அரசு நிலத்தை ஆக்கிரமிப்பதாக கிறிஸ்தவ ஆலய நிர்வாகம் மீது புகார்| Dinamalar

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பதாக கிறிஸ்தவ ஆலய நிர்வாகம் மீது புகார்

Added : அக் 02, 2010

மதுராந்தகம் : அச்சிறுப்பாக்கத்தில் கிறிஸ்தவ ஆலய நிர்வாகம் குன்று புறம்போக்கு நிலத்தை அத்துமீறி ஆக்கிரமிப்பதாக கிராம நிர்வாக அலுவலர், போலீசில் புகார் செய்துள்ளார்.அச்சிறுப்பாக்கத்தில் வனத்துறை கட்டுப்பாட்டில் வஜ்ஜிரகிரி மலை உள்ளது. இதன் உச்சியில் பசுபதி ஈஸ்வரர் கோவில் உள்ளது. மலையின் ஒரு பகுதியாக அமைந்துள்ள குன்று புறம்போக்கு நிலம், வருவாய்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.இப்பகுதியில், மழைமலை மாதா என்ற பெயரில் கிறிஸ்தவ ஆலயம் உள்ளது. அரசு விதிமுறைகளுக்கு முரணாக அனுமதியின்றி இந்த ஆலயம் கட்டப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. தற்போதும் ஆலயத்தை விரிவுபடுத்தி கட்டடங்கள் கட்டப்படுகின்றன.ஆலய நிர்வாகம், பசுபதி ஈஸ்வரர் கோவிலுக்கு செல்லும் பாதையையும் ஆக்கிரமித்துள்ளது. இதற்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், பிரச்னை ஏற்பட்டது.வருவாய்த் துறையினர் இரு தரப்பினரையும் அழைத்து அவ்வப்போது அமைதி கூட்டம் நடத்தினர். கடந்த ஆண்டு நடந்த அமைதி கூட்டத்தின்போது மேற்கொண்டு ஆக்கிரமிப்பு செய்யமாட்டோம் என உறுதி அளித்தனர்.தற்போது அதையும் மீறி தொடர்ந்து கட்டடம் கட்டி வருகின்றனர். இது குறித்து வருவாய்த்துறை அதிகாரிகளிடம் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.அதைத் தொடர்ந்து, குன்று புறம்போக்கு நிலத்தில் கிறிஸ்தவ ஆலய நிர்வாகம் அத்துமீறி அரசு நிலங்களை ஆக்கிரமிப்பதை தடுக்கக் கோரி அச்சிறுப்பாக்கம் கிராம நிர்வாக அலுவலர் பூங்காவனம், அச்சிறுப்பாக்கம் போலீசில் புகார் செய்தார்.போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X