பன்றிக்காய்ச்சல் அபாயத்தை வேகமாக தடுக்க தடுப்பூசி : ரூ.150 செலவில் பயன்பெற அரசு நடவடிக்கை| SwineFlu vaccine at Rs. 150 | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பன்றிக்காய்ச்சல் அபாயத்தை வேகமாக தடுக்க தடுப்பூசி : ரூ.150 செலவில் பயன்பெற அரசு நடவடிக்கை

Updated : செப் 14, 2010 | Added : செப் 12, 2010 | கருத்துகள் (28)
Share

சென்னை : பன்றிக் காய்ச்சல் பரவுவதைத் தடுக்கும் வகையில், தடுப்பூசி போடும் புதிய திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள கிண்டி "கிங்' இன்ஸ்டிடியூட் உட்பட தமிழகம் முழுவதும் பல்வேறு அரசு மருத்துவமனைகளில் 150 ரூபாய் செலுத்தி பொதுமக்கள், இன்று முதல் இந்த தடுப்பூசியை போட்டுக் கொள்ளலாம் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.


தமிழகத்தில் திடீரென மிரட்டி வரும் பன்றிக் காய்ச்சல், மக்களை அச்சத்தில் ஆழ்த்தி இருக்கிறது. எலிக் காய்ச்சலை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் பரவிய "சிக்-குன்-குனியா', மூட்டு வாதத்தால் மக்களை முடக்கிப் போட்டது. அரசு மருத்துவமனைகள் மட்டுமின்றி தனியார் மருத்துவமனைகளிலும் மக்கள் படையெடுத்தனர். இதன் தாக்கம் குறைந்த நிலையில், அடுத்ததாக "எச்1என்1' எனப்படும் பன்றிக் காய்ச்சல் தமிழகத்தை ஆட்டிப்படைக்க துவங்கிவிட்டது. வெளிநாடுகளிலிருந்து இந்தியா வந்தோரின் மூலம் பரவிய பன்றிக் காய்ச்சலை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.


தமிழகத்தில் கடந்த ஒன்பது மாதத்தில் 10க்கும் மேற் பட்டோர் இந்நோயால் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் நேற்று முன்தினம் இரண்டு பேர் பலியாகியுள்ளனர். நெல்லையைச் சேர்ந்தவர் சரவணன் (20). வேலூரில் உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாமாண்டு படித்து வந்தார். இவருக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல் இருந்து வந்தது. தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சரவணன் நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார். ரத்தப் பரிசோதனையில் பன்றிக் காய்ச்சல் பாதிப்பு இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனையில் சரியான நோய் கண்டறிதல் இல்லாததால்தான் சரவணன் இறந்துள்ளார் என உறவினர்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். சில தினங்களுக்கு முன், தலைமைச் செயலக உதவி மக்கள் தொடர்பு அலுவலர் மோகனவேலு, பன்றிக் காய்ச்சலுக்கு பலியானார். சென்னையைச் சேர்ந்த வங்கி அதிகாரி ஒருவர், கோவையில் கடந்த ஐந்து நாட்களுக்கு முன் பலியானார்.


தடுப்பூசி: அடுத்தடுத்து பன்றிக் காய்ச்சலால் உயிர்இழப்புக்கள் அதிகரித்து வரும் நிலையில், தடுப்புப் பணிகளை முடுக்கிவிடுவது தொடர்பாக, சுகாதாரத்துறை அதிகாரிகள் பங்கேற்ற அவசர ஆலோசனைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நேற்று நடந்தது. சுகாதாரத்துறை செயலர் சுப்புராஜ் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில், பன்றிக் காய்ச்சல் பரவுவதைத் தடுக்க தடுப்பூசி போடும் புதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து சுகாதாரத்துறை செயலர் சுப்புராஜ் கூறியதாவது: பன்றிக் காய்ச்சல் வராமல் தடுக்கும் வகையில் தடுப்பூசி போடும் புதிய திட்டத்தை தமிழக அரசு துவங்குகிறது.


இதன்படி, சென்னை "கிங்' இன்ஸ்டிடியூட்டில் 150 ரூபாய் செலுத்தி பொதுமக்கள், இன்று முதல் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். தேவைப் பட்டால் தமிழகத்தில் பல்வேறு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகளிலும் இந்த திட்டம் விரிவு படுத்தப்படும். அதிக நாள் நோய்வாய் பட்டோர், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளோர், வெளிநாடு செல்வோரும் இந்த தடுப்பூசி போட்டுக் கொள்வது நல்லது. மருத்துவமனைகளில் வரும் நோயாளிகளுக்கு பன்றிக் காய்ச்சல் பரவாமல் தடுக்கும் முன்னெச்சரிக்கையாக, அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் 50 ஆயிரம் ஊழியர்களுக்கு இலவசமாக தடுப்பூசி போடப்பட உள்ளது. தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் இந்த தடுப்பூசி போடவேண்டுமென வலியுறுத்தப் பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த ஒன்பது மாதங்களில் பன்றிக் காய்ச்சலால் 10 பேர் இறந்துள்ளனர். பன்றிக் காய்ச்சல் பரவுவதைத் தடுக்க அரசு, தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.இவ்வாறு சுப்புராஜ் கூறினார்.


பரிசோதனை மையங்கள் எவை எவை? "பன்றிக் காய்ச்சல் அறிகுறிகள் தெரிந்தால் பொதுமக்கள் உடனடியாக சிகிச்சை பெற வேண்டும்' என, சுகாதாரத் துறை செயலர் சுப்புராஜ் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் சோதனை மையங்கள் குறித்து வெளியிட்ட தகவல்: சென்னை கிண்டி கிங் ஆய்வு மையம், வேலூர், சென்னை, கோவை, திருச்சி, நெல்லை மற்றும் மதுரை மருத்துவக் கல்லூரிகளில் பன்றிக் காய்ச்சல் பரிசோதனை செய்துக் கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னையில் போரூர் ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி, லிஸ்டர் மெட்ரோ பாலிஸ், பாரத் ஸ்கேன்ஸ், ஜடெக் டயகோனஸ்டிக் சென்டர், திருச்சியில் டாக்டர் ரத லேப், கோவையில் உள்ள மைக்ரோ பயாலஜிக்கல் லேப், இம்முனோ ஆக்சிலரி லேப் மற்றும் நாகர்கோவில் விவேக் லேப் ஆகிய தனியார் ஆய்வு மையங்களிலும் பொதுமக்கள் இப்பரிசோதனையை செய்து கொள்ளலாம்.


பன்றிக் காய்ச்சல் வராமல் இருக்க, வாக்சிபுளு மற்றும் நாசோவாக் என்ற மருந்துகளை டாக்டர்களின் ஆலோசனைப்படி பொதுமக்கள் பயன்படுத்தலாம். காய்ச்சல், தலைவலி, தொண்டை வலி மற்றும் இருமல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் பொதுமக்கள் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் உடனடியாக சிகிச்சை பெற வேண்டும். இவ்வாறு சுப்புராஜ் தெரிவித்துள்ளார்.


Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X