பொது செய்தி

தமிழ்நாடு

காலத்தால் அழியாத தஞ்சாவூர் ஓவியங்கள் -ஆர்.ரங்கராஜ் பாண்டே

Updated : செப் 27, 2010 | Added : செப் 26, 2010 | கருத்துகள் (9)
Advertisement

பார்க்க பார்க்க பிரமிப்பாய் இருக்கிறது தஞ்சாவூர் ஓவியங்கள். கொழு கொழு கன்னம், கண்ணைக் கவரும் வண்ணம், கல் வேலைப்பாடு, தங்கத் தகடு என, "காஸ்ட்லி'யான சமாச்சாரமாகவும் இருக்கிறது. இருந்தாலும், தஞ்சாவூர் வரை வந்துவிட்டு, தஞ்சாவூர் ஓவியங்களைப் பற்றி தெரிந்து கொள்ளாவிட்டால் எப்படி?

தேடத் தேட புதிய புதிய விஷயங்கள் கிடைத்தன.அந்தக் காலத்தில், தஞ்சாவூர் ஓவியம் வரைவது பிரம்ம வித்தையாக இருந்திருக்கிறது. வண்ணங்கள் இயற்கையாகத் தயாரிக்கப்பட்டன. இதற்காக இலை, தழை, காய்கறி, சுண்ணாம்புக்கல், கடுக்காய், சங்கு, நவச்சாரம், மஞ்சள், இன்னும் என்னென்னவோ எல்லாம் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவற்றில் இருந்து தயாரிக்கப்படும் வண்ணங்கள் தான், காலத்தால் அழியாத ஓவியங்களாக இன்றளவும் கோலோச்சி நிற்கின்றன. படங்களில் பதிக்கப்படும் கற்களும் கையாலேயே செய்யப்பட்டுள்ளன. வெறும் ரசக் கண்ணாடியை, வண்ணம் ஏற்றிய கற்களாக மாற்றும் வேலைப்பாடு, ரசவாதமாக இருக்கிறது. இதை, தேய்ப்புக்கல் என்கின்றனர்.

இவை தவிர, "எம்போசிங்' எனப்படும் உப்பல் வேலைக்காக, நாட்டு ஓடு மூலம் மாவு தயாரிக்கப்படும் விதமும் வியப்பை அளிக்கிறது.தஞ்சாவூர் ஓவியங்கள் பெரும்பாலும் மா அல்லது பலா பலகைகளில் தான் வரையப்படுகின்றன. படம் வரைவதற்கான பலகையை அவர்கள் தயார்படுத்தும் விதமே வித்தியாசமானது. துணி ஒட்டுவது, மட்டி அடிப்பது, மாவு தடவுவது என அதிலும் ஆயிரம் வேலை இருக்கிறது. தூரிகையாக அணில் வாலைப் பயன்படுத்தி உள்ளனர். இப்படியாக வண்ணம், கற்கள், கண்ணாடி, மாவு, பலகை என அனைத்தும் தயாராகிவிட்டால், படம் வரைய ஆரம்பித்து விட வேண்டியது தான்.முதலில் பென்சிலால், "ஸ்கெட்ச்' வரைந்து கொள்கின்றனர்.

பிறகு, "எம்போசிங்' மேற்கொள்ள வேண்டிய இடங்களில், மாவால் உப்பல் பணி மேற்கொள்கின்றனர். தொடர்ந்து, நாலாபுறமும் கண்ணாடி மற்றும் கற்கள் அடுக்கும் பணி நடக்கிறது. உப்பலின் மேல் காடி எடுத்து, வேண்டிய விதத்தில் டிசைன் செய்கின்றனர். சரியான அளவில் வெட்டப்பட்ட தங்கத் தாளை, உரிய இடங்களில் ஒட்டுகின்றனர். அவற்றின் மீது டிசைன் வரையப்படுகிறது. இறுதியாகத் தான் பாத்திரங்களுக்கு உருவம் கொடுத்து, ஓவியத்துக்கு உயிர் கொடுக்கப்படுகிறது. முகம், கை, கால் என உடல் உறுப்புகள் தவிர மற்ற அத்தனையும் உப்பல் தான்.

