கொங்கு நாடு யாருக்கு: வரிசை கட்டும் பிரச்னைகள் | Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

கொங்கு நாடு யாருக்கு: வரிசை கட்டும் பிரச்னைகள்

Added : மார் 20, 2011 | கருத்துகள் (6)
கொங்கு நாடு யாருக்கு: வரிசை கட்டும் பிரச்னைகள்

கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி, கரூர், சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி மாவட்டங்கள் அடங்கிய கொங்கு மண்டலம் யார் பக்கம் என்ற கேள்வி அனலாய் அடிக்கிறது. இந்த மாவட்டங்களில் பெரும்பான்மை சமுதாயமாக விளங்கும், கவுண்டர் சமுதாயத்தினரின் ஆதரவு யாருக்கு கிடைக்கிறதோ அவர்கள் தான் வெற்றிக்கனியை பறிக்கவுள்ளனர். கொங்கு நாடு முன்னேற்றக் கழகம் தி.மு.க., அணியிலும், கொங்கு இளைஞர் பேரவை, மணிக்கவுண்டர் தலைமையிலான கொங்கு வேளாளக் கவுண்டர்கள் பேரவை ஆகியவை அ.தி.மு.க., பக்கவும் சாய்ந்துள்ளன. ஆடிட்டர் பாலசுப்பிரமணியன் தலைமையிலான அமைப்பினர், இது வரை யாருக்கும் ஆதரவு தெரிவிக்கவில்லை.
கடந்த சட்டசபைத் தேர்தலில் கொங்கு மண்டலம் அ.தி.மு.க., கோட்டையாக இருந்தது. அது இந்த முறையும் தொடரக்கூடாது என்ற எச்சரிக்கை உணர்வோடு, இரு பக்கமும் பேச்சு நடத்தி வந்த கொங்குநாடு முன்னேற்றக் கழகத்தை தன் வலையில் அவசரமாய் போட்டுக் கொண்டது தி.மு.க., இதன் பின் சுதாரித்த அ.தி.மு.க., தனியரசு, மணிக்கவுண்டர் ஆகியோரை தங்கள் பக்கம் சேர்த்துக் கொண்டது. தனியரசுக்கு ஒரு தொகுதியையும் ஒதுக்கிக் கொடுத்தது. கள் இறக்க அனுமதி, சாயக்கழிவு, விசைத்தறி நூல் விலை உயர்வு, மின் தடை, விவசாய பாதிப்பு, தென்னை விவசாயிகள் பாதிப்பு, ஜவுளித் தொழில் பாதிப்பு, ஜவுளிக்கு கலால் வரி விதிப்பு என, தி.மு.க., கூட்டணிக்கு எதிராக விவகாரங்கள் வரிசை கட்டுகின்றன.கவுண்டர் சமுதாயத்தை பழிவாங்கும் நோக்கோடு, "பி.சி.ஆர்.,' சட்டம் பயன்படுத்தப்படுவதை அரசு தடுத்து நிறுத்தவில்லை என்பது கட்சிகளைக் கடந்த கோபமாக, கொங்கு வேளாளக் கவுண்டர்கள் மத்தியில் நீடித்து வருகிறது.
கடந்த லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு, அமைப்பு ரீதியாக தங்கள் பலத்தை கொங்கு நாடு முன்னேற்றக் கழகம் வெளிப்படுத்தியது. அதே ஓட்டு வங்கி இந்த தேர்தலிலும் அக்கட்சிக்கு கிடைக்குமா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.கட்சி தொண்டர்கள் அ.தி.மு.க., அணியை விரும்பினர்; கட்சி நிர்வாகிகள் தி.மு.க., அணியை விரும்பினர். கடைசியில், தொண்டர்களின் விருப்பத்தை புறந்தள்ளிவிட்டு, நிர்வாகிகள் தங்களது விருப்பத்தை தற்போது தி.மு.க., கூட்டணி வாயிலாக நிறைவேற்றியுள்ளனர். இதனால், தொண்டர்கள் மத்தியில் கோபம் நீடிக்கிறது.பகுதி வாரியாக கொ.மு.க., நிர்வாகிகள் சமாதானப்படுத்த வேண்டிய அளவுக்கு நிலைமை, "சீரியஸ்' ஆகியுள்ளது. இந்த அதிருப்தியை மீறி, சமுதாய உணர்வு தலைதூக்குமானால், தி.மு.க., அணிக்கு ஓட்டுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
இது குறித்து கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் கூறியதாவது:கடந்த 2009ம் ஆண்டு கொ.மு.க., அரசியல் கட்சியாக துவங்கப்பட்டபோது, ஏற்பட்ட எழுச்சி இப்போது இல்லை. நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் பெரிய இடைவெளி வந்துவிட்டது. கடந்த சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தல்களில் இங்கு அ.தி.மு.க., தான் வெற்றி பெற்றுள்ளது.தி.மு.க., கூட்டணியில் சூலூர், பல்லடம், பொள்ளாச்சி, உடுமலை, நாமக்கல், பெருந்துறை, கோபி ஆகிய தொகுதிகள் கொ.மு.க.,விற்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த தொகுதிகளில் தி.மு.க., நின்றால் நிச்சயம் வெற்றி பெற முடியாது என்பதால் தான், கொ.மு.க.,விற்கு தி.மு.க., கொடுத்துள்ளது.
ஜாதி ஓட்டு மூலமாவது, இந்த தொகுதிகளை பிடிக்க முடியுமா என்று தி.மு.க., நினைக்கிறது. அந்த அளவுக்கு தி.மு.க.,வின் நிலை பரிதாபமாக உள்ளது.இது தவிர, கொ.மு.க.,விற்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் உள்ள தி.மு.க.,வினர், தொகுதி கைவிட்டுப் போனதால் கடும் அதிருப்தியில் உள்ளனர். இதுவும் தேர்தலில் எதிரொலிக்க வாய்ப்புள்ளது.இவ்வாறு தொழிலதிபர் தெரிவித்தார். - நமது சிறப்பு நிருபர் -

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X