சிறை அதிகாரிகள் மீது கசாப் தாக்குதல்| | Dinamalar

சிறை அதிகாரிகள் மீது கசாப் தாக்குதல்

Updated : செப் 30, 2010 | Added : செப் 28, 2010 | கருத்துகள் (57)
Share
மும்பை : மும்பை தாக்குதல் வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள பாக்.,பயங்கரவாதி அஜ்மல் கசாப், சிறையில் அதிகாரிகளைத் தாக்கியது குறித்த வீடியோ காட்சிகள் அடங்கிய "சிடி'யை, மும்பை ஐகோர்ட்டில் மகாராஷ்டிரா அரசு நேற்று தாக்கல் செய்தது. மும்பை தாக்குதல் வழக்கின் முக்கிய குற்றவாளியான பாகிஸ்தானை சேர்ந்த அஜ்மல் கசாப்புக்கு, கீழ் கோர்ட் தூக்கு தண்டனை விதித்துள் ளது.

மும்பை : மும்பை தாக்குதல் வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள பாக்.,பயங்கரவாதி அஜ்மல் கசாப், சிறையில் அதிகாரிகளைத் தாக்கியது குறித்த வீடியோ காட்சிகள் அடங்கிய "சிடி'யை, மும்பை ஐகோர்ட்டில் மகாராஷ்டிரா அரசு நேற்று தாக்கல் செய்தது.

மும்பை தாக்குதல் வழக்கின் முக்கிய குற்றவாளியான பாகிஸ்தானை சேர்ந்த அஜ்மல் கசாப்புக்கு, கீழ் கோர்ட் தூக்கு தண்டனை விதித்துள் ளது. இந்த தண்டனையை உறுதி செய்வது தொடர்பான வழக்கு, மும்பை ஐகோர்ட்டில் நடந்து வருகிறது. இந்நிலையில், அரசு தரப்பு வக்கீல் உஜ்வல் நிகாம், மும்பை ஐகோர்ட்டில் நேற்று, வீடியோ காட்சிகள் அடங்கிய ஒரு "சிடி'யை தாக்கல் செய்தார்.


இதுகுறித்து வக்கீல் உஜ்வல் நிகாம், நீதிபதி ரஞ்சனா தேசாயிடம் கூறியதாவது: மும்பை, ஆர்தர் ரோடு சிறையில் அஜ்மல் கசாப் அடைக்கப்பட்டுள் ளான். கடந்த 1ம் தேதி, சட்ட விரோதமான தவறான நடவடிக்கைகளில் அவன் ஈடுபட்டிருந்தான். அப்போது சிறை அதிகாரிகள் அவனை கண்டித்தனர். ஆத்திரம் அடைந்த கசாப், சிறை அதிகாரிகளை தாக்கினான். இந்த காட்சிகள், சிறை வளாகத்தில் இருந்த ரகசிய கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளன. அந்த "சிடி'யைத் தான், தற்போது கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளேன். கசாப், கமாண்டோ பயிற்சி பெற்ற பயங்கரவாதி. அவனின் நடவடிக்கைகளால் சிறை அதிகாரிகளுக்கும், ஏன், அவன் உயிருக்கே கூட ஆபத்து ஏற்படும் நிலை ஏற்படும் அபாயம் உள்ளது. கசாப் சார்பில், தனது வக்கீலை தனியாக சந்தித்து பேச ஏற்பாடு செய்ய வேண்டும். அப்போது சிறை அதிகாரிகள் யாரும் இருக்கக் கூடாது எனக் கோரி, கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கு கோர்ட் அனுமதி தரக் கூடாது.இவ்வாறு உஜ்வல் நிகாம் கூறினார்.


இதுகுறித்து கசாபின் வக்கீல் அமின் சோல்கர் கூறுகையில், "ஆலோசனை நடத்தும்போது வக்கீலை தவிர, வேறு நபர்கள் உடன் இருந்தால், சில பிரச்னைகள் ஏற்படும் என, கசாப் கருதுகிறான். எனவே, தனியாக விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும்'என்றார். வக்கீலுடன் கசாப், தனியாக ஆலோசனை நடத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான விசாரணை, மும்பை ஐகோர்ட்டில் இன்று நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X