புதுடில்லி : டில்லி ஜும்மா மசூதி அருகே, பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதில், தைவான் நாட்டைச் சேர்ந்த இரண்டு பேர் படுகாயம் அடைந்தனர். காமன்வெல்த் போட்டிகள் துவங்கவுள்ள நிலையில், பயங்கரவாதிகள் கைவரிசை காட்டியுள்ளதையடுத்து, டில்லி முழுவதும் உஷார் நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
டில்லியில் விரைவில் காமன்வெல்த் போட்டிகள் துவங்கவுள்ளதையடுத்து, டில்லியில் அதிகபட்ச பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இங்குள்ள வரலாற்று சிறப்பு வாய்ந்த ஜும்மா மசூதியின் மூன்றாவது நுழைவாயில் அருகே, சுற்றுலா வாகனம் ஒன்று நேற்று நிறுத்தப் பட்டிருந்தது. அதில், வெளிநாட்டைச் சேர்ந்த சிலர் இருந்தனர்.காலை 11.30 மணியளவில் அந்த பகுதிக்கு, மோட்டார் சைக்கிளில் இரு மர்ம நபர்கள் வந்தனர். துப்பாக்கியை எடுத்து, அந்த சுற்றுலா வாகனத்தை நோக்கி சரமாரியாக சுட்டனர். ஏழு முதல் எட்டு ரவுண்ட் வரை அவர்கள் சுட்டதாகக் கூறப்படுகிறது. பின்னர், மோட்டார் சைக்கிளில் ஏறி, அங்கிருந்து தப்பிச் சென்றனர்.இந்த தாக்குதலில், சுற்றுலா வாகனத்தில் இருந்த தைவான் நாட்டைச் சேர்ந்த இருவர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக லோக் நாயக் ஜெய்பிரகாஷ் நாராயண் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மர்ம நபர்கள் தப்பி ஓடிய பின், அந்த இடத்தில் ஏராளமான பொதுமக்கள் திரண்டனர். அவர்களை போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
மருத்துவமனை கண்காணிப்பாளர் அமித் பானர்ஜி கூறுகையில், "இந்த தாக்குதலில் தைவான் நாட்டைச் சேர்ந்த சீஸ்வெய்ன்(27), ஜிங்லோ(28) ஆகியோர் படுகாயம் அடைந்துள்ளனர். இதில், சீஸ்வெய்னின் தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. ஜிங்லோவின் அடிவயிற்றில் காயம் ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், அவர்களின் உடல்களில் குண்டுகள் எதுவும் இல்லை என கண்டறியப்பட்டுள்ளது. தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது' என்றார்.
டில்லி மாநகர துணை போலீஸ் கமிஷனர் கர்னல் சிங் கூறுகையில், "துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பி ஓடிய மர்ம நபர்களை, அந்த பகுதியைச் சேர்ந்த போலீஸ்காரர் ஒருவர் துரத்திச் சென்றுள்ளார். இருந்தாலும், அவர்கள் தப்பி விட்டனர். அவர்கள் பயங்கரவாதிகளா அல்லது வேறு நபர்களா என்பது குறித்து விசாரணைக்கு பின்னரே தெரிவிக்க முடியும். அவர்களை தேடும் வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ளது' என்றார்.
டில்லி முதல்வர் ஷீலா தீட்சித் கூறுகையில், "வெளிநாட்டினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது, மிகவும் சோகமான சம்பவம். இதற்காக, பொதுமக்கள் பீதி அடையத் தேவையில்லை; விரைவில் குற்றவாளிகள் பிடிபடுவர்' என்றார்.காமன்வெல்த் போட்டிகளை சீர்குலைக்கும் நோக்கத்துடன், இந்த சம்பவம் நிகழ்த்தப்பட்டுள்ளதா என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர். பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில், டில்லி முழுவதும் உஷார் நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்துறை அமைச்சகம் அறிக்கை : இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சக மூத்த அதிகாரி கூறுகையில், "டில்லியில் நடக்கும் சம்பவங்களை அரசு தொடர்ந்து கூர்ந்து கவனித்து வருகிறது. துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து, விரிவான அறிக்கை தாக்கல் செய்யும்படி, டில்லி மாநில அரசுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது' என்றார்.
இந்தியன் முஜாகிதீன் கைவரிசை?இதற்கிடையே, பி.பி.சி., மற்றும் பி.டி.ஐ., செய்தி நிறுவனங்களுக்கு இந்தியன் முஜாகிதீன் அமைப்பு சார்பில் ஒரு இ-மெயில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அதில், "காமன்வெல்த் போட்டிகளுக்காக நீங்கள் (அரசு) தயாராகும் நேரத்தில், நாங்களும் எங்களை தயார்படுத்திக் கொண்டிருக்கிறோம். காமன்வெல்த் போட்டிகளில் பங்கேற்பவர்கள், இதன் விளைவுகளை சந்திக்க நேரிடும். டில்லி பாட்லா ஹவுசில் நடந்த போலீஸ் என்கவுன்டரில் கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது' என, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.எனவே, இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம், இந்தியன் முஜாகிதீன் அமைப்பின் கைவரிசையாக இருக்கலாமோ என, சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும், டில்லி போலீசார் இந்த இ-மெயில் தொடர்பாக தங்களுக்கு எந்த தகவலும் தெரியவில்லை என்றனர்.
டில்லி ஜும்மா மசூதியில் தற்போது கண்காணிப்பு கேமரா இல்லை என்பதால், தாக்குதல் நடத்தியவர்கள் குறித்த தகவல் சேகரிப்பதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. மும்பையிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE