சேலம் : "பனை, தென்னை மரங்களை பாதுகாக்க, தமிழகம் முழுவதும் பேரணி நடத்தப்படும்,' என, தமிழ்நாடு கள் இயக்கம் அறிவித்துள்ளது. சேலத்தில், தமிழ்நாடு கள் இயக்க ஆலோசனை கூட்டம் நடந்தது. தமிழ்நாடு விவசாயிகள் சங்க கூட்டமைப்பு பொருளாளர் பாலசுப்பிரமணியம், கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி, மாநில அமைப்பாளர் கதிரேசன் உள்பட பலர் பேசினர். பனை, தென்னை மரங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. இவற்றை பாதுகாக்க கோரி, 2012 ஜனவரியில் பேரணி நடத்தப்படுகிறது. கன்னியாகுமரியில் பேரணி துவங்கி, சென்னையில் முடிவடையும். கழிவு நீரை கடலுக்கு கொண்டு செல்வது நடக்கக்கூடிய காரியம் அல்ல. இதற்கு ஒரே தீர்வு, உள்நாட்டு தேவைக்காக மட்டுமே தமிழகத்தில் சாயப்பட்டறைகள் இருக்க வேண்டும். ஏற்றுமதி செய்வதற்காக இயங்கும் சாயப்பட்டறை மற்றும் மாசுபடுத்தும் ஆலைகளை தடை செய்ய வேண்டும். சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும்.
சிக்கனமான நீர் நிர்வாகத்தை மேற்கொள்ள கால்வாய், அணை, ஏரி, குளம் மற்றும் ஓடை புறம்போக்கு ஆக்கிரமிப்புகளை அரசு அகற்றி எல்லையை கண்டறிந்து நிரந்தரமான கற்கள் நட வேண்டும். விளை பொருளுக்கு, விலை கிடைக்க செய்ய அரசு முன் வர வேண்டும். முல்லை, பெரியாறு, காவிரி, பாலாறு போன்ற ஆற்று நீர் பங்கீடு தொடர்பான தகராறு தொடர்ந்து இருந்து வருகிறது. மத்திய அரசு இதில் தலையிட்டு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்பன உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி கூறியதாவது:கள் இறக்குவதற்கு விதித்திருக்கும் தடையை நீக்குவதற்கு நிதி ஒதுக்கீடோ, மின்சார தேவையோ இல்லை. ஆகஸ்ட் 4ம் தேதி தமிழக சட்டபேரவை கூட்டத்தொடர் தொடங்கவுள்ளது. பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. இதில், கள்ளுக்கு விதித்திருக்கும் தடை நீக்கம் பற்றிய அறிவிப்பு இருக்கும் என, நம்பிக்கை வைத்துள்ளோம். கள்ளுக்கு விதித்திருக்கும் தடையை அரசு நீக்கினால், 10 லட்சம் பனை, தென்னை தொழிலாளர் குடும்பத்தினர் பயன் பெறுவர். கள்ளை பதப்படுத்தி இரண்டாண்டு கெடாத வகையில் டப்பாக்களிலும், பாட்டில்களிலும், பாலிதீன் பாக்கெட்டுகளிலும் அடைத்து, நட்சத்திர விடுதிகள், விமான நிலையங்களில் சந்தைப்படுத்துவதன் மூலம் தமிழகத்துக்கு அதிகளவு அந்நிய செலவாணி கிடைக்கும்.இந்தியாவில் கற்பக விருட்சம், காமதேனு என சொல்லப்படும் பனை மரங்கள் வேகமாக வெட்டப்பட்டு வருகின்றன. பனை, தென்னை மரங்களை பாதுகாப்பது அரசின் கடமை. இவ்வாறு அவர் கூறினார்.