கோவில் நிலத்தில் குறுக்கிட குடிசை மாற்று வாரியத்திற்கு தடை | Dinamalar

தமிழ்நாடு

கோவில் நிலத்தில் குறுக்கிட குடிசை மாற்று வாரியத்திற்கு தடை

Added : செப் 10, 2010

சென்னை: கொளத்தூர் முத்துமாரியம்மன் கோவில் வசம் உள்ள நிலத்தில், குடிசை மாற்று வாரியம் குறுக்கிட சென்னை சிவில் கோர்ட் தடை விதித்துள்ளது. கொளத்தூர், ஜி.கே.எம்.காலனி சத்தியவாணிமுத்து தெருவில், முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலைச் சுற்றி, காலி இடங்கள் உள்ளன. இந்த இடத்தை பயன்படுத்த, குடிசை மாற்று வாரியம் தடை விதித்தது. மேலும், அந்த இடத்தை எடுத்துக் கொள்ளப் போவதாகவும் அறிவித்தது. இந்த அறிவிப்பை எதிர்த்து, முத்துமாரியம்மன் திருக்கோவில் குழுத் தலைவர் குமாரசாமி ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.


அதில் அவர் கூறியிருப்பதாவது: ஜி.கே.எம்.காலனி சத்தியவாணிமுத்து தெருவில் முத்துமாரியம்மன் கோவில், 1972ம் ஆண்டில் புதிதாக கட்டப்பட்டது. பக்தர்கள் தேர்ந்தெடுக்கும் குழுவானது, கோவிலை நிர்வகிக்கிறது. கோவிலைச் சுற்றியுள்ள காலியிடங்களை, முன்னாள் ராணுவத்தினர் சங்கத்திற்கு அரசு ஒதுக்கியுள்ளது. கோவில் வழிபாட்டுக்கு இந்த சங்கம் எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை. கோவில் அருகில் உள்ள இடத்தில், விழாக்கள் நடத்தப்படும். இந்நிலையில், இந்த நிலத்தை கோவில் நிர்வாகம் பயன்படுத்தக் கூடாது என்றும், இடத்தை எடுத்துக் கொள்வதாகவும், குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். கோவிலின் வடக்குப் புறம், பெரிய குளம் ஒன்று உள்ளது.


கோவில் வசம் உள்ள நிலத்தில், கூழ்வார்த்தல், பவுர்ணமி பூஜை, பால் குடம் போன்ற சமய விழாக்கள் நடத்தப்படும். செவ்வாய், வெள்ளி கிழமைகளில் பொங்கல் வைத்து பெண்கள் வழிபடுவர். நிலத்தை குடிசை மாற்று வாரியம் எடுத்துக் கொண்டால், அங்கு கோவில் விழாக்கள் நடத்த முடியாமல் போகும். நிலத்தை தானமாகவோ, விற்பனைக்காகவோ அளிக்குமாறு குடிசை மாற்று வாரியத்திடம் முறையிட்டோம். அதற்கான கடிதத்தை நேரில் அளித்தோம். இதில் இன்னும் முடிவெடுக்கவில்லை. கோவில் நடவடிக்கைகளில் குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் குறுக்கிட முயற்சிக்கின்றனர். எனவே, கோவில் வசம் உள்ள இடத்தில் குறுக்கிட குடிசை மாற்று வாரியத்துக்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.


மனுவை முதலாவது உதவி சிவில் கோர்ட் விசாரித்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் எஸ்.பிரபாகரன் ஆஜரானார். மனுவை விசாரித்த சிவில் கோர்ட்,  "குடிசை மாற்று வாரியம் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யவில்லை. எனவே, மனு ஏற்கப்படுகிறது' என உத்தரவிட்டது.


Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X