஷ்ணராக வணங்கப்படுகிறது. பின்னர் இப்பழக்கத்தில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.இவ்வாறு சத்தியமூர்த்தி பேசினார்.கருத்தரங்கில், ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியசாமி, மூத்த வக்கீல் ராமானுஜம், வேளுக்குடி கிருஷ்ணன் உள்ளிட்டோர் பேசினர். அயோத்தியில் மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் ஆய்வின்போது கிடைத்த ஆவணப் படங்களைக் காட்டி, தொல்லியல் ஆய்வாளர் சர்மா விளக்கமளித்தார்.


Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X