கீழக்கரை : ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் பிளஸ்1 மாணவர் முருகேசனுக்கு, புதுக்கோட்டையை சேர்ந்த ராவுத்தர் என்பவர் சுன்னத் செய்ததால், அவரை அங்குள்ள இளைஞர்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியை சேர்ந்தவர் வலம்புரி.இவர் குடும்பத்துடன் தூத்துக்குடியில் தங்கி கூலி வேலை செய்து வருகிறார்.இவரது மகன் முருகேசன்(17). உறவினரான சலவைத் தொழிலாளி முருகன் வீட்டில் தங்கி, ஏர்வாடி பள்ளியில் பிளஸ்1 படித்து வருகிறார்.தற்போது காலாண்டு விடுமுறையையொட்டி, இங்குள்ள புதுக்கோட்டையை சேர்ந்த ராவுத்தர் (30) என்பவரது சூப் கடையில் வேலை செய்து வந்தார்.
இந்நிலையில் ராவுத்தர் , தப்ஸ் முழக்கத்துடன் நேற்று முருகேசனுக்கு மாலை அணிவித்து தர்காவிற்கு ஊர்வலமாக அழைத்து சென்றுள்ளார். இதன்பின் வீட்டுக்கு அழைத்து வந்த அவர், சுன்னத் செய்பவரை வைத்து முருகேசனுக்கு சுன்னத் நிகழ்ச்சியை நடத்தி உள்ளார். தகவலறிந்த மாணவரின் உறவினர் முருகன், ராவுத்தர் வீட்டுக்கு சென்று பார்த்த போது, சுன்னத் செய்யப்பட்ட நிலையில் இருந்த முருகேசனை கண்டு அதிர்ச்சியடைந்தார். உறவினர்கள் ராவுத்தரை பிடித்து ஏர்வாடி இன்ஸ்பெக்டர் தங்கதுரையிடம் ஒப்படைத்து புகார் செய்தனர். தூத்துக்குடியில் உள்ள மாணவரின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.கீழக்கரை டி.எஸ்.பி.,பெருமாள் ராமனுஜம் மாணவரிடம் விசாரணை நடத்தினார்.
மாணவர் கூறியதாவது: பெற்றோர்கள் ஒப்புதல் அளிக்க மாட்டார்கள் என்ற காரணத்திற்காக யாரிடமும் தெரிவிக்காமல் சுன்னத் செய்து கொள்ள சம்மதித்தேன்.இது என்னுடைய சுய விருப்பத்தின்படி நடந்தது, என்றார்.