தேவாரம் : தேவாரத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சமூக சீர் திருத்த கல்யாணம் நடத்தப்பட்டது. தேனி மாவட்டம் தேவாரம் மோதிலால் மைதானத்தில் தேவாரம் மீனாட்சிபுரத்தை சேர்ந்த அஜிதாவிற்கும், நீலகிரியை சேர்ந்த பாண்டியனுக்கும் திருமணம் நடந்தது. எவ்வித சடங்குகளும் இல்லாமல் இருவரும் மாலை மாற்றி கொண்டனர். ஆனால், வி.ஐ.பி.,களின் திருமணத்தை போன்று போலீசார் ஏராளமானோர் குவிக்கப்பட்டனர். போலீஸ் உளவுத்துறையில் உள்ள அனைத்து பிரிவை சேர்ந்தவர்களும் வாழ்த்துரை பேசியவர்களின் பேச்சுகளை குறிப்பெடுத்து கொண்டிருந்தனர். விழா நடத்தியவர்களும் பந்தலுக்குள் போலீசாரை அனுமதிக்க மறுத்தனர். காரணம் மணமக்கள், மக்கள் கலை இலக்கிய கழகத்தின் மையக் கலைக்குழுவை சேர்ந்தவர்கள். பாண்டியன் சென்னையிலும், அஜிதா திருச்சியிலும் ம.க.இ.க., வில் முழு நேரப் பணியாளர்களாக உள்ளவர்கள்.
மக்கள் கலை இலக்கிய கழகத்தை சேர்ந்தவர்கள் கூறுகையில், மூட நம்பிக்கைகளை உடைக்கும் விதமாகவும், வீண் ஆடம்பரத்தை தவிர்த்தும் திருமணம் முடிப்பது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தவுமே இந்த திருமணம் நடத்தப்பட்டது. ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள மக்கள் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளதை விட வளமான இந்தியாவில் 8 மாநிலங்களில் வறுமை தாண்டவமாடுகிறது. வரதட்சணை கொடுக்க முடியாமல் எத்தனையோ திருமணங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. ஜாதி, வரதட்சணையின்றி திருமணங்கள் நடக்கவும், மணமக்களின் விருப்பம் அறிந்து திருமணம் நடத்த முன்மாதிரியாக இந்த திருமணம் நடந்துள்ளது. இவ்வாறு கூறினர். போலீஸ் தரப்பில் கூறுகையில், விழா நடத்திய ம.க.இ.க., மற்றும் விவசாயிகள் விடுதலை முன்னணியினர் போலீஸ் கண்காணிப்பில் உள்ளவர்கள். அரசுக்கு எதிராகவோ, தீவிரவாதம் குறித்தோ பேசக் கூடாதென்பதற்காக உளவுத்துறையின் அனைத்து பிரிவினரும் கண்காணிப்பில் ஈடுபட்டோம் என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE