சம்பவம் செய்தி

தமிழ்நாடு

திருப்பூரில் நாட்டு வெடிகுண்டு வெடித்து ஒருவன் பலி

Added : நவ 03, 2010 | கருத்துகள் (1)
Advertisement

திருப்பூர்: திருப்பூரில் நாட்டு வெடிகுண்டு தயாரித்தபோது, அக்குண்டு வெடித்ததில் ஒருவன் பலியானான்; அவன் வைத்திருந்த நாட்டு துப்பாக்கியை போலீசார் கைப்பற்றி, வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். திருப்பூர் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில் பிச்சம்பாளையம் ஸ்ரீநகர் பகுதி உள்ளது. இங்குள்ள நான்காவது வீதியில் சுகுமார் (50) என்பவருக்கு சொந்தமான குடியிருப்பு உள்ளது. இரண்டு போர்ஷன்களை கொண்ட இவரது வீட்டில், மேல்மாடியில் நான்கு வீடுகள், கீழ்பகுதியில் இரு வீடுகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. நேற்று பகல் 3.30 மணியளவில் கீழ் போர்ஷனில் இருந்த கடைசி வீட்டில் பயங்கர வெடிச்சத்தம் கேட்டது; அப்பகுதியில் இருந்த சில வீடுகளும் சத்தத்தில் அதிர்ந்தன. பட்டாசு வெடித்ததாக கருதிய சிலர், குறிப்பிட்ட வீட்டுக்குள் எட்டிப்பார்த்தபோது, அவ்வீட்டில் வாடகைக்கு தங்கியிருந்த பாஸ்கரன் (40), என்பவர் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளான். மணிக்கட்டுகள் இரண்டும் துண்டான நிலையில், வயிற்றுப்பகுதி கிழிந்து, குடல் வெளியே சரிந்து இறந்து கிடந்தான். வீட்டுக்குள் இருந்த பீரோ, முன்பகுதி நொறுங்கி காணப்பட்டது. வீட்டுச்சுவர்களும் பெயர்ந்து, "வென்டிலேட்டர்' கண்ணாடிகளும் உடைந்திருந்தன. பீதியடைந்த மக்கள், "தினமலர்' அலுவலகத்துக்கும், அனுப்பர்பாளையம் போலீஸ் ஸ்டேஷனுக்கும் தகவல் தெரிவித்தனர். திருப்பூர் டி.எஸ்.பி., ராஜா, வடக்கு இன்ஸ்பெக்டர் செட்ரிக் இமானுவேல் மற்றும் போலீசார் அப்பகுதிக்கு சென்று விசாரணை நடத்தினர். சம்பவ பகுதியை ஆராய்ந்தபோது, வெடிகுண்டு வெடித்திருப்பது தெரியவந்தது. தகவலறிந்த எஸ்.பி., அருண், நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டார். குடியிருப்பு பகுதியில் நடந்த இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டது. போலீசாரும் குவிக்கப்பட்டனர். மாலை 6.00 மணியளவில், கோவை மேற்கு மண்டல ஐ.ஜி., சிவனாண்டி, கோவை சரக டி.ஐ.ஜி., பாலநாகதேவி ஆகியோர் நேரில் வந்தனர். எஸ்.பி., அருணிடம் நடந்த சம்பவம் குறித்து விசாரித்தனர்; குண்டு வெடித்த பகுதியில் ஆய்வு நடத்தினர். ஐ.ஜி., சிவனாண்டி நிருபர்களிடம் கூறியதாவது: வெடிகுண்டு வெடித்த சம்பவத்தில் இறந்தவன் பெயர் ஜோசப் மகன் பாஸ்கரன்; வயது 40. திருநெல்வேலியை சேர்ந்தவன். ஏற்கனவே திருமணமாகி, பாளையங்கோட்டையில் முதல் மனைவி இருக்கிறார். திருப்பூரில் கீதா என்ற பெண்ணை இரண்டாவது திருமணம் செய்துள்ளான். இரண்டு மனைவிகளுடனும் தகராறு ஏற்பட்டதால், இங்கு தனியாக வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளான். கணவன், மனைவிக்குள் குடும்பத் தகராறு இருந்துள்ளது. மனைவியின் அண்ணன் இவனைப் பற்றி போலீசில் புகார் செய்து, ஸ்டேஷனில் விசாரித்துள்ளனர். கணவன், மனைவி இருவர் மீதும் ஸ்டேஷனில் புகார் உள்ளது. பட்டாசுகளில் இருக்கும் அம்மோனியா பவுடரை மொத்தமாக எடுத்து, நாட்டு வெடிகுண்டு தயாரிக்க முற்பட்டுள்ளான். அப்போது, வெடிகுண்டு வெடித்ததில் இரு கைகளின் மணிகட்டுகளும் துண்டாகி, அதே நேரத்தில் உயிரிழந்துள்ளான். குடித்துவிட்டு தகராறு செய்ததாக இவன் மீது வழக்கு உள்ளது. குடும்பத்தில் இருந்த தகராறு, முன்விரோதம் காரணமாக நாட்டு வெடிகுண்டு தயாரித்திருக்கலாம். என்ன நோக்கத்தில் நாட்டு வெடிகுண்டு தயாரித்தான் என்பது அடுத்தடுத்த விசாரணையில் தெரிய வரும். அவனது அறையை ஆய்வு செய்ததில், 48  குண்டுகளுடன் இரு துப்பாக்கிகள் இருந்தன. தாலிக்கொடி இருந்ததால், வழிப்பறி, திருட்டு உள்ளிட்டவற்றில் தொடர்புடையவனாக இருக்கலாம் என சந்தேகப்படுகிறோம். லைசென்ஸ், மொபைல் போன்கள் மூலம் இறந்தவன் பாஸ்கரன் என்ற உண்மையான அடையாளம் தெரிந்துள்ளது. இவ்வாறு, ஐ.ஜி., கூறினார். திருப்பூர் எஸ்.பி., அருண் கூறியதாவது: லட்சுமி நகரில் ஜிப், பட்டன், நூல் விற்கும் கடை வைத்திருப்பதாக தெரிகிறது. குடும்பத் தகராறில், மற்றவர்களை கொல்லும் நோக்கத்தில், நாட்டு வெடிகுண்டு தயாரித்தானா என்பது விசாரணையில் தெரிய வரும். முதலில், அவனது லைசென்ஸ், மொபைல் போன் தகவல் பொய்யாக இருக்கலாம் என கருதப்பட்டது. ஆனால், விசாரணையில் அது உண்மை என தெரிந்ததால், தீவிரவாத அமைப்பு சார்ந்தவனோ, எந்த இயக்கத்தையும் சார்ந்தவன் அல்ல என்பது உறுதியாகிறது. ஆனால், பாஸ்கரன் ரவுடியாக செயல்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது. இவ்வாறு, எஸ்.பி., அருண் கூறினார். திக்... திக்... திருப்பூர்: திருப்பூரில் நான்கு ஆண்டுகளுக்கு முன், போயம்பாளையம் பகுதியில் தர்மபுரியைச் சேர்ந்த சில நக்ஸலைட் தீவிரவாதிகள் பிடிபட்டனர். இரு ஆண்டுகளுக்கு முன், எம்.எஸ்., நகர் பகுதியில், இரண்டு பைப் வெடிகுண்டுகள், குப்பை பாறைக்குழியில் கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தின. கடந்த நான்கு மாதங்களாக, திருப்பூர் - ஈரோடு பகுதிகளுக்கு இடையில் ரயில் தண்டவாளங்களில் பாறாங்கற்கள் வைக்கப்பட்ட சம்பவங்கள் அரங்கேறின. "எதுவும் தெரியாது': கடந்த ஓராண்டாக வாடகைக்கு தங்கியுள்ள பாஸ்கரன் பற்றிய முழு விபரங்கள், அப்பகுதியில் உள்ள யாருக்கும் தெரியவில்லை. வீட்டு உரிமையாளர் சுகுமாரிடம் கேட்ட போது, ""அவனை பற்றி எனக்கு எதுவும் தெரியாது; வீட்டு புரோக்கர் ஒருவர் மூலம் வாடகைக்கு வந்தார்,'' என கூறினார். அப்பகுதியைச் சேர்ந்த யாருடனும் அதிக தொடர்பு வைக்காத பாஸ்கரன், காலையில் சென்றால் மதியம் உணவுக்கு வந்துள்ளான். பின், இரவில் வந்து தூங்கியுள்ளான். அவனே சமைத்து சாப்பிட்டுள்ளான். நண்பர்கள், உறவினர்கள் என யாரும் வீட்டுக்கு வந்ததில்லை, என அப்பகுதியில் உள்ள சிலர் தெரிவித்தனர். எஸ்.பி., அருண் கூறுகையில், ""வாடகைக்கு வீடு கொடுப்பவர்கள், அங்கு குடியேறுபவர்கள் பற்றி தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்; இதுபோன்ற தவறானவர்களுக்கு வீடு தருவதை தவிர்க்க வேண்டும் என பலமுறை போலீஸ் தரப்பில் வலியுறுத்தினாலும், மக்களுக்கு அதில் விழிப்புணர்வு வருவதில்லை,'' என்றார். முதலில் தகவல் தந்த  "தினமலர்' வாசகர்கள்: நாட்டு வெடிகுண்டு வெடித்த அடுத்த சில நிமிடங்களில், "தினமலர்' வாசகர்கள் தொலைபேசி வாயிலாக "தினமலர்' அலுவலகத்துக்கு உடனடியாக தகவல் அளித்தனர். அலுவலகத்தில் இருந்து அனுப்பர்பாளையம் போலீசாருக்கு உடனடியாக தகவல் பரிமாறப்பட்டது. சம்பவ பகுதிக்கும், முதல் நபராக "தினமலர்' போட்டோகிராபர் மற்றும் நிருபர்கள் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நடந்தது என்ன? அப்பகுதி மக்கள் கருத்து நாட்டு வெடிகுண்டு வெடித்த இடத்துக்கு எதிரே வசிப்பவர்கள் கூறியதாவது: ஓராண்டுக்கு மேலாக பாஸ்கரன் குடியிருக்கிறார்; யாருடனும் முகம் கொடுத்து பேசியதில்லை. எப்போதுமே, குல்லா அணிந்து முகம் சரியாக தெரியாதபடியே நடமாடிக் கொண்டிருப்பார். டி.வி.எஸ்., ஸ்டார் சிட்டி பைக்கில் வெளியே சென்று வருவார் (டி.என்., 39 ஏஎம் 8132). மதியம் 2.30 மணிக்கு பார்த்தபோது, சிறிய பெட்டியுடன் வெளியே இருந்து வீட்டுக்குள் சென்றார். சிறிது நேரத்தில் "படார்' என சத்தம் கேட்டது. சரியான புகை மண்டலம், மருந்து நெடி அதிகமாக இருந்ததால், குழந்தைகளும், பெரியவர்களும் வாந்தி எடுத்தனர். பத்து நிமிடம் கழித்துச் சென்று பார்த்தபோது, வீட்டுக்குள், பலத்த காயங்களுடன் அசைவில்லாமல் குப்புற கிடந்தார். கையில் ஒயர்களை சுற்றி வைத்திருந்தார். மதியம் 2.00மணி முதல் 4.00 மணி வரை இப்பகுதியில் மின்சாரம் தடைபடும் நேரம். அதனால், "டிவி' உள்ளிட்ட வேறெந்த பொருளும் வெடிக்க வாய்ப்பில்லை. மின்சாரம் தடைபட்டிருந்த நேரத்தில் ஏற்பட்ட "படார்' என்ற சத்தத்தால் படபடப்பாக உள்ளது, என்றனர். அருகில் உள்ள மளிகை கடை உரிமையாளர் கூறும்போது, "எப்போதாவது மட்டும் கடைக்கு வருவார்; தேவையான பொருளை மட்டுமே கேட்டு பெறுவார்; வேறு எதுவும் பேசவே மாட்டார். மதியம் கடையை கடந்து செல்லும்போது பார்த்தோம், கையில் சிறிய பெட்டி ஒன்றை எடுத்துச் சென்றார். முதலில், சிலிண்டர் வெடித்திருக்கும் என நினைத்தோம். மருந்து நெடியுடன் புகைமண்டலம் ஏற்பட்டதால் சந்தேகம் எழுந்தது,' என்றார். வீட்டு உரிமையாளர் கூறியதாவது: எங்களையும் சேர்த்து ஏழு பேர் இந்த லைனில் உள்ளனர். கடைசி வீட்டில் கடந்த ஓராண்டாக பாஸ்கரன் இருந்து வந்தார். பீடி, சிகரெட், மது என எந்த கெட்ட பழக்கமும் இல்லை. இதுவரை, அவர் மீது யாரும் குற்றச்சாட்டு கூறியதில்லை. திருநெல்வேலியில் உள்ள முதல் மனைவியை பிரிந்து, கீதா என்ற பெண்ணுடன் இரண்டாவது திருமணம் நடந்துள்ளது. அவரிடமும் இவருக்கு ஒத்துக்கொள்ளவில்லை. முன்பு, "ஜிப்' கடை வைத்திருந்ததாகவும், தற்போது, வெளியே வேலைக்குச் சென்று வருவதாகவும் கூறுவார். எப்போதும், வீட்டிற்கு வந்ததும், கதவை சாத்திக்கொள்வார். நாங்களும், குடும்பங்கள் வசிக்கும் பகுதியில், தனி நபர் தங்க வேண்டாம்; வேறு இடம் பாருங்கள் என கடந்த மூன்று மாதமாக கூறிக் கொண்டிருந்தோம். வேறு வீடு பார்ப்பதாவும், அதுவரை இங்கே இருப்பதாகவும் கேட்டிருந்தார். காலையில் வெளியே சென்றவர், மதியம் வந்தார்; வீட்டுக்குள் சென்ற சிறிது நேரத்தில் ஏதோ வெடித்து விட்டது. இப்படி வெடிகுண்டு தயாரிக்கும் அளவுக்கு நிகழும் என யாரும் எதிர்பார்க்கவில்லை, என்றார். தீர விசாரிப்பதே நல்லது! திருப்பூரில் வீடுகளை கட்டி வாடகைக்கு விட்டு, நிரந்தர வருவாய் பெறுவோர் அதிகமாக உள்ளனர். வாடகை வீடுகளில் பிறரை குடியமர்த்தும்போது, பெரும்பாலானவர்கள் தீர விசாரித்து கொடுக்கின்றனர். இருப்பினும் சிலர், ஒரு மாதம் கூட வீடு காலியாக இருக்கக் கூடாது; வாடகை வருவாய் குறையக்கூடாது என்றெண்ணி, யாராவதுகேட்டால் உடனே கொடுத்து விடுகின்றனர்.  குடும்பத்துடன் இருப்போருக்கு வாடகைக்கு கொடுப்பதை காட்டிலும், திருமணம் ஆகாத இளைஞர்கள் மற்றும் தனி நபர்களை குடியமர்த்தும்போது தீவிரமாக விசாரிக்க வேண்டும். மாவட்டம் மற்றும் மாநகராட்சி நிர்வாகங்கள் இது குறித்து பொதுமக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.


Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X