இதன் ஆரம்பம் பற்றி ஆரம்பித்தார் கும்பகோணம் அரசு கவின் கலைக் கல்லூரி விரிவுரையாளர் ரவி(44):விஜய நகரத்தில் இருந்து வந்த ராஜுக்கள், மைசூரிலும் தஞ்சையிலும் குடியேறினர். அவர்களில் பெரும்பாலானோர், ஓவியக்கலையில் கைதேர்ந்தவர்களாக இருந்தனர். கோவில்கள் மற்றும் அரண்மனைகளில் தெய்வப் படங்கள், மன்னர்களின் உயிரோவியங்களை வரைந்தனர்.மேலோட்டமாக பார்த்தால், மைசூர் பாணியிலும் தஞ்சாவூர் பாணியிலும் நிறைய ஒற்றுமைகளைக் காணலாம். மைசூரிலிருந்து இந்தக் கலை தஞ்சைக்கு வந்திருக்கலாம் அல்லது, இரண்டும் சம காலத்தில் நடந்ததாக இருக்கலாம். இரண்டு பாணிகளுமே 200, 250 ஆண்டுகளுக்கு உட்பட்டவை தான். யாரேனும், "என்னிடம் 300 ஆண்டு பழமையான தஞ்சாவூர் ஓவியம் இருக்கிறது' என்று சொன்னால், அது பொய் என்று அறிக.விரிவுரையாளர் ரவி விளக்க, தஞ்சாவூர் ஓவியங்கள் வரையப்படும்போதே பார்க்க வேண்டும் என்ற ஆசை எழுந்தது.

பூம்புகார் கலைக்கூடத்தில் 10 பெண்கள், ஆர்வமாய் கற்றுக் கொண்டிருந்தனர். பயிற்சியாளர் புஷ்பலதா அவர்களை வழி நடத்திக் கொண்டிருந்தார்.

அவரிடம் பேசிய போது, ""படம் வரையும் ஆர்வமும், அது பற்றிய அடிப்படை அறிவும் இருந்தால் மட்டுமே தஞ்சாவூர் ஓவியங்களை கற்றுக் கொள்ள முடியும். அந்தக் காலத்தில், மிகக் கடினமான வழிமுறைகள் இருந்தன. இப்போது ரொம்ப எளிமையாகிவிட்டது,'' என்றார்.

பயிற்சியாளர் புஷ்பலதாவின் குடும்பம், பரம்பரை பரம்பரையாக இந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ளது அறிந்து, அவரது தந்தை வெங்கடேச ராஜாவை (59) சந்தித்தோம்.

அவர் பேசியதாவது:இன்று அனைத்து தரப்பினரும் கற்றுக்கொண்டாலும், குலத்தொழில் போல வரும் விஷயம் இது. என் மாமா சாரங்கபாணி ராஜாவிடம் தொழில் கற்றுக் கொண்டேன்; என் பிள்ளைகளுக்கும் கற்றுக் கொடுத்தேன்.தஞ்சாவூர் ஓவியம் வரைவது எளிமையான விஷயம் அல்ல; நிறைய படித்திருக்க வேண்டும். அப்துல் கலாமில் இருந்து தயானந்த சரஸ்வதி வரை, தஞ்சாவூர் பாணியில் நான் வரையாத படம் இல்லை. இப்போது தான் பத்மா சுப்ரமணியம் படம் வரைந்து முடித்தோம். முன்னோர்கள் புண்ணியத்தில், 2002ம் ஆண்டுக்கான தேசிய விருது கிடைத்துள்ளது.பெருமிதத்தோடு முடித்தார் வெங்கடேச ராஜா.எவ்வளவு தான் வார்த்தைகளில் விவரித்தாலும், தஞ்சாவூர் ஓவியங்கள் வரையப்படுவதை நேரில் பார்க்கும்போது ஏற்படும் பிரமிப்பே அலாதியானது. ஓவியம் வரைவதற்கான ஆர்வம் நிறைய பேரிடம் அதிகரித்திருக்கிறது. தொழில்நுட்பத்தை போட்டு உடைப்பதற்கான தயக்கம், பாரம்பரிய ஓவியர்களிடம் இருக்கிறது. இரண்டுக்கும் நடுவில், தன் மவுசை அதிகரித்துக் கொண்டிருக்கின்றன தஞ்சாவூர் ஓவியங்கள்.

Advertisement
வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
முரளி நடராஜன் - திருமங்கலக்கோட்டை,ஒரத்தநாடு,இந்தியா
30-செப்-201010:05:41 IST Report Abuse
முரளி நடராஜன் வாழ்க சோழ சாம்ராஜ்யத்தின் புகழ்...
Rate this:
Share this comment
Cancel
சா. விஸ்வநாதன் - Pune,இந்தியா
27-செப்-201023:10:48 IST Report Abuse
சா. விஸ்வநாதன் தஞ்சை ஓவியம் போல் தஞ்சாவூர் தட்டும் நெஞ்சை அள்ளும் நேர்த்திகொண்டவை.பல வெளிநாட்டு உள்நாட்டு வி. ஐ .பிக்களுக்கு தமிழக அரசு சார்பில் தரும் பரிசுப்பொருட்களில் இந்த தஞ்சாவூர் தட்டு முக்கிய இடம் உண்டு. வாழ்க தஞ்சைக் கலை.!
Rate this:
Share this comment
Cancel
raj - Singapore,சிங்கப்பூர்
27-செப்-201020:52:34 IST Report Abuse
raj ஊர், உலகம் அறியட்டும் தஞ்சை தமிழனின் புகழ் ....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